பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்327

அரசியலில் பயிற்சி பெறும்படி அமர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை இவர்கள்மீது கோப்பெருஞ்சோழன் போர் தொடுத்தான் என்பதிலிருந்து அறியலாம்.

தந்தை தன் மக்கள் இருவரையும் எதிர்த்துப் போர் தொடுப்பதை, நாட்டின் நல்லாட்சியை விரும்பிய சான்றோர்கள் விரும்பவில்லை. புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் இத்தகைய எண்ணத்தோடு கோப்பெருஞ்சோழனை நேரில் கண்டு, போரைக் கைவிட்டு விடும்படி அறிவுரை கூறிப் பாடினார்.

போரில் மக்கள் வெற்றி பெற்றுவிட்டால் தந்தை எண்ணம் நிறை வேறாது. தந்தையின் அரசாட்சி மக்களுக்குக் கிடைக்கும். மக்கள் தோற்றுவிட்டால், தந்தை தான் வென்ற அரசாட்சியைத் தனக்குப் பின் யாருக்குத் தரமுடியும்? தோற்ற அந்த மக்களுக்குத்தாமே தரவேண்டும். இது பிற அரசர்கள் பழிக்க ஏதுவாகும் என்னும் கருத்துகளைப் புலவர் எடுத்துரைத்தார். கோப்பெருஞ்சோழன் புலவரது அறிவுரைகளை ஏற்றுப் போரைக் கைவிட்டான். இதற்குப்பின் தன் மகன்மாருக்கு எதிராகத் தான் தொடர்ந்து ஆட்சி புரிவதையும் அவன் விரும்பவில்லை. அவன் வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தான்.

வடக்கிருத்தல்

வடக்குத் திசையை நோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர்துறப்பது வடக்கிருத்தல் ஆகும். கோப்பெருஞ்சோழன் இவ்வாறு வடக்கிருந்தான்.

ஆற்றின் இடையே இருந்த நிலப்பகுதியில், புள்ளி புள்ளியாக இருந்த அருநிழலில் உட்கார்ந்துகொண்டு அவன் வடக்கிருந்தான்.6

இவன் வடக்கிருப்பதற்கு ஓர் இடம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் வந்து அமர்ந்த அரசன் மற்றும் ஓர் இடம் தன் நண்பர் பிசிராந்தையாருக்கு அமைத்து ஒதுக்கவேண்டும் என்று கூறினான்.7 பிசிராந்தையார் பாண்டிய நாட்டின் தென்கோடியில் வாழ்ந்து வந்தார்.


6. ௸ 219 : 1 - 2 உறையூருக்கு அருகில் காவிரி ஆறும், உய்யக்கொண்டான் ஆறும் ஒன்று கூடுகின்றன. இந்த இடத்தில் இக்காலத்தில் ஒரு மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் உள்ள இடத்தில்தான் அக்காலத்தில் கோப்பெருஞ்சோழன் அருநிழலில் அமர்ந்து உயிர்விட்டான் என்பர்.

7. புறம். 216 : 11 - 12