பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்209

 230திருமொழி மறுத்தென் சிற்றறி வினையே
பெரிதெனக் கருதலோ, அலதவர் பேணிய
இவ்வழி நம்மதிக் கெட்டா விடினும்
செவ்வி திதுவெனத் தெளிதலோ தகுதி?
இப்படி யேயாம் இவ்வுல கின்நிலை.
 235அற்பமும் அதிலிலை ஐயம். நமதுமற்
றெய்ப்பினில் வைப்பா யிருந்தபே ரருளைக்
கைப்படு கனியெனக் கண்டபின், உலகில்
எப்பொரு ளையுமிப் படியே இவ்வருள்
தாங்கிடும் என்பதில் சமுசயம் என்னை?
 240இல்லா மாயை என்செய வல்லதாம்?
எல்லாம் அவனருள் அல்லா தில்லை.
என்னனு பவமிது. மன்னிய இவ்வருள்
தன்னிடை மூழ்கித் தானெனல் மறந்து,
நெருப்பிடை இழுதென நெக்குநெக் குருகி
 245இருப்பவர் பிறர்க்காய் இராப்பகல் உழைப்பர்
ஒருபயன் கருதார். அருள்கரு துவதென்?
அகிலமும் தாங்கும் அருளிலோர் அரங்கமாச்
சகலமும் செய்வர். அஃதவர் சமாதி.
எங்கெலாம் துக்கம் காணினும் அங்கெலாம்
 250அங்கம் கரையநின் றரற்றி “ஐயோ!
எம்மையும் காத்த இன்னருள் இவரையும்
செம்மையிற் காக்க” எனமொழி குளறி
அழுதுவேண் டுவதே அன்றி
விழுமிய முத்தியும் வேண்டார் தமக்கே.     2

(சுந்தரமுனிவரும் நடராஜரும் வர; கருணாகரர், நிஷ்டாபரர் இருவரும் எழுந்து வணங்க)

சுந்தர: 255எல்லாம் நடேசரே! உமதுபே ரருளே!
அல்லா தென்னால் ஆகுமோ? சுருங்கை
இத்தினம் எப்படி முடியும்நீர் இலரேல்?


எய்ப்பினில் வைப்பு - இளைத்த காலத்தில் உதவுவதற்கு வைத்த பொருள், சேமநிதி. கைப்படு கனி - உள்ளங்கை நெல்லிக்கனி. சமுசயம் - ஐயம். இழுது - நெய். சமாதி - பிரமத்தோடு மனம் ஒன்று பட்டிருக்கும் நிலை. அரற்றி - வாய்விட்டுக் கதறி.