3.4 தொகுப்புரை

இப்பாடல்களில் பல்வேறு மனநிலைகளைச் சந்தித்தீர்கள். தலைவன் சொல் தவறமாட்டான் என உறுதிகொண்டு காத்திருக்கும் தலைவி, பரத்தையிடமிருந்து திரும்பிய தலைவனைக் கடுஞ்சொல்லால் விலக்கும் தலைவி, பனியும் மாலையும் பகையாகிவிட்டன என்று வருந்தும் தலைவி - எவ்வளவு வேறுபட்டவர்கள்! அதே போலத் தலைவியைச் சந்திக்கும் பேரார்வத்துடன் தேரை விரைந்து செலுத்தத் தூண்டும் தலைவன், சந்திக்க முடியாமல் வெளிநாட்டில் இருந்து வருந்தும் தலைவன், அடைய முடியாத ஏக்கத்தில் உயிர் போய்விடக் கூடாதா எனத் தவிக்கும் தலைவன், பரத்தையிடம் சென்று திரும்பித் தலைவியிடமும் தோழியிடமும் எதிர்ப்புக்கு இலக்காகும் தலைவன் - இவர்களும் வெவ்வேறு மன நிலைகளைப் பிரதிபலிப்பவர்களே. தலைவன் - தலைவியரின் அன்புப் பிணைப்புக்காகப் பெரிதும் முயலும் தோழி, வரைவுகடாதலையும், தலைவன் தலைவி மணவாழ்வைப் பார்த்து மகிழ்வதையும், தவறிழைக்கும் தலைவனைத் தட்டிக் கேட்பதையும் காண்கிறோம். காதல் என்பது மென்மையான மனங்களிடையே உலவும் தென்றலாகவும் தீயாகவும் தோற்றம் காட்டுவதை இப்பாடல்களில் உணர்கிறோம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. பகல் இரவுக்குள் நுழைந்துவிட்டது எனும் பொருளில் பேசும் தலைவியின் உணர்வு நிலையைக் கூறுக. [விடை]
2. வெய்யைபோல முயங்குதி - என்னும் கூற்று உணர்த்தும் உணர்ச்சிச் சூழலை எடுத்துக்காட்டுக. [விடை]
3. மாதங்கீரனார் பாடலில் இடம்பெறும் உருவெளித் தோற்றம் யாது? [விடை]
4. தலைவனின் இயக்கவேகம் கவிதை வடிவமைப்பின் மூலம் எவ்வாறு வெளிப்படுகிறது? [விடை]