5.1 சதகம்

சதகம் என்ற சொல் வடமொழிச் சொல். வடமொழியில் சதம் என்றால் நூறு என்று பொருள்படும். சதம் என்ற சொல்லின் இடையில் 'க' என்ற ஓர் எழுத்து கூடிச் சதகம் என்று ஆகின்றது. இவ்வாறு இடையில் 'க' என்ற ஓர் எழுத்து வருதலைக் 'க-பிரத்தியயம்' என்று வடமொழி அறிஞர்கள் கூறுவார்கள். சதகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு ''நூறு கொண்டது'' என்பது பொருள் ஆகும். நூறு எண் கொண்டதைச் சதகம் என்று வழங்குதலால் நூறு எண்ணிக்கை அளவுள்ள பாடல்களைக் கொண்டு அமையும் இலக்கியத்தையும் சதகம் என்ற வடமொழிப் பெயராலேயே அழைத்தனர்.

5.1.1 இலக்கண வரையறை

கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைத்தியநாத தேசிகரே தமது இலக்கண விளக்கப் பாட்டியலில் முதன் முதலாகச் சதகத்தின் இலக்கணத்தைக் கூறியுள்ளார்.

விளையும் ஒருபொருள் மேலொரு நூறு
தழைய உரைத்தல் சதகம் என்ப

(இலக்.வி. 847)

என்ற நூற்பா சதக இலக்கணத்தைக் கூறுகிறது. அகப்பொருள் பற்றியோ அல்லது புறப்பொருள் பற்றியோ நூறு செய்யுள்களில் உரைப்பது சதகம் ஆகும் என்பது மேல் நூற்பாவின் பொருள் ஆகும்.

பயிலும் ஓர் பாட்டாய் நூறு உரைப்பதுதான் சதகம்

(சுவாமிநாதம். 168)

என்று, சுவாமிநாதம் எனும் பாட்டியல் நூற்பாவும் மேல் கருத்தையே உறுதி செய்கின்றது. பொருள் அமைப்பை விடப் பாடல்களின் எண்ணிக்கைக்கே இந்நூற்பாக்களில் முதன்மை தரப்பட்டுள்ளது.

5.1.2 சதக இலக்கியங்களின் வகை

சதக இலக்கியங்களை மூன்று வகைகளாகப் பிரித்து உள்ளனர்.

c01245d1.gif (3192 bytes)

கொங்கு மண்டலச் சதகம் முதலியன வரலாற்று நூல்களில் அடங்கும். போற்றி வகையில் அமைந்த நூல்கள் துதி நூல் வகையில் அடங்கும். உலகியல் நீதி கூறும் சதகங்கள் நீதி நூல் வகையில் அடங்கும்.

5.1.3 சதக இலக்கியங்களின் நோக்கங்கள்

சதக இலக்கியங்கள் பல்வேறு நோக்கங்களைக் கொண்டனவாக விளங்குகின்றன. முதல் சதகமாகிய கார்மண்டலச் சதகம் ஒரு மண்டலத்தின் பெருமையை விரித்துரைப்பதாக அமைந்துள்ளது. ஒரு நாட்டின் ஆட்சி, மன்னர், இயற்கை வளம் முதலியவற்றை விவரித்துள்ளது. சமய நோக்கம் கொண்டனவாகச் சில சதகங்கள் விளங்குகின்றன. சமய நோக்கம் என்பது சமயத்தைப் பரப்புதல், வேற்றுச் சமயத்தை மறுத்தல் எனும் இரு நிலையில் அமையும். கதை கூறுவதை நோக்கமாகக் கொண்டு மகாபாரதச் சதகம் அமைந்துள்ளது. சமுதாய நீதி கூறும் நோக்கில் சில சதகங்கள் அமைந்துள்ளன. குமரேச சதகம் இதற்குத் தக்க எடுத்துக்காட்டு. வாழ்வியல் நடைமுறைகளைப் பல்வேறு சதகங்கள் எடுத்துக் கூறுகின்றன. சகுனம், நம்பிக்கை முதலியனவாக அவை அமைந்துள்ளன.

சமயத் தத்துவத்தைச் சில சதகங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. தமிழ் மொழியின் சிறப்பு, கல்வியின் பெருமை முதலியனவும் நோக்கங்கள் ஆகும். சமுதாயச் சீர்திருத்தம், உடல் நலம் பேணல், முன்னோர் மொழியைப் போற்றுதல் முதலியனவும் சதக இலக்கியங்களின் நோக்கங்கள் ஆகும்.


c01245d2.gif (16766 bytes)

5.1.4 தமிழில் சதக நூல்கள்

சதகம் தனியொரு சிற்றிலக்கியமாக வளர்ச்சி பெற்ற காலம் கி.பி. 11-ஆம் நூற்றாண்டு ஆகும். சதகம் என்ற சொல்லை மாணிக்கவாசகர் காலத்திலேயே அறிகிறோம். அவிநாசி ஆறைகிழார் இயற்றிய கார்மண்டலச் சதகம் என்னும் இலக்கியமே சதக இலக்கியங்களில் காலத்தால் மூத்த நூலாகத் திகழ்கிறது. அடுத்துப் படிக்காசுப் புலவர், தொண்டை மண்டலச் சதகம் என்ற நூலை இயற்றினார். இவர் பாடிய தண்டலையார் சதகம், சதக இலக்கியத்தின் ஒரு திருப்பு முனை ஆகும். பழமொழிகளைச் செய்யுள்தோறும் வைத்து இச்சதகத்தை அவர் பாடியுள்ளார். தொடர்ந்து 18-ஆம் நூற்றாண்டு வரை சதகம், மிகுதியாக இயற்றப்படும் பெருமையைப் பெற்றிருந்தது. சில சதகங்கள் வருமாறு:


 • கார்மண்டலச் சதகம்
 • தமிழ்நாட்டின் பெரும்பகுதியாக விளங்கியது கார்மண்டலம் ஆகும். இது கருநாடு, கருநாடகம் எனவும் பிற்காலத்தில் அழைக்கப்பட்டது. இங்கு வாழ்ந்த வேளாளர் குடியினரின் பெருமையை உரைப்பதே கார்மண்டலச் சதகம் ஆகும். இதனை ஆறைகிழார் எனும் புலவர் இயற்றி உள்ளார்.

 • தொண்டை மண்டலச் சதகம்
 • தொண்டை நாட்டைச் சிறப்பித்து இச்சதகம் இயற்றப்பட்டுள்ளது. படிக்காசுப் புலவர் இதனை இயற்றி உள்ளார்.

 • சோழமண்டலச் சதகம்
 • சோழ நாட்டைப் பற்றியும் அந்நாட்டு மன்னர்கள், புலவர்கள், வள்ளல்கள் பற்றியும் பாடுவது சோழ மண்டலச் சதகமாகும். இதனை ஆத்மநாத தேசிகர் இயற்றி உள்ளார்.

 • கொங்கு மண்டலச் சதகம்
 • கொங்கு மண்டலச் சதகம் என்னும் இந்நூல் கொங்கு மண்டலத்தின் வரலாற்றுச் சுருக்கமாக அமைந்துள்ளது. கார்மேகக் கவிஞர் இந்நூலைப் படைத்துள்ளார்.

 • அறப்பளீசுவர சதகம்
 • கொல்லி மலையில் உள்ள ஒரு சிற்றூர் அறப்பள்ளி என்பது. இவ்வூரில் எழுந்தருளியுள்ள கடவுள் மீது பாடப்பட்டதே அறப்பளீசுவர சதகம். அம்பலவாணக் கவிராயர் இந்நூலை இயற்றி உள்ளார்.

  தன் மதிப்பீடு: வினாக்கள் - I

  1. சதகம் என்பது எந்த மொழிச் சொல்? அதன் பொருள் என்ன?

  விடை

  2. சதகம் என்ற சொல் முதன் முதலில் தமிழில் எந்த இலக்கியத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது?

  விடை

  3. சதக இலக்கிய வகைகளைச் சுட்டுக.

  விடை

  4.

  சதக இலக்கியங்களின் நோக்கங்களில் ஐந்தினைக் குறிப்பிடுக.

  விடை

  5. தமிழில் முதல் சதக நூல் எது?

  விடை

  6. ஐந்து சதக நூல்களின் பெயர்களைச் சுட்டுக.

  விடை