| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 309 |
மனுச் சோழன் மனுச் சோழன் சோழநாட்டுத் திருவாரூரில் நீதி தவறாமல் அரசாண்டான்; ஏழை எளியவரும் நீதி பெறுவதற்காக ஆராய்ச்சி மணியொன்றைக் கட்டிவைத்தான்; அந்த மணியில் நீண்டகயிற்றைக் கட்டி அரண்மனை வாயிலிலிருந்து இழுத்து மணி அடிக்க வாய்ப்பாகக் கட்டி வைத்தான். இவன் நடு நிலைமையோடு நீதியாகச் செங்கோல் செலுத்திய காலத்தில். இவனுடைய ஒரே மகன், தேரை ஒட்டிக்கொண்டு தெருவில் செல்லும்போது, பசுவின் இளங்கன்று ஒன்று துளளியோடித் தேர்ச் சக்கரத்தில் அகப்பட்டு இறந்துவிட்டது. அதைக் கண்ட தாய்ப்பசு கதறி அழுது, அரண்மனை வாயிலுக்கு வந்து ஆராய்ச்சி மணிக் கயிற்றை இழுத்தது. அதனால், மணியோசை கேட்க, அரசன் வந்து பார்த்து பசுவின் இளங்கன்று தன் மகனுடைய தேர்ச் சக்கரத்தில் அகப்பட்டு இறந்ததை அறிந்து தன் அமைச்சரிடம் தன் மகனைத் தேர்ச் சக்கரத்தில் மடியும்படி செய்ய ஆணையிட்டான். அமைச்சர் அதனைச் செய்ய மனமின்றித் தற்கொலை செய்து கொண்டார். அதனை அறிந்த மனுச்சோழன் தானே தேரைச் செலுத்தி அதன் சக்கரத்தில் தன் மகனை அகப்படுத்தின் கொன்றான்.18 இதைக் கண்டு வியந்த தேவர்கள், அவனிடம் வந்து மெச்சிப் புகழ்ந்து, இறந்து போன அமைச்சரையும் அரசகுமாரனையும் உயிர்ப்பித்துக் கொடுத்தனர் என்பது இவனைப்பற்றிய புராணக் கதை. இந்தப் புராணக் கதையைப் பெரியபுராணத்தில் காணலாம்.19 கி. மு. முதல் நூற்றாண்டில் இலங்கையை அநுராதபுரத்திலிருந்து அரசாண்ட சோழநாட்டுத் தமிழனாகிய ஏலேல சிங்கனும் மனுச் சோழனைப் போலவே தன் மகன் பசுவின் கன்றைத் தேர்ச் சக்கரத்தில் அகப்படுத்திக் கொன்ற குற்றத்திற்காகத் தானே தன்னுடைய தேரின் சக்கரத்தில் தன்னுடைய ஒரே மகனை அகப்படுத்திக் கொன்றான் என்று மகாவம்சம் என்னும் நூல் கூறுகிறது. ஆனால், தேவர்கள் வந்து இறந்து போன மகனை உயிர்ப்பித்துக் கொடுத்ததாக அந் நூல் கூறவில்லை.20
18. புறம். 39 : 5 - 6 19. திருத்தொண்டர் புராணம், திருநகரச் சிறப்பு 20. Mendis, G. C. ‘Ceylon’ in A Comprehensive History of India, Vol. 2., The Mauryas and Satavahanas, p. 579 |