பக்கம் எண் :

324மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

பெருநற்கிள்ளி - 3

(வேல்பஃறடக்கை)

கழாத்தலையார்

சேர அரசன் நெடுஞ்சேரலாதனுக்கும் இவனுக்கும் போர் நடைபெற்றது. போர்ப்புறம் என்ற இடத்தில் நடைபெற்ற அந்தப் போரில் இரண்டு அரசர்களும் போர்க்களத்திலேயே மாண்டனர்;17 இவனைப் ‘பெருநற்கிள்ளி’ என்றும், ‘பெருவிறற் கிள்ளி’ என்றும் சுட்டுவது மரபு.

போரும் வீழ்ச்சியும்

சேர அரசன் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும் இவனுக்கும் போர் நடந்தது. இந்த நெடுஞ்சேரலாதன் செங்குட்டுவன் தந்தை என்பதை அவனது வரலாற்றில் காணலாம் போர், ‘போர்ப்புறம்’ என்னுமிடத்தில் நடந்தது.18

போர் அவலக் காட்சியில் முடிந்தது. யாருக்கும் வெற்றியில்லை; தோல்வியும் இல்லை. நாற்படையும் களத்தில் அழிந்தன. தம் படை அழிந்தமை கண்டு இரண்டு பெரு வேந்தர்களும் தாமே நேரடிப் போரில் ஈடுபட்டனர். போர்ப்பறை முழங்க இருவருக்கும் கடுமையான போர் நடந்தது. இறுதியில் இருவரும் போர்க்களத்திலேயே மாண்டனர்.19

இவர்களுடைய மனைவிமார் கைம்மைக் கோலத்துடன் பச்சைக் கீரையை மட்டும் தின்றுகொண்டு, தண்ணீரிலேயே குளித்துக் கொண்டு வாழ விரும்பாமல் போர்க்களம் வந்து தம் கணவர்மார்பைத் தழுவியராய் மாய்ந்தனர்.20 எங்கும் அவலம்.


அந்துவனுக்குச் சமகாலத்துச் சேர அரசனான உதியஞ்சேரல் மேற்குக் கடற்கரைப் பகுதியில் அரசாண்டான் என்று கொள்வதால், அந்துவனது தலைநகரான கருவூரைக் கொங்குநாட்டுக் கருவூர் என்று கருதுகிறோம்.

17 புறம். 368

18 இந்த ஊர் ‘திருப்போர்புறம்’ என்றும் சுட்டப்படும். செங்கணானுக்கும் கணைக்கால் இரும்பொறைக்கும் இவ்விடத்தில்தான் போர் நடந்தது

19 புறம் 62 : 7 - 9

20 ௸ 62 : 14 - 15