4. தமிழ்நாட்டு வாணிகர் தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருந்த படியால் தமிழர் இயற்கையாகவே கடற்பிரயாணஞ் செய்வதிலும் கப்பல் வணிகம் செய்வதிலும் தொன்று தொட்டு ஈடுபட்டிருந்தார்கள். மேலும் கடற்கரையாகிய நெய்தல் நிலங்களில் வாழ்ந்தவர்கள் நாள்தோறும் கடலில் சென்று மீன்பிடித்து வந்து வாழ்க்கையை நடத்தினார்கள். ஆகையால் கடலில்போய் வருவது தமிழர்களுக்குப் பழங்காலம் முதல் இயற்கையான தொழிலாக இருந்தது. கடலில் நெடுந்தூரம் கப்பலில் போகவும் வரவும் பழங்காலத்திலேயே பழகினார்கள். கரிகால் சோழனுடைய முன்னோனான ஒரு சோழன் கடற்காற்றின் உதவியினால் கடலில் நாவாய் ஓட்டினான். ‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!’ என்று புறநானூற்றுச் செய்யுள் (66) கூறுகிறது. பழைய காலத்துப் பாண்டியன் ஒருவன் தன் அடி அலம்பக் கடலில் நின்றான் என்றும், கடலில் தன் வேலை எறிந்து அதை அடக்கினான் என்றும், கூறப் படுகிறான். இதன் கருத்து என்னவென்றால், அவன் கடலை அடக்கிக் கடலில் நாவாய் செலுத்திக் கடற் பிரயாணத்தை எளிதாக்கினான் என்பது. இவற்றிலிருந்து கடலில் பிரயாணம் செய்வதைத் தமிழர் ஆதிகாலத்திலிருந்து நடத்தினார்கள் என்பது தெரிகின்றது. கடலில் கப்பலோட்டுவது அக்காலத் தமிழருக்குக் கைவந்த செயலாயிற்று. அவர்கள் கடல் கடந்து போய் வாணிகம் செய்தார்கள். கடலில் சென்று வாணிகஞ் செய்தது போலவே தரை வழியாக வும் பல நாடுகளுக்குப் போய் வாணிகம் செய்தார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் தரை வழியாக வட இந்திய நகரங்களுக்கும் போய் வாணிகஞ் செய்தார்கள். பெரிய வாணிகம் செய்தவர்களுக்குப் பெருங்குடி வாணிகர் என்பது பெயர். அயல்நாடுகளுக்கு வாணிகஞ் செய்யச் சென்றவர் ஒன்று சேர்ந்து கூட்டமாகச் சென்றார்கள். வணிகக் கூட்டத்துக்கு வணிகச் சாத்து என்பது பெயர். |