பக்கம் எண் :

326மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

யிருக்கலாம். பின் செல்வாக்கினைப் பெற்று உறையூர்க் கோட்டையைத் தாய உரிமை முறையிலோ வேறு முறையிலோ கைப்பற்றியிருக்கலாம். இந்தப் பொத்தனூருக்குக் கிழக்கிலுள்ள இடையாற்றுப் பகுதியில் கரிகாலனின் ஆட்சி நடைபெற்றிருக்கக் கூடும் என்பதை அவனது வரலாற்றில் காண்போம். திருப்பூர்ப் பகுதியில் பெருநற்கிள்ளி ஒருவனின் (போர்வைக்கோ) ஆட்சி தொடங்கப் பெற்றிருக்கலாம் என்று அவனது வரலாற்றில் கண்டோம். எனவே, இந்தப் பொத்தனூரில் கோப்பெருஞ்சோழனின் ஆட்சி தொடங்கி யிருக்க முடியும்.

சேரனோடு போர்

சேர அரசன் இளஞ்சேரல் இரும்பொறைக்கும் கோப்பெருஞ் சோழனுக்கும் போர் மூண்டது. போரில் சோழன் தோற்றான்.2

சங்க காலத்தில் காவிரிக்குத் தெற்கேயிருந்த கொங்குநாட்டுப் பகுதியைப் (தென்கொங்கு) பொறையர் குடியைச் சேர்ந்த சேர அரசர்கள் ஆண்டுவந்தனர். அவர்களது தலைநகர் கருவூர்,3 வஞ்சிமுற்றம்4 ஆகியவை. இவர்கள் காவிரிக்கு வடக்கில் இருந்த வடகொங்கு நாட்டிலும் தங்களது செல்வாக்கைப் பரப்ப முயன்றனர். இந்த முயற்சியின் விளைவுதான், சோழர்களோடும் அதியமானோடும் நடத்திய போர்கள். இவற்றை ஆங்காங்கே விரிவாகக் காணலாம். இவற்றையெல்லாம் நாம் இங்கு நினைவுகூர்வதன் நோக்கம் இந்தப் பொத்தனூர் எங்கு அமைந்திருந்தது எனத் தெளிவதற்கும், போரின் காரணங்களை உய்த்துணர்வதற்குமே ஆகும்.

மகன்மார்மீது போர் தொடுத்தல்

கோப்பெருஞ்சோழனுக்கு ஆணமக்கள் இருவர் இருந்தனர். அவர்கள்மீது இவனுக்குக் கசப்பு உணர்வு தோன்றியது. கசப்பு உணர்வுக்குக் காரணம் புலப்படவில்லை. சிற்றினச் சேர்க்கையால் அறிவு பேதுற்று, தந்தைபால் பகைமைகொண்டு போருக்கு எழுந்தனர் போலும்.5 இந்தக் கசப்பு உணர்வு படையெடுப்பில் முடிந்தது. இரண்டு மகன்மாரும் இருவேறு இடங்களில் இருந்து கொண்டு அரசாண்டு


2. பதிற். பதி. 9 : 3 - 6

3. திருச்சி மாவட்டம்

4. கோவை மாவட்டம்

5. புறம் 213 : 4