கஜேந்திரவரதர் திருக்கோவில் - திருக்கவித்தலம்
வரலாறு

முன்னொரு காலத்தில் இந்திராஜு ம்னன் என்னும் மன்னன் மிகச்
சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு
அவன் பூசையில் ஒன்றியிருக்கும்போது இவ்வுலகம் மறந்த நிலையில்
இருப்பான். அது போழ்து தம்மைக் காண்பதற்கு யார்வரினும் அவரைக்
காண்பதுமில்லை. அவர்களை ஒரு பொருட்டாக கருதுவதுமில்லை.

இவ்விதம் பக்தியில் ஈடுபட்டிருந்த ஒரு தினத்தில் துர்வாச முனிவர்
அவனைக் காண வந்தார். வெகு நாழிகை கழித்தும் இந்திராஜு ம்னன்
தனது பக்திக் குடிலைவிட்டு வெளிவந்த பாடில்லை. பொறுத்துப்
பொறுத்துப் பார்த்த துர்வாசர் இறுதியில் குடிலுக்குள் நுழைந்து
அம்மன்னன் முன்னிலையில் போய் நின்றார். இந்நிலையிலும் சற்றும்
கண்திறந்து பாராது பக்தியிலேயே லயித்திருந்தான் இந்திராஜு ம்னன்
மிகவும் சினங்கொண்ட முனிவர் உரத்த குரலில் சாபமிட்டார்.

நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற
மமதை அதிகமிருப்பதாலும், நீ விலங்குகளிலேயே மதம் பிடித்த
யானையாகக் கடவாய் என்று சபித்தார்.

நிலையுணர்ந்த மன்னன் தன் தவறறிந்து மன்னிப்பும் கேட்டு
சாபவிமோசனம் வேண்டி நின்றான். சினந்தணிந்த முனிவர் நீ
யானையாக இருந்தாலும் அப்போதும் திருமால் மீது பக்திகொண்ட
கஜேந்திரனாகத் திகழ்வாய். ஒரு முதலை உன் காலைக் கவ்வ நீ
மஹாவிஷ்ணுவை யழைக்க உனக்கு மோட்சம்மும் சாபவிமோசனமும்
உண்டாகுமென்றார்.

இவ்வாறிருக்க கூஹு என்னும் அரக்கன் ஒருவன் தண்ணீரில் மூழ்கிக்
குளிப்போரின் காலைப்பிடித்து இழுத்து     துன்புறுத்துவதையே
தொழிலாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் அகத்தியர் குளித்துக்
கொண்டிருக்கும் போது அவரின் காலைக் கவ்வினான். சினமுற்ற
அகத்தியர் நீ ஒரு முதலையாகக் கடவாய் என்று சபித்தார். அவனும்
விமோசனம் வேண்ட நீ கஜேந்திரன் என்னும் யானையின்
காலைக்கவ்வும் காலம் வரும்போது திருமாலின் சக்ராயுதம் பட்டு
சாபவிமோசனம் உண்டாகுமென்றார்.

இந்தக் கபிஸ்தலத்தில் உள்ள கோவிலின் முன்பு (கிழக்கு திசையில்)
அமைந்துள்ள கபில தீர்த்தம் என்னும் குளத்தில் ஒரு நாள் கஜேந்திரன்
நீரருந்த இறங்கும்போது முதலை கவ்வ, யானை பிளிற, கருட
வாகனத்தில் வந்த மகாவிஷ்ணு தம் சக்ராயுதத்தால் முதலையைக்
கொன்று யானைக்கு மோட்சமளித்ததாக வரலாறு.

    “மூலமே யென்ற கரிமுன் வந்திடர்
    தொலைத்து நீலமேகம் போல் நின்றான்”

என்பது பிள்ளைப் பெருமாளையங்காரின் வாக்கு. மகாபாரதம் இத்தல
வரலாற்றைப் பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

    கூற்றுரல் கராவின் வாயின்றழைத்த
    குஞ்சர ராஜன் முன் அன்று -
    தோற்றிய படியே தோற்றினான் - முடிவும்
    தோற்றமும் இலாத பைந்துழவோன்”

                என்பது பாரதம்.

குஞ்சரம் என்றால் யானை, கரா என்றால் முதலை.

முன் பின்