| 322 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
(உறையூரில்) வாழ்ந்த கடல்வாணிகன் ஒருவன் ‘பெருங்கோழி நாய்கன்’ என்று அறிமுகமாகியிருந்தான். அவனது மகள் நக்கண்ணையார். கண்ணின் சிரிப்பைக் காட்டும் கண்ணகி என்னும் பெயரைப் போன்றதே கண்ணின் நலத்தைக் காட்டும் நக்கண்ணையார். போர்வை அரசன் பெருநற்கிள்ளி பொருநன் படையை எதிர்த்துப் போரிடுகையில் கண்டு அவன்மீது காதல் கொண்டாள். கிள்ளி போரில் கண்ணும் கருத்துமாய் இருந்தான். இவளுடைய நிலை அவனுக்குத் தெரியாது. உறையூர்ப் போர் முடிந்ததும் ஆமூரின் போர் தொடங்கி விட்டது. உறையூர் போர்வைக்கோவின் ஊர் அன்மையால், அவன் திரும்ப உறை யூருக்கு வரவும் இல்லை. எனவே, நக்கண்ணையார் காதல் என்றும் ஒருதலைக் காதலாய் முடிந்து விட்டது; இருதலையும் (ஆணிடத்திலும் பெண்ணிடத்திலும்) தோன்றி மணக்க வாய்ப்பின்றி முடிந்தது. தித்தன் உறவு தித்தன் உறையூர் அரசன். இவன் போர்வைக்கோவின் உதவியை நாடவும் இல்லை; அவன் உதவுவதை விரும்பவும் இல்லை. எனினும் பொருநனை முறியடிப்பதில் தானே வலிய வந்து போர்வைக்கோ உதவினான். இந்த உதவியை வெற்றிக்குப் பின்னரும் பாராட்டவில்லை. உறையூர்ப் போருக்குப் பின் ஆமூர்ப் போர் மூண்டது. இந்தப் போர் தித்தன் மல்லனைத் தாக்கிய போர். போர்வைக்கோ முன்புபோலவே தித்தன் பக்கம் வலிய வந்து நின்று போராடினான். இவன் போரிட்ட பாங்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ‘இதனையேனும் தித்தன் காண்பானாக! விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காண்பானாக!’ என்று புலவர் பாடியுள்ளார். தித்தன் புலவர் கூற்றைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. தித்தனுக்கும் போர்வைக்கோவுக்கும் இத்தகைய முரண்பட்ட உறவையே நாம் காண்கிறோம். சிலர் போர்வைக்கோவைத் தித்தனின் மகன் என்று கூறுகிறார்கள். அவர்கள் கூற்றுக்குப் பொருத்தமான சான்று இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பின் தந்தை மகனிடையே இருந்த இந்த மனமுறிவு கோப்பெருஞ்சோழனுக்கும் அவனது மக்களுக்கும் இடையே தோன்றிய மன முறிவை ஒப்பிட்டு எண்ண வைக்கும். கோப்பெருஞ்சோழன் வரலாற்றில் மக்கள் (மகன்மார்) தவறு செய்கிறார்கள். தித்தன் வரலாற்றில் தந்தை தவறு செய்கிறான் என முடியும். |