பக்கம் எண் :

56மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

கூடல் மாநகர் குடிவிட் டிப்பால்
பீடுயர் நெல்லையில் வந்தபின் பேணி
அமைத்தன னிவ்வரண். இமைப்பறு தேவருங்
35 கடக்கரும் இதன்றிறம் கடைக்கண் சாத்தி
ஆசிநீ யருள நேசித்தேன் நனி.
எத்தனை புரிதான் இருக்கினும் எமக்கெலாம்
அத்த!நின் அருள்போல் அரணெது? குடில!
இவ்வழி யெழுந்தநம் இறைவர், கடிபுரி
40 செவ்விதின் நோக்கக் காட்டுக தெரிந்தே,
குடிலன்: ஊன்வரு பெருநோய் தான்விட அடைந்த
அன்பரின் புறஇவ் வருளுருத் தாங்கி
வந்தருள் கிருபா சுந்தர _த்தீ!
நீயறி யாததொன் றில்லை; ஆயினும்,
45 உன்னடி பரவி யுரைப்பது கேண்மோ,
தென்பாண்டி நாடே சிவலோக மாமென
முன்வாத வூரர் மொழிந்தனர். அன்றியுந்
தரணியே பசுவெனச் சாற்றலும் மற்றதிற்
பரதமே மடியெனப் பகர்வதுஞ் சரதமேல்,
50 பால்சொரி சுரைதென் பாண்டி யென்பது
மேல்விளம் பாதே விளங்கும். ஒருகால்
எல்லா மாகிய கண்ணுதல் இறைவனும்
பல்லா யிரத்த தேவரும் பிறரும்
நிலைபெற நின்ற பனிவரை துலையின்

அத்த தலைவ கேண்மோ - கேட்பீராக, வாதவூரர் - திருவாதவூரிற் பிறந்தவர்; மாணிக்கவாசகர். “தென்பாண்டி நாடே சிவலோகம்” மாணிக்கவாசகர் திருவாக்கு. “தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே”, “மீளா அருள்புரிவான் நாடு என்றும் தென்பாண்டி நாடே தெளி” என்று திருவாசகத்தில் கூறப்பட்டிருப்பது காண்க.

48 முதல் 51 வரையில் உள்ள அடிகளில், நிலஉலகத்தைப் பசுவாகவும், பரதகண்டத்தை (இந்தியா தேசத்தை அப்பசுவின் மடியாகவும், தென்கோடியாகிய பாண்டிநாட்டை மடியில் உள்ள காம்பாகவும் உருவகம் செய்கிறார்.

தரணி - பூமி; நிலம். பரதம் - பாரத தேசம், சரதம் - உண்மை. சுரை-காம்பு, சுரத்தலையுடையது என்னும் பொருள் உள்ளது. கண்ணுதல்-நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான். பனிவரை-இமயமலை. துலை-தராசு.