6.2 யசோதர காவியம்

ஐஞ்சிறு காப்பியங்களில் யசோதர காவியம், உதயண குமார காவியம், நாக குமார காவியம் ஆகிய மூன்று மட்டுமே ‘காவியம்’ என்ற பெயரால் சுட்டப்படுகின்றன. எஞ்சியுள்ள சூளாமணி, நீலகேசி இரண்டும் அவ்வாறு சுட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் ‘காவியம்’ என்று பெயர் பெற்ற இம்மூன்றின் காப்பியக் கட்டமைப்பு மற்றும் கலைச் சிறப்பு சூளாமணி, நீலகேசி ஆகியவற்றை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நூல் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. யசோதரன் சரிதம் தமிழில் வேறு எந்த நூலிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடமொழியில் யசோதரன் கதை பல படைப்புகளில் இடம் பெறுகின்றது. சைன புராணங்களில் மகாபுராணம் சிறப்புடைய ஒன்று. அதில் தீர்த்தங்கரர் இருபத்து நால்வர், அரசர்கள் பன்னிருவர், பலதேவர் ஒன்பது பேர், வாசுதேவர் ஒன்பது பேர், பிரதி வாசுதேவர் ஒன்பது பேர் என அறுபத்து மூவர் வரலாறு இடம்பெறும். இம்மகாபுராணத்தைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஜினதேவரும், கி.பி. 10ஆம் நூற்றாண்டில் மல்லிசேனரும் எழுதினர். மற்றொரு புராணமான உத்தர புராணத்தை ஜினசேனரின் மாணாக்கர் குணபத்திர முனிவர் எழுதினார் என்பர். இந்த உத்தர புராணத்தில்தான் முதல் முதலாக யசோதரன் சரிதம் கூறப்படுகிறது.

6.2.1 நூல் வரலாறு

யசோதரன் சரிதத்தை வடமொழியில் எழுதியவர்களில் மூவர் குறிப்பிடத்தக்கவர்கள். ஒருவர் சோமதேவ சூரி என்பார். இவர் யகஸ்திலகம் என்ற பெயரில் சம்பு காவியம் படைத்துள்ளார். ‘யசோதர சரிதம்’ என்ற பெயரில் வாதிராஜ சூரியும், அரிபத்திரர் புட்பதந்தரும் காவியம் படைத்துள்ளனர். பூர்ண தேவர் என்பாரும் யசோதர காவியத்தை வடமொழியில் படைத்துள்ளதாக அறியப்படுகிறது. வடமொழியில் வாதிராஜ சூரியின் காவியத்தைத் தழுவியே தமிழில் ‘யசோதர காவியம்’ படைக்கப் பட்டுள்ளதாகக் கூறுவர்.

6.2.2 நூலாசிரியர்

தமிழில் ‘யசோதர காவியம்’ படைத்த ஆசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. வடமொழியில் நாக குமார காவியம் படைத்த மல்லிசேனரே தமிழிலும் அக்காவியத்தைப் படைத்தது போல, வடமொழியில் ‘யசோதர சரிதம்’ படைத்த வாதிராஜ சூரியே தமிழிலும் இக்காவியம் படைத்திருக்க வேண்டும் என்று வேங்கட ராமையங்கார் கருதுகிறார்.

புட்பதந்தன் சொன்ன பொருள்சேர் கதைதன்னைத்
திட்பமாய்ச் செந்தமிழில் செப்பினான் - நட்புடையார்
நண்ணார் இவர்என்ன நாடாக் கொடைக்கையர்
வெண்ணாவல் ஊருடைய வேள்

(நட்புடையார் நண்ணார்.....கொடைக்கையர் = வேண்டியவர்,  வேண்டாதவர் என்று பார்க்காத வள்ளல்)

என்ற ஏட்டுப் பிரதியில் காணப்படும் வெண்பாவால் இந்நூலாசிரியர் வெண்ணாவல் என்ற ஊரில் வாழ்ந்த வள்ளல் வேள் என்பது தெரிய வருகிறது. ‘வேள்’ என்பது கூட இவரது குடிப்பெயராகவே அறியப்படுகிறது. இவர் புட்பதந்தரின் ‘யசோதர சரிதம்’ என்ற நூலைத் தழுவியே இக் காவியம் படைத்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இங்கு இடம் பெறும் வெண்ணாவலூர் திருவானைக்காவாக இருக்கவேண்டும் என்பர். திருவானைக்கா திருச்சிக்கு அருகில் உள்ளது.

6.2.3 காப்பியக் கதையும் கட்டமைப்பும்

இக்காப்பியம் ஐந்து சருக்கங்களைக் கொண்டது. பாடல்கள் 330. சில பதிப்புகளில் 320 பாடல்கள் மட்டுமே காணப்படுகின்றன. அபயருசி என்பான் தய நாட்டு மன்னன் மாரி தத்தனுக்குத் தன் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சைன நெறிப்படுத்தி நற்கதி பெறச் செய்ததே காப்பியக் கதை.

ஒளதய நாட்டின் தலைநகரான இராசமாபுரத்திலிருந்து நாட்டை ஆண்ட அரசன் மாரிதத்தன். அவன் ‘சண்டமாரிதேவி’க்குப் பலியிட அபயருசி, அபயமதி என்ற இரு சிறுவர்களைக் கொண்டுவரச் செய்தான். அவர்கள் அச்சம் சிறிதுமின்றித் தெய்வத்தை வாழ்த்தியபடி அரசன் முன் சென்றனர். அரசன் வாளை ஓங்கி அவர்களை வெட்டிப் பலியிட முற்பட்டபோது, நகர மக்கள் “அரசன் வாழ்க” என்று அவர்களைச் சொல்லுமாறு பணித்தனர். அபயருசி புன்முறுவலுடன் “இம்மன்னன் பலியிடும் தீய தொழிலை விட்டு விட்டு அருள் கொண்டு வாழ்வானாக” என்று வாழ்த்தினான். அரசன் அவர்களைப் பலியிடுவதை நிறுத்தி, அவர்தம் அஞ்சாமை கண்டு மகிழ்ந்தான். அபயருசி மன்னனுக்குத் தன் பூர்வ வரலாற்றை எடுத்துரைக்கிறான்.

அவந்தி நாட்டு உஞ்சயினி நகர அரசன் அசோகன்; அவன் மனைவி, சந்திரமதி. அவர்தம் மகனே யசோதரன்; அவன் அமிர்தமதியை மணந்து யசோமதி என்ற மகனைப் பெற்றான். தன் தலையில் நரைமுடி கண்ட அசோகன் துறவியாகிறான். தொழுநோயாளனான யானைப் பாகன் அட்டபங்கன், மாளவ பஞ்சம் என்ற இசைபாடுகிறான். அந்த இசையில் மயங்கிய யசோதரன் மனைவி அமிர்தமதி அட்டபங்கனுடன் உடலுறவு கொள்கிறாள். இதனை நேரில் கண்ட யசோதரன் துறவு மேற்கொள்ள விழைகிறான். மனைவியின் கூடா ஒழுக்கத்தை மறைத்துத் தீக்கனாக் கண்டதாகத் தன் தாயிடம் கூறுகிறான். தாய் மாரிக்குப் பலியிட வேண்டுகிறாள். உயிர்க்கொலை செய்ய விரும்பாத யசோதரன் மாக்கோழியைப் (மாவால் செய்த கோழி) பலியிடுகிறான். அவனது கெட்ட காலம் அம்மாக் கோழிக்குள் புகுந்திருந்த ஒரு தெய்வம் துடிதுடித்து இறந்துபடுகிறது. இதனால் துன்புற்ற அரசனின் கருத்தறிந்த அவன் மனைவி அமிர்தமதி, அவனையும் அவன் தாய் சந்திரமதியையும் நஞ்சு கலந்த லட்டைக் கொடுத்துக் கொன்றுவிடுகிறாள். பின் இவர்கள் இருவரும் மயிலும் நாயுமாகப் பிறந்து அரசன் யசோமதி அரண்மனையில் வாழ்கின்றனர். அப்போது மயிலாக வாழும் யசோதரன் தன் மனைவியின் கள்ளக் காதலனான யானைப்பாகனின் கண்ணைக் கொத்த, அவன் மயிலைக் கடித்து விடுகிறான். நாய் கடித்ததாக அரசனிடம் பொய் சொல்கிறான். ஆத்திரமடைந்த மன்னன் நாயைக் கொல்ல அது பாம்பாகப் பிறக்கிறது. மயில் இறந்து முள்ளம் பன்றியாய்ப் பிறக்கிறது. முள்ளம் பன்றி பாம்பைக் கடிக்க, அது இறந்து முதலையாய்ப் பிறக்கிறது. முள்ளம் பன்றியைக் கரடி கொல்ல அது மீனாய்ப் பிறக்கிறது. முதலை மீனை விழுங்க விரட்டிய போது காவலரால் பிடிபட்டுக் கொல்லப்படுகிறது. அம்முதலை பெண் ஆடாகப் பிறக்கிறது. மீன் அந்தணரால் கொல்லப்பட்டு அப்பெண் ஆட்டின் குட்டியாகப் பிறக்கின்றது. பின் தாய் ஆடு எருமையாய்ப் பிறந்து அரசனுடைய குதிரையைக் கொன்று விடுகிறது. அரசன் எருமையைக் கொல்ல, எருமை கோழியாகப் பிறக்கிறது. குட்டி ஆட்டையும் அமிர்தமதி கொல்ல - அதுவும் கோழியாகப் பிறக்கிறது. கோழிகளை வளர்த்தவன் ஒரு முனிவனிடம் அறம் கேட்டபோது கோழிகளும் உடனிருந்து கேட்டன. அறவுரை கேட்ட மகிழ்ச்சியில் கோழிகள் கூவ, அங்குத் தூங்கிக் கொண்டிருந்த அரசன் தன் தூக்கத்திற்கு இடையூறாக அமைந்த கோழிகளைக் கொல்ல, அவை முனிவரிடம் அறம் கேட்ட அறப்பயனால், அரசன் தேவி புட்பாவலிக்கு இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கின்றன. அக்குழந்தைகளே அபயருசி, அபயமதியாவர்.

புடபாவலி மீண்டும் கருவுற்று யசோதரன் என்ற மகனைப் பெறுகிறாள். மக்கள் மூவரும் வளர்கின்றனர். வேட்டைக்குச் சென்ற மன்னன் யசோமதி எதிரில் சுதத்தர் என்ற முனிவரைக் காண்கிறான். அவர் திகம்பரக் கோலத்தில் (ஆடையின்றி) இருக்கிறார். வேட்டையில் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு அந்த முனிவரை முதலில் கண்டதுதான் காரணம் என்று கருதிய யசோமதி, 500 வேட்டை நாய்களை ஏவி அவரைக் கொல்ல முயல்கிறான். அவரது தவ வலிமையால் நாய்கள் அவரை நெருங்க முடியாமல் நிற்கின்றன.

இந்த மறுபிறப்பு, விலங்குப் பிறப்பு வரலாற்றைத் தன்னைக் கொல்ல வந்த யசோமதி அரசனுக்கு சுதத்த முனிவர் கூறி அவனை நல்வழிப்படுத்துகிறார். இந்த வரலாற்றை அபயருசி, அபயமதி மாரிதத்தனுக்குக் கூற, அவன் நல்லுணர்வு பெற்று ஜின தருமத்தைக் கடைப்பிடித்து முக்தி - நற்கதி அடைகிறான். இதுவே கதை.

அன்பார்ந்த மாணவர்களே! இந்தக் கதை உங்களுக்குப் புரிகிறதா? குழப்பமாக இருக்கிறதா? யசோதரன். அவன் தாய் எவ்வாறெல்லாம் விலங்குப் பிறவி எடுத்தனர் எனத் தெளிவாக அறிய முடிகிறதா? இதோ தெளிவுக்காக இங்கே இவர்களில் யார் என்ன பிறவி எடுத்தனர் என்பதைத் தருகிறோம்.

தாய் சந்திரமதி நாய், பாம்பு, முதலை, ஆடு, கோழியாகப் பிறக்கிறாள்;

யசோதரன் மயில், முள்ளம்பன்றி, மீன்,

ஆட்டுக்குட்டி, எருமை, கோழியாகப் பிறக்கிறான். இப்பொழுது இப்பிறப்புக் கதைக் குழப்பம் தீருமல்லவா? இந்தக் கதையைப் படித்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இதன் தேவை என்ன? தத்துவம் என்ன? சிந்தித்துப் பாருங்கள்; சிந்தனைக்காகச் சில செய்திகள் இதோ தரப்படுகின்றன. இவற்றைக் கொண்டு மேலும் சிந்தியுங்கள். ஆங்கிலக் கவி தாந்தேயின் டிவைன் காமடி (Divine Comedy) காவியத்தை இது நினைவு ஊட்டுகிறதல்லவா? ஒப்பிட்டுப் பாருங்கள்.

6.2.4 காப்பியத் தத்துவம்

மக்களுக்குத் தீவினை தொடரும் வழி இன்னதென உணர்த்தி, அவ்வழியில் செல்லாது தடுத்து, நல்வினை செய்யச் செய்து, அதனால் வரும் புண்ணியத்தையும் போகத்தையும் அடையச் செய்வதே சமணக் காப்பியங்களின் அடிப்படை நோக்கமாகும். வினைப்பயன் தொடரும் என்பதே இக்காப்பியம் நமக்குத் தரும் செய்தி. உயிர்க்கொலை பெரும்பாவம்; அது கீழான விலங்குப் பிறவிக்கு இட்டுச் செல்லும். மீளாத நரகத்தில் புகச் செய்யும். பலியிடுதலும், பாவனையால் பலியிடுதலும் கொலையே. அறியாமல் செய்தாலும் கொலை கொலையே. புலால் உண்ணுதல் கொடிய பாவம். இசை உலக இன்பத்தை மிகுவிக்கும். கூடா ஒழுக்கம் பஞ்சமா பாதகத்தைச் செய்யத் தூண்டும். பாவங்களைப் போக்கும் வழி அறவோர் அறவுரை கேட்டலே. இதுவே இக்காப்பியத் தத்துவம், சிந்தனை, நோக்கம்.

6.2.5 இலக்கிய நயம்

கொலை, பொய், களவு, பிறன்மனை நயத்தல், புலால் உண்ணல், கள் உண்ணல், தேன் உண்ணல் முதலான பாவச் செயல்களைச் செய்யாமையே அறம் ஆகும். அந்த அறங்களை இந்நூல் சொல்கிறது. சொல்லும் முறையில் உள்ள எளிமை, இனிமை நம்மைக் கவர்கிறது.

ஆக்குவது ஏதுஎனில் வெகுளி ஆக்குக
போக்குவது ஏதுஎனில் வெகுளி போக்குக
நோக்குவது ஏது எனில் ஞானம் நோக்குக
காக்குவது ஏது எனில் விரதம் காக்கவே

இந்தப் பாடல் உணர்த்தும் பொருள் அனைவரும் புரிந்து கொள்ளுகிற முறையில் எளிமையைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘கொலையினது இன்மை (கொல்லாமை) கூறில் குவலயத்து இறைமை செய்யும்; மலைதல் இல் வாய்மை யார்க்கும் வாய்மொழி மதிப்பை ஆக்கும்’ (237: 1-2) என்று அறக் கருத்துகளை மிக எளிமையாக எடுத்து மொழிகிறது இந்த நூல்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.

சூளாமணிக் காப்பியத்தின் பெயர்ப் பொருத்தத்தை எடுத்துரைக்க.

விடை
2.

நிமித்திகன் சுயம்பிரபை திருமணம் குறித்துக் கூறியது யாது?

விடை
3.

வாழ்க்கை என்பது பெரும் துன்பத்தில் சிறிது இன்பத்தைத் தேடுவதே என்பதைச் சூளாமணி எவ்வாறு சித்திரிக்கிறது?

விடை
4.

யசோதரன், சந்திரமதி விலங்கு கதியில் எவ்வாறெல்லாம் பிறப்பெடுத்துத் துன்புறுகின்றனர்?

விடை
5.

யசோதர காவியம் உணர்த்தும் தத்துவம் யாது?

விடை