சத்தியகிரிநாதப்பெருமாள் கோவில் திருமெய்யம்

மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்
    கொய்யார் குவளையும், காயாவும் போன்றிருண்ட
மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்
    கையானை, கை தொழாக் கையல்ல கண்டோமே - (2016)
            - பெரிய திருமொழி 11-7-5

என்று     திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற இத்தலம்
புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் நடு மையத்தில்
அமைந்திருக்கிறது.     பசும்பொன்     மாவட்டத்தில்     உள்ள
திருப்பத்தூரிலிருந்தும் இவ்வூருக்குச் செல்லலாம்.

பிரம்மாண்ட புராணம் இத்தலத்தைப் பற்றி மிகவும் விவரித்துப்
பேசுகிறது. இதில் நாரதருக்கும் சிவபெருமானுக்கும் நடந்த
ஸம்பாஷணையாக 10 அத்தியாயங்களில் இத்தலத்தின் வரலாறு
பேசப்படுகிறது.

சத்தியகிரியென்றும், சத்திய சேத்ரமென்றும் புராணம் புகழக்கூடிய
இத்தலத்தில் ஆதிசேடன், சந்திரன், சத்திய மகாமுனி போன்றோர்
தவமிருந்து நற்பெயர் பெற்றுள்ளனர். ஒரு காலத்தில் மதுரையை
ஆண்டபுருரவச் சக்ரவர்த்தியும் இங்குவந்தே மோட்சம் எய்தினார்.

ஆதிசேடன் தவம்

தன்னிடம் தீய குணங்களே மிகுந்திருப்பதால் தனக்கு ஸத்வ குணம்
வேண்டுமென்று ஆதிசேடன் எம்பெருமானை ஒரு நாள் வேண்டினான்.
அவ்வாறாயின் என்னைக் குறித்துக் கடுந்தவஞ்செய்து நீ அந்த
வரத்தைப் பெற்றுக்கொள் என்று பெருமாள் உரைத்ததும் ஆயிரம்
தலைகளுடனும் பல மைல் நீளமுடையதுமான தனது உடம்பை 5
தலைகளுடனும், ஒரு பாக நீளத்தால் அளவிடத்தக்கப் பருமனுடனும்,
ஒரு பனை மரத்தின் அளவிற்கு நீண்ட சரீரத்தையும் எடுத்துக்
கொண்டு பூமிக்குள்ளாகவே துளைத்துக் கொண்டு வந்து இவ்விடம்
வெளிப்பட்டான். ஆதிசேடன் வந்த மார்க்கம் பள்ளமானபடியால் அது
ஸர்ப்ப நதியாயிற்று (பாம்பாறு) அவன் வெளிப்பட்ட இடம் சத்திய
சேத்ரமாயிற்று. இங்கிருந்த சத்தியகிரிக்கு அருகில் உள்ள சத்திய
புஷ்கரணியில் நீராடி எம்பெருமானைக் குறித்து கடுந்தவஞ்
செய்யலானான் ஆதிசேடன்.

தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு ஹயக்ரீவ வடிவத்தில்
(குதிரைமுகம் கொண்ட வித்தைகட்கு தேவதையான அவதாரம்)
தோன்றினார். உடனே ஆதிசேடன் தனது உடலால் ஆசனமும் செய்து,
5 தலைகளால் பாத்தியம், அர்க்கியம், ஆசமனீயம் முதலியன கொடுத்து
தன் சிரங்களாகிய புஷ்பங்களால் பூஜித்து, வாசம் மிகுந்த
வாய்க்காற்றினால் தூபம் கொடுத்து, தன் சிரத்தில் உள்ள
ரத்தினங்களால் தீபாராதனை செய்து நாக்குகளால் ஆலவட்டம் வீசி,
படங்களால் குடைபிடித்து மானசீகமாக அன்ன நிவேதனம் செய்து
ஆராதித்தான். இதனால் மிக மகிழ்ந்த மகாவிஷ்ணு ஆதிசேடனுக்கு
ஸத்வகுணத்தை அளித்து, அவனது கோர குணத்தை மாற்றியது
மட்டுமன்றி இன்னும் வேறு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார்.
அதற்கு ஆதிசேடன் திருப்பாற்கடலில் என் மீது சயனித்துள்ளவாறு
இங்கும் சயனித்துக் காட்சியருள வேண்டுமென்று கேட்க,
அவ்வண்ணமே ஆகட்டும் என்றார். பின்னர் அர்ச்சாரூபமாய் மாறிய
பின்னர் இருவரும் திருப்பாற்கடலெய்தினர்.

சந்திரன் தவம்

அத்திரி என்ற முனிவரின் கற்புடை மனைவி அனுசூயை என்பவள்
மும்மூர்த்திகளே தமக்குப் புத்திரர்களாக வாய்க்க வேண்டுமென
கடுந்தவமியற்றினாள். அதன் பயனாக மஹாவிஷ்ணு அம்சமாக
தத்தாத்திரேயர் என்ற தவநிதியாகவும், கோபாம்சக் குணம் கொண்ட
ருத்ரன் அம்சமாக துர்வாசர் என்ற கோபம் மிகுந்த முனிவராயும்,
பிரம்மாவின் அம்சமாக சந்திரனும் வந்து பிறந்தனர். தக்க பருவம்
அடைந்ததும் அத்திரி முனிவர் மூவரையும் அழைத்து மந்திர உபதேசம்
செய்து தவஞ்செய்ய அனுப்பினார். துர்வாசர் கைலாய மலையினையும்,
தத்தாத்திரேயர் இமயமலையினையும், சந்திரன் ஸத்திய கிரியையும்
அடைந்தனர். பிரம்மனுக்கு திருமாலைக் குறித்து தவம் செய்வதே
எப்போதும் பொழுது போக்கான விஷயம். எனவே பிரம்மனின்
அம்சமாக வந்த சந்திரன் இச்சத்திய கிரியை அடைந்து திருமாலைக்
குறித்துக் கடுந்தவம் செய்யலானான். திருமால் வாமன வடிவில்
சந்திரனுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டுமென்று வினவினார்.
இத்தலத்தில் எனக்கு காட்சி கொடுத்த மாதிரியே சந்திர
மண்டலத்திலும் தாங்கள்     எழுந்தருளி     நித்திய     வாசம்
செய்யவேண்டுமென சந்திரன் வேண்டவே ராஜ ஹம்ஸம் வெண்
தாமரையில் வசிப்பதுபோல் திருமால் அங்கு எழுந்தருளி நித்திய வாசம்
செய்யலானார்.

பின்