3.3 தொகுப்புரை

ஒளவையார் இயற்றிய அற நூல்களில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய இரு நூல்கள் கூறும் அறக்கருத்துகளை முந்தைய பாடத்தில் படித்தீர்கள். இப்பாடத்தில் மூதுரை, நல்வழி ஆகிய இரு நூல்களில் ஒளவையார் கூறிய அறக் கருத்துகளை அறிந்து கொண்டீர்கள்.

கல்வி கற்றவர்களுக்குச் ‘சென்ற இடம் எல்லாம் சிறப்பு’ என்றும், கல்வி கற்றவர்களின் பெருமையைக் கல்வி கற்றவர்களே அறிவார்கள் என்றும் கல்வியின் சிறப்பை மூதுரை தெரிவித்துள்ளது.

சான்றோர்கள் நற்பண்புகளின் இருப்பிடமாக விளங்குவார்கள். அவர்கள் தங்கள் செல்வ நிலையில் தாழ்ந்தாலும், சான்றாண்மைப் பண்பிலிருந்து பிறழமாட்டார்கள் என்று மூதுரை அறிவித்துள்ளது.

இயன்ற அளவு எல்லாருக்கும் உதவவேண்டும் என்றும், தீயவர்களுக்கு உதவி செய்வதால் தமக்குத் தீமை வரும் என்றால் அந்த உதவியைச் செய்யக்கூடாது என்றும் ஒளவையார் தெரிவித்துள்ளார்.

நல்வழி என்னும் நூல் வள்ளல்களின் இயல்பையும், செல்வத்தின் பெருமையையும், உழவுத்தொழிலின் உயர்வையும், வரவுக்கேற்ற செலவே வாழ்க்கைக்கு உதவும் என்பதையும் தெரிவித்துள்ளது.

 

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
‘நல்வழி’ - பெயர்க்காரணம் தருக. [விடை]
2.
ஆற்றில் தண்ணீர் ஓடவில்லை என்றால் அந்த ஆறு எதன் மூலம் தண்ணீர் கொடுக்கும்? [விடை]
3.
செல்வம் இல்லாதவனை யார் எல்லாம் விரும்ப மாட்டார்கள்? [விடை]
4.
எத்தொழிலுக்கு ஒப்பான தொழில் எதுவும் இல்லை? [விடை]
5.
வன்சொல்லால் வெல்ல முடியாததை எச்சொல்லால் வெல்ல முடியும்? [விடை]