பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்321

பெருநற்கிள்ளிக்கு உறையூர் சொந்த ஊர் அன்று. (அவனது சொந்த ஊர் போர்வை.) எனவே, உறையூரில் இருந்தவர்களில் சிலர் போர்வை அரசன் வெற்றி பெற்றான் என்று கூறினர். சிலர் தன் அரசன் தித்தனே வெற்றி பெற்றான் என்பாராய், போர்வை அரசன் பெற்றது வெற்றி அன்று என்று கூறினர். உண்மையில் வென்றவன் போர்வை அரசனே ஆவான்.11

நாடு

‘போர்வைக்கோ’ என்னும் அடைமொழியுடன் இவன் கூறப் படுவதால் போர்வை என்பது இவன் ஆட்சிபுரிந்த நாடு எனத் தெரிகிறது. போர்வை நாட்டின் தலைநகர் போர் என்பதும் போர் நகரின் புறப்பகுதி போர்ப்புறம் என்னும் பெயர் பெறும் என்பதும். அது திரு என்னும் அடைமொழி பெற்றுத் திருப்போர் புறம் என அமையும் என்பதும் சொல் ஒப்புமையால் பெறப்படும் பொருத்தமான முடிவுகள்.

போர், சோழனின் படைத்தலைவன் பழையன் இருந்து அரசாண்ட ஊர். போர்ப்புறம், வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் போரிட்டு மாண்ட ஊர். திருப்போர்ப் புறம் செங்கணானுக்கும், கணைக்கால் இரும்பொறைக்கும் போர் நடைபெற்ற இடம். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் காவிரி ஆறு பாயும் பகுதியில் இருந்தது என்பதைப் பழையன் வரலாற்றில் காணலாம். இப்போதுள்ள திருப்பூர் மேலே குறிப்பிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராக இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.

தோற்றப் பொலிவு

கழல் காலில் விளங்கியது; கறுகறுத்த மீசை முகத்தில் விளங்கியது;12 சோழர் குடிக்குரிய ஆத்தி மாலையை அவன் அணிந் திருந்தான்.13 போர்க் காலங்களில் அவனுக்கு நல்ல உணவுகூடக் கிடைக்கவில்லை; புல்லரிசிச் சோறுதான் கிடைத்தது. எனினும் அவனது போர்த்திறம் குறையவில்லை.14

காதல்

கடல் வாணிகர் ‘நாய்கன்’ என்று குறிப்பிடப்பட்டனர். கண்ணகியின் தந்தை பெயர் ‘மாநாய்கன்’ இதற்கு ஒரு சான்று. பெருங்கோழியூரில்


11. ௸ 85 : 7 - 8

12. புறம். 83 : 1

13. ௸ 82 : 6

14. ௸ 84 : 1