பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்169

>
   தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும்
போற்றுதங் குறிப்பிற் கேற்றதோர் முயற்சியும்
  30பார்த்துப் பார்த்துத் தம்கண் பனிப்ப.
ஆர்த்தெழு மன்பினால் அனைத்தையும் கலந்துதம்
என்பெலாம் கரைக்குநல் இன்பம் திளைப்பர்.
தமக்கூண் நல்கும் வயற்குப யோகம்,
எனப்பலர் கருதும் இச்சிறு வாய்க்கால்
  35செய்தொழில் எத்தனை விசித்திரம்! ஐயோ!
அலைகடல் மலையா மலையலை கடலாப்
புரட்டிட வன்றோ நடப்பதிச் சிறுகால்!
பாரிதோ! பரற்களை நெறுநெறென் றுரைத்துச்
சீரிய தூளியாத் தெள்ளிப் பொடித்துத்
  40தன்வலிக் கடங்கிய மண்கல் புல்புழு
இன்னதென் றில்லை; யாவையும் ஈர்த்துத்
தன்னுட் படுத்தி முந்நீர் மடுவுள்
காலத் தச்சன் கட்டிடும் மலைக்குச்
சாலத் தகும்இவை எனவோர்ந் துருட்டிக்
 45கொண்டு சென்று இட்டுமற் “றையா!
அண்ட யோனியின் ஆணையின் மழையாய்ச்
சென்றபின் பெருமலைச் சிகர முதலாக்
குன்றுவீ ழருவியாய்த் தூங்கியும், குகைமுகம்
இழிந்தும், பூமியின் குடர்பல நுழைந்தும்,


கண்பனிப்ப - கண்ணீர் துளிக்க. சீரிய Jளி - நுண்ணிய மணல். வெடித்து - பொடியாக்கி. ஈர்த்து - இழுத்து, முந்நீர் மடு - கடலாகிய நீர்நிலை. காலத்தச்சன் - காலமாகிய தச்சன். சாலத் தகும் - பெரிதும் பொருந்தும். ஓர்ந்து - உணர்ந்து. அண்டயோனி - சூரியன்.

34 முதல் 59 அடிகள், நீரின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. ஆற்றில் ஓடுகிற நீர் கற்களை உடைத்துப் பொடியாக்கித் தன்னிடம் அகப்பட்ட பொருள்களை எல்லாம் மணல் கல்லுடன் அடித்துக் கொண்டு போய்க் கடலில் சேர்க்கிறது. மீண்டும் அந் நீரே சூரிய வெப்பத்தினால் ஆவியாக மேலே சென்று மேகமாகி மழையாகப் பெய்து அருவியாகவும் ஆறாகவும் சுனையாகவும் ஊற்றாகவும் வாய்க்காலாகவும் ஓடி ஓய்வின்றி இராப் பகலாக உழைக்கின்றது என்னும் இயற்கையின் விசித்திரத்தைக் கூறுகின்றன.