பக்கம் எண் :

160மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

மூன்றாம் அங்கம்

முதற் களம்

இடம் : பாண்டியன் அரண்மனை.

காலம்: காலை.

ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை)

(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஜீவகன்: ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன்
பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக்
குரியன முற்றும் ஒருங்கே முடித்து
வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும்
 5உபாயமும் யாவும் உடையான்; அதனால்
அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்!
குடிலன்: பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக்
கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து
இயற்கை யறியா இளையோ னாகிலும்
 10முயற்சியின் மதியின் முதியோன் எனவே
மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ!
வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார்.
நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம்
கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்;
 15என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால்
மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம்.
அன்றியும் புருடோத் தமனெனும் அரசன்
கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும்.


சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி - பழமொழி. கன்றும் - கோபிக்கும்.