பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்323

பெருநற்கிள்ளி - 2

இவன் மதம்கொண்ட யானைமீது நமக்கு அறிமுகமாகிறான். மதங்கொண்ட யானையை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அந்த யானை கருவூர்த் தெருவழியாக, சோழனது கட்டுக்கு அடங்காமல் ஓடியது. அப்போது கருவூர் வேண்மாடத்தில் இருந்த உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் கண்டு அருகில் இருந்த சேர அரசன் அந்துவனிடம் நிலைமையை விளக்கினார். அவன் யானை மீதிருந்து படையெடுத்து வருவது போலத் தோற்றமளித்தாலும் அவன் உண்மையில் படையெடுத்து வரவில்லை என்பதையும் விளக்கினார்.15 முடிவு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. சேரனும் யானையின் மதத்தை அடக்க உதவி செய்திருக்கலாம். சோழன் பிழைத்துத் திரும்பியிருக்கலாம். இதற்கு மாறாகவும் நிகழ்ந்திருக்கலாம்.

நாடு

முடித்தலை என்னும் நாட்டை ஆண்டமையால் இவன் ‘முடித்தலைக்கோ’ என்று கூறப்பட்டிருக்கலாம். முடித்தலை என்பது இப்போதுள்ள ‘கொடுமுடி’ எனலாம். இந்தக் கொடு முடிக்கும் கருவூருக்கும் இடையில் உள்ள தூரம், கருவூருக்கும் உறையூருக்கும் இடையில் உள்ள தூரத்தை நோக்க மிகக் குறைவு. எனவே, மதங்கொண்ட யானைமீது ஏறிக் கருவூரில் நுழைந்த நிகழ்ச்சி இயல்பாய் முடிகிறது. எனினும் உறையூர் ஏணிச்சேரியில் வாழ்ந்த புலவர் முடமோசியாருக்கு இந்தச் சோழன் நன்கு அறிமுகமாகி யிருத்தலை எண்ணும்போது இவனை உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசன் என்று கொள்வதே பொருத்தம். ஆயினும், இவனது தொடக்க கால ஆட்சி, அதாவது அரியணையேறும் முதல் நிகழ்ச்சி இளவரசன் என்ற நிலையிலேனும் கொடுமுடியில் நிகழ்ந்திருக்கக் கூடும்.16


15. புறம் 13

16 இவ்வாறு கொள்ளின் இந்தச் சோழன் சேர அரசனின் கருவூருக்கு மேற்கில் ஆண்டான் என்று முடியும். சோழ அரசன் சார்பில் பழையன் என்பவன் போர் (திருப்பூர்)ப் பகுதியை ஆண்டு கொண்டிருந்ததையும் அந் நாட்டை ஆண்ட சோழ அரசன் ஒருவன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி என்று பெயர் பெற்றிருந்ததையும் எண்ணும்போது கொடுமுடியில் இருந்துகொண்டு சோழ அரசன் ஒருவன் அரசாண்டான் என்று கூறுவது இயல்பாகவே முடியும். அன்றியும் அந்துவன் என்னும் சேர அரசனின் தலைநகரான கருவூர் மேற்குக் கடற்கரையை அடுத்த கருவூராகவும் இருக்கலாமன்றோ?