பக்கம் எண் :

310மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

மனுச் சோழனின் புராணக் கதையைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.21 மணிமேகலைக் காப்பியம் ‘மகனை முறைசெய்த மன்னவன்’22 என்று கூறுகிறது.

தொடித்தோட் செம்பியன்

தூங்கெயில் எறிந்த

வானம் என்பது ஓர் ஊர். (இந்த ஊர் வானியாற்றுப் பகுதியில் இருந்தது என்று பெயரமைதி நோக்கிக் கொள்ளலாம்.) அவ் வூரில் கடவுள் அஞ்சி என்பவன் ஒரு கோட்டை கட்டியிருந்தான். அந்தக் கோட்டையின் கதவு மேலிருந்து தொங்கும்படி அமைக்கப் பட்டிருந்தது (இக்காலத்துச் சுருள் கதவு போன்றது). அதனால், அது தூங்கும் எயிற்கதவம் எனப்பட்டது. இதனை வண்டன் என்னும் பெருஞ்செல்வன் காவல் புரிந்து வந்தான்.23 (இந்தக் கோட்டை அரசக் கருவூலப் பாதுகாப்பாக அமைந்திருந்தது எனலாம்.) ‘தூங்கு எயிற் கதவம்’ என்பது ‘தூங்கெயில்’ என்று சுருக்கமாக வழங்கப்பட்டது.

தொடித்தோட் செம்பியன் என்று சிறப்பித்துக் கூறப்பட்ட சோழ அரசன் இந்தத் தூங்கெயில் கோட்டையைத் தாக்கி அழித்தான். இதனால், ‘தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்’ என்று வழங்கப்பட்டான். இவன் இக் கோட்டையை அழித்தது இவனது பேராற்றலை வெளிப்படுத்தும் செயலாகும்.24

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இந்தச் செம்பியனின் வழிவந்தவன் என்று குறிப்பிடப்படுகிறான்.

தூங்கெயில், ‘தூங்கெயில் கதவம்’ என்று விளக்கிக் காட்டப் பட்டுள்ளது. இக் கோட்டைக் கதவை அழித்த இச் சோழன. ‘நற்றோர்ச் செம்பியன்’ என்றும் வழங்கப்பட்டான்.25 இவன் உறையூரைத் தலை நகராகக் கொண்டு ஆண்ட அரசன்.26 செம்பியன் என்னும் அரசன் கழுமலம் என்னும் ஊரைத் தாக்கி வென்றான்.27


21. சிலப். 20 : 53 - 55, 29 ; அம்மானை வரி 2

22. மணிமே. 22 : 210

23. ‘தூங்கெயில் கதவம்’ (பதிற். 31 : 19)

24. புறம். 39 : 6

25. சிறுபாண். 81 - 82

26. நற். 236 : 8

27. ௸ 234 : 7