266 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
காலத்திலும் இருந்து வருகிறது. கண்ணகி (கண்ணழகி), நக்கண்ணை, காமக்கண்ணி, கயற்கண்ணி, மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, அஞ்ச னாட்சி முதலான பெயர்களைச் சூட்டுவது அக்காலத்தும் இக்காலத்தும் உள்ள மரபு. கோவலனுடைய மனைவியின் பெயரும் கண்ணழகியே. வையாவிக் கோப் பெரும் பேகன் தன்னுடைய மனைவியை விட்டுப் பிரிந்து இன்னொருத்தியோடு வாழ்ந்து வந்தான். இதனை யறிந்த புலவர்கள் வள்ளலாகிய இவனிடஞ் சென்று இவனுடைய மனைவியோடு சேர்ந்து வாழும்படி வேண்டினார்கள். கண்ணகி காரணமாக வையாவிக் கோப் பெரும்பேகனைப் பெருங்குன்றூர் கிழார் (புறம் 146) கபிலர் (புறம் 143) பாணர் (புறம் 144, 145) அரிசில்கிழார் (புறம் 146) முதலானோர் பாடினார்கள். வையாவி நாட்டு அரசர்களில் பேர் போன இன்னொரு வேள் அரசன் பெயர் பதுமன் என்பது. இவனை வேள் ஆவிக் கோமான் பதுமன் என்றுங் கூறுவர். வையாவிக் கோமான் பதுமனுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தேவி என்று பெயரிட்டான். அந்தப் பெண்களைச் சேர அரசர் குலத்தில் மணஞ் செய்து கொடுத்தான். மூத்த மகளைக் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனுக்கு மணஞ் செய்து கொடுத்தான். இளைய மகளைப் பெறையர் என்னும் சேர மன்னர் மரபைச் சேர்ந்த செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு மணஞ் செய்து கொடுத்தான். செல்வக் கடுங்கோ வாழியாதன் கொங்கு நாட்டையரசாண்டான். குடக்கோ நெடுஞ்சேர லாதனும் செல்வக் கடுங்கோ வாழியாதனும் தாயாமி முறைத் தமயன் தம்பியர் ஆவர். வையாவிக்கோ பதுமனுடைய மகளிரான தமக்கை தங்கையரை இந்தத் தமயன் தம்பிமார் திருமணஞ் செய்து கொண்டு வாழ்ந்தார்கள். எனவே இவர்கள் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். ஒவ்வொரு பெண்களும் இரண்டிரண்டு மக்களைப் பெற்றெடுத்தனர். அவர்களுடைய பெயர் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் (4-ம் பத்தின் தலைவன்), ஆடுகோட்பாடுச் சேரலாதன் (6-ம் பத்தின் தலைவன்), பெருஞ்சேரல் இரும்பொறை (8-ம் பத்தின் தலைவன்) குட்டுவன் இரும்பொறை என்பவை. இவர்களுடைய வழிமுறை கீழே காட்டப்பட்டுள்ளது. |