1.2
மூவிடப்பெயர்கள்
மொழிகளின் உறவையும் மொழியினங்களின் தொடர்பையும் விளக்கும் வகையில் மூவிடப்பெயர்கள் (Personal pronouns) சிறந்து நிற்கின்றன. பொதுவாக ஒரு மொழியில் சொற்கள் காலந்தோறும் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் மூவிடப்பெயர்கள் எவ்வளவு காலமாயினும் பெரும் மாற்றத்திற்கு உள்ளாவதில்லை. காலப்போக்கில் மூவிடப்பெயர்களில் சிறுசிறு மாறுதல்கள் ஏற்படுவது உண்டு. ஆயினும் பழைய சொல் வடிவுக்கும் புதிய சொல் வடிவுக்கும் உள்ள உறவு தெளிவாய்த் தெரியும். சான்றாகத் தமிழில், நனிமிகு பழங்காலத்தில் தன்மை ஒருமை இடப்பெயராக ‘யான்’ மட்டுமே வழங்கியது. காலப்போக்கில் ‘நான்’ என்ற புதிய வடிவம் வந்தது. இருப்பினும் இவ்விரு வடிவங்களுக்கும் உள்ள வேற்றுமை குறைவு. இதுபோன்ற சிறு மாறுதல் நிகழ்வதற்குக் கூட நெடுங்காலம் வேண்டியுள்ளது. மூவிடப்பெயர்கள் தன்மை இடப்பெயர், முன்னிலை இடப்பெயர், படர்க்கை இடப்பெயர் என மூவகைப்படும்.
தமிழில் மூவிடப்பெயர்கள் பிற பெயர்ச்சொற்களினின்று பல நிலைகளில் வேறுபட்டு அமைந்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க சிலவற்றைக் காண்போம். 1. பிற பெயர்ச்சொற்களோடு வேற்றுமை உருபுகள் சேரும்போது அப்பெயர்ச்சொற்களின் வடிவம் திரிவதில்லை. சான்று : இராமன்
+ ஐ = இராமனை ஆனால் மூவிடப்பெயர்களோடு வேற்றுமை உருபுகள் சேரும்போது, அப்பெயர்களின் வடிவம் திரியும். அதாவது நெடுமுதல் குறுகும். இவ்வாறு திரியும் வடிவத்தை உருபு ஏற்கத் திரிந்த பெயர் (Oblique form) என்றும், உருபு ஏலா நிலையில் உள்ள எழுவாய் வடிவத்தை உருபு ஏலாப்பெயர் (Nominative form) என்றும் மொழியியலார் குறிப்பிடுவர். சான்று: உருபு ஏலாப் வேற்றுமை உருபு ஏற்கத் திரிந்த பெயர் உருபு வடிவம் நான் + ஐ = என்னை நாம் + ஐ = நம்மை நாங்கள் + ஐ = எங்களை நீ + ஐ = நின்னை, உன்னை நீங்கள் + ஐ = உங்களை 2. பிற பெயர்ச்சொற்கள் இருதிணை ஐம்பால் காட்டி நிற்கும். (எடுத்துக்காட்டு) இராமன், சீதை, மக்கள், மரம், மரங்கள். ஆனால் மூவிடப்பெயர்களோ திணை, பால் காட்டா; ஒருமை, பன்மை என்ற எண் வேறுபாடு மட்டுமே காட்டும். சான்று: நான், நீ, தான் - ஒருமை நாம், நாங்கள், நீங்கள், தாம் - பன்மை
1.2.1 தன்மை இடப்பெயர் 1) தன்மை ஒருமை 2) தன்மைப் பன்மை
சங்ககாலத்தில் தோன்றிய நூல்களில் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியம் ஆகும். இந்நூலை அடிப்படையாகக் கொண்டே தமிழ்மொழி வரலாற்றை மொழிநூலார் தொடங்குவர். தொல்காப்பியர் தன்மை ஒருமைப்பெயராக யான் என்பதையும், தன்மைப் பன்மைப்பெயர்களாக யாம், நாம் என்பனவற்றையும் குறிப்பிடுகிறார். மேலும் இவற்றை உயர்திணைக்கு உரிய பெயர்கள் என்கிறார்.
யான் யாம் நாம் என வரூஉம் பெயரும் வேற்றுமை உருபேற்கும்போது யான் என்பது என் எனவும், யாம் என்பது எம் எனவும், நாம் என்பது நம் எனவும் திரிபடையும் என்கிறார் தொல்காப்பியர். தன்மை ஒருமைக்கு யான் என்ற ஒரு வடிவத்தை மட்டும் கூறிய தொல்காப்பியர், தன்மைப் பன்மைக்கு யாம், நாம் என்ற இரு வடிவங்களைக் கூறியுள்ளார். இதற்குக் காரணம் தன்மைப்பன்மை இருவேறு பொருளை உணர்த்துவதே ஆகும். அவ்விரு பொருளையும் தனித்தனியே உணர்த்த வேண்டி இருவேறு பன்மை வடிவங்கள் தேவைப்பட்டன. நாம் என்பது தன்மையோடு கேட்போராகிய முன்னிலையாரையும் உளப்படுத்தும் தன்மைப் பன்மை ஆகும். இதனை உளப்பாட்டுத் தன்மைப்பன்மை (Inclusive plural) என்பர். சான்று: நாம் செல்வோம் (நானும் நீயும்; நானும் நீங்களும்) யாம் என்பது கேட்போராகிய முன்னிலையாரை உளப்படுத்தாது, தன்னைச் சார்ந்தோரை (தன்மையாரை) மட்டும் உணர்த்தும் பன்மை ஆகும். இதனை உளப்படுத்தாத் தன்மைப்பன்மை (Exclusive plural) என்பர். சான்று : யாம் செல்வோம்(நானும் என்னைச் சார்ந்தோரும்) தொல்காப்பியத்தை அடுத்துத் தோன்றிய சங்க இலக்கியங்களில் யான் என்பதோடு, நான் என்ற புதிய வடிவமும் தோன்றி வழங்குகிறது. ஆயினும் யான் என்பதே மிகுதியாக வழங்குகிறது. சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில்தான் நான் என்பது முதலில் வருகிறது. அது அந்நூலில் இரண்டு இடங்களில் வருகிறது. சான்று : நல்லாள்
கரைநிற்ப நான்
குளித்த பைந்தடத்து
அவன் கள்வன்; கள்வி நான்
அல்லேன்
இடைக்காலத்தில் தோன்றிய நூல்களில் தன்மை ஒருமைப்பெயரைப் பொறுத்தவரையில் யான், நான் என்பனவே வழங்கின. ஆயினும் யான் என்ற பழைய வடிவத்தைக் காட்டிலும், பரிபாடலில் புதிதாகத் தோன்றிய நான் என்ற வடிவமே மிகுதியாக வழங்குகிறது. சான்றாக, திருநாவுக்கரசர் தேவாரத்தில் யான் என்பது 29 இடங்களில் மட்டும் வர, நான் என்பதோ 339 இடங்களில் வருகிறது. சான்று :
கொடுமைபல செய்தன நான்அறியேன்
தன்மைப் பன்மையைப் பொறுத்தவரை யாம், நாம் என்னும் வடிவங்கள் பயன்பட்டு வந்தாலும், இச்சொற்களுடன் ‘கள்’ என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேர்ந்து, யாங்கள், நாங்கள் என்னும் புதிய வடிவங்கள் தோன்றின. இப்புதிய வடிவங்களில் முதலில் தோன்றியது யாங்கள் என்பதாகும். இது முதன் முதலில், சங்க மருவிய காலத் தொடக்கத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் வருகிறது. சான்று :
நீ போ யாங்களும்
நீள்நெறிப் படர்குதும் யாங்கள் என்பது வேற்றுமை உருபு ஏற்கும்போது, எங்கள் எனத் திரிகிறது. இது முதன்முதலில் மணிமேகலையில் வருகிறது. சான்று :
வெவ்வுரை எங்கட்கு
விளம்பினிர் ஆதலின் நாங்கள்என்பது பெரியபுராணத்தில் வருகிறது. இது வேற்றுமை உருபு ஏற்கும்போது எங்கள் என்றும் நங்கள் என்றும் வழங்குகிறது. சான்று :
நாங்கள் உன்
உடம்பதனில் வெப்பை . . . .
அங்கு நன்மையில் வைகும் அந் நாள்சில அகல சங்ககாலத்தில் உயர்திணைப் பெயர்களாக வழங்கிய தன்மை இடப்பெயர்கள் இடைக்காலத்தில் உயர்திணை, அஃறிணை ஆகிய இரு திணைக்கும் உரிய பொதுப்பெயர்களாகி விட்டன. சங்ககாலத்தில் எழுந்த இலக்கியங்களில் பறவைகள், விலங்குகள் போன்ற அஃறிணைப் பொருள்கள் பேசுவன போலப் பாடப்பெறவில்லை. ஆனால் இடைக்காலத்தில் எழுந்த காப்பியங்களில் அஃறிணைப் பொருள்கள் நான் என்று தன்னைக் குறித்துப் பேசுவனபோலப் பாடப்பட்டன. எனவே யான், நான், யாம், நாம் என்னும் தன்மை இடப்பெயர்களை நன்னூலார் ஏனைய முன்னிலைப் படர்க்கை இடப்பெயர்களைப்போல இருதிணைப் பொதுப்பெயர் என்று கூறலானார்.
தன்மை நான்கும், முன்னிலை ஐந்தும், இடைக்காலத்தில் தன்மைப் பன்மையில் யாங்கள், நாங்கள் போன்ற ‘கள்’ ஈற்று இரட்டைப் பன்மை வடிவங்கள் வழங்கியதை மேலே பார்த்தோம். இடைக்காலத்தில் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய நன்னூல் அவ்வடிவங்களைக் கூறவில்லை. தன்மைக்கு யான், நான், யாம், நாம் ஆகிய நான்கு வடிவங்களை மட்டுமே கூறுகிறது (நன்னூல், 285). ஆனால் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தோன்றிய வீரசோழியம் என்னும் இலக்கண நூல் நாம், நாங்கள் ஆகிய இரு வடிவங்களைக் குறிப்பிடுகிறது.
தன்மைப் பன்மைப் பெயர்களாக நாம், நாங்கள் ஆகிய இரண்டு மட்டுமே வழங்குகின்றன. இவற்றுள் நாம் என்பது உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாக வழங்குகிறது; நாங்கள் என்பது உளப்படுத்தாத தன்மைப் பன்மையாக வழங்குகிறது. சான்று: நாம் செல்வோம் (நானும், நீயும் / நீங்களும் செல்வோம்) நாங்கள் செல்வோம் (நானும் என்னைச் சார்ந்தோரும் செல்வோம்) வேற்றுமை உருபு ஏற்கும்போது நாம் என்பது நம் என்றும், நாங்கள் என்பது எங்கள் என்றும் திரிந்து வழங்குகின்றன. தன்மை இடப்பெயர்கள் தமிழ்மொழி வரலாற்றில் காலந்தோறும் மாற்றங்களையும் புதிய வடிவங்களையும் பெற்று வழங்கி வந்துள்ள முறையைப் பின்வரும் அட்டவணை காட்டும்.
யாரிடம் பேசுகிறோமோ அவரையே முன்னிலையாகக் குறித்துக் கூறும் சொல் முன்னிலை இடப்பெயர் எனப்படும். தன்மையைப் போல இதனுள்ளும் இரு பிரிவுகள் உள்ளன. 1) முன்னிலை ஒருமை2) முன்னிலைப் பன்மை
தொல்காப்பியர் முன்னிலை ஒருமைப்பெயராக நீ என்பதையும் முன்னிலைப் பன்மைப்பெயராக நீயிர் என்பதையும் குறிப்பிடுகின்றார். நீயிர்
நீ என வரூஉம் கிளவி நீஎன்
ஒருபெயர் நெடுமுதல் குறுகும் நீயிர் என்பது வேற்றுமை உருபு ஏற்கும்போது நும் என்றாகும் என்றும் அவர் கூறுகிறார். சங்க இலக்கியங்களில் நீ, நீயிர் என்பன வருகின்றன. முன்னிலைப் பன்மையில் நீர் என்ற புதிய வடிவம் வந்து வழங்குகிறது. நீயிர் என்பதை விட இதுவே மிகுதியாக வழங்குகிறது. நீயிர் என்பது நான்கு இடங்களில் வர, நீர் என்பதோ பதினாறு இடங்களில் வருகிறது. சான்று :
குன்றும் உண்டு நீர்
பாடினிர் செலினே
நீயிர்
இச்சுரம் அறிதலும் அறிதிரோ சங்க இலக்கியங்களில் வேற்றுமை உருபேற்கத் திரிந்த வடிவங்களாகத் தொல்காப்பியர் கூறிய நின், நும் என்பனவற்றோடு உன், உம் என்ற புதிய வடிவங்களும் வருகின்றன. சான்று :
கானக நாடன் உறீஇய நோய்க்கு உன்
ஒருவீர் தோற்பினும் தோற்பது உம்
குடியே
இன்றே போல்க நும்
புணர்ச்சி
நின்னினும்
நல்லன் அன்றே இடைக்காலத்தில் முன்னிலை ஒருமையைப் பொறுத்தவரை, நீ என்பது மட்டுமே வருகிறது. முன்னிலைப் பன்மையைப் பொறுத்தவரை, சங்க காலத்தில் வழங்கிவந்த நீர், நீயிர் என்பனவற்றோடு நீவிர், நீம், நீர்கள், நீயிர்கள், நீவிர்கள், நீங்கள் என்னும் பல புதிய வடிவங்கள் இடைக்கால இலக்கியங்களில் வழங்குகின்றன. சான்று :
நீவிர் இருவரும்
கண்ட மன்றம் இதயமாம்
நீமே
வென்றிக் களிற்றான் உழைச்செல்வது (நீமே - நீரே, நீங்களே) அன்னையர்காள்!
என்னைத் தேற்ற வேண்டா
நூல் அவையார் போல நீங்கள் நோக்குமின் என்றாள் மேலே கூறிய முன்னிலைப் பன்மை வடிவங்களில் நீம் என்பது சீவகசிந்தாமணியில் மட்டுமே வருகிறது. சீவகசிந்தாமணிக்கு உரை வரைந்த நச்சினார்க்கினியர் நீம் என்பதைத் திசைச்சொல் என்கிறார். திராவிட மொழிகளில் ஒன்றான கன்னடத்தில் முன்னிலைப் பன்மை வடிவங்களுள் ஒன்று நீம் என்பதாகும். சீவகசிந்தாமணி எழுதப்பட்ட காலத்தில், கன்னட மொழி பேசும் நாடு சமண சமயத்தின் உறைவிடமாகச் செல்வாக்குப் பெற்றிருந்தது. சீவக சிந்தாமணியை இயற்றிய திருத்தக்க தேவர் சமண முனிவர் ஆவார். எனவே அவர் அந்த மொழி வழக்கைப் போற்றி அதனைத் தம்முடைய காப்பியத்தில் கையாண்டிருக்கலாம். இப்போக்கு, மூவிடப் பெயர்களில் பிறமொழித் தாக்கமும் இருந்ததைப் புலப்படுத்தும். இடைக்கால இலக்கியங்களில் நீம், நீங்கள், நீர்கள் முதலான பன்மை வடிவங்கள் வழங்கவும், நன்னூலாரோ அவற்றைப் பற்றி நன்னூலில் குறிப்பிடவில்லை. முன்னிலைப் பன்மைக்கு நீயிர், நீவிர், நீர் என்னும் மூன்றை மட்டுமே குறிப்பிடுகிறார் (நன்னூல் 285). ஆனால் வீரசோழியமும் அதன் உரையும் நீர், நீயிர், நீவிர், நீங்கள், நீர்கள், நீயிர்கள், நீவிர்கள் என்னும் ஏழனைக் குறிப்பிடுகின்றன (வீரசோழியம், 37 உரை). எனவே மூவிடப்பெயர்களைப் பொறுத்தவரை, இடைக்காலத் தமிழின் இயல்பை வீரசோழியமும் அதன் உரையுமே தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன எனலாம். இடைக்கால இலக்கியங்களில் நீ என்பது வேற்றுமை உருபேற்கும் போது நின், உன், நுன் என்று திரிகிறது; முன்னிலைப் பன்மைப்பெயர்கள் நும், உம், நுங்கள், உங்கள் என்று நெடுமுதல் குறுகித் திரிகின்றன. இவற்றில் நுன், நுங்கள், உங்கள் என்பன இடைக்காலத்தில் வந்த புதிய வடிவங்கள். சான்று :
உன்னோடு இவ்வூர்
உற்றது ஒன்று உண்டுகொல்
முதிர் வினை நுங்கட்கு
முடிந்தது ஆகலின்
உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள்
மாய வாழ்வெலாம்
தற்காலத்தில் முன்னிலை ஒருமை நீ என்பதே. இது வேற்றுமை உருபு ஏற்க நின், உன் என வழங்குகிறது. உன் என்ற வழக்கே மிகுதி. பன்மையில் நீங்கள் என்ற சொல்லே மிகுதியாக வழங்குகிறது. நீர் என்பதும், பழங்காலப் படர்க்கைப் பன்மையாகிய தாங்கள் என்பதும் முன்னிலைப் பன்மையில் வழங்குகின்றன. வேற்றுமை உருபேற்கும்போது நீங்கள் என்பது உம், உங்கள் என்றும், தாங்கள் என்பது தங்கள் என்றும் திரிந்து வழங்குகின்றன. முன்னிலை இடப்பெயர்கள் காலந்தோறும் மாற்றங்களையும் புதிய வடிவங்களையும் பெற்று வழங்கி வந்துள்ள முறையைப் பின்வரும் அட்டவணை காட்டும். தன்மை முன்னிலை அல்லாத இடத்தினைப் படர்க்கை என்பர். இருவர் பேசும்போது அவர்களைக் குறிப்பிடாமல் வேறொருவரையோ அல்லது வேறொரு பொருளையோ குறித்துக் கூறும் சொல் படர்க்கை இடப்பெயர் (Third Person) எனப்படும். தன்மை முன்னிலைகளைப் போல இதனுள்ளும் இரு பிரிவுகள் உள்ளன. 1) படர்க்கை ஒருமை
தொல்காப்பியர் படர்க்கை ஒருமைப்பெயராகத் தான் என்பதையும் படர்க்கைப் பன்மைப்பெயராகத் தாம் என்பதையும் குறிப்பிடுகின்றார். இவை வேற்றுமை உருபு ஏற்கும்போது முறையே தன் எனவும் தம் எனவும் நெடுமுதல் குறுகுகின்றன. மூவிடப் பெயர்களில் தன்மை, முன்னிலை ஆகிய இடப்பெயர்கள் பால் (Gender) காட்டுவதில்லை; ஒருமை, பன்மை என்ற எண் (Number) வேறுபாட்டை மட்டுமே காட்டும். அதேபோலப் படர்க்கை இடப்பெயர்களும் ஒருமை, பன்மை என்ற எண் வேறுபாட்டை மட்டுமே காட்டும். தான்- ஒருமை; தாம் - பன்மை. தன்மை, முன்னிலை இடப்பெயர்கள் கொண்டு முடியும் வினைகளும் பால் காட்டா; எண் மட்டுமே காட்டும். ஆனால் தான், தாம் ஆகிய இப்படர்க்கை இடப்பெயர்கள், அவை கொண்டு முடியும் வினைகளைக் கொண்டு பால் அறியப்படும். தான் வந்தான்
சங்க இலக்கியத்தில், தான், தாம் ஆகிய இரண்டும் படர்க்கையிடத்தில் வழக்கில் இருந்தன. யாரும் இல்லை,
தானே
கள்வன் என்ற பழம்பாடலில் தான் என்பது படர்க்கை ஒருமை இடப்பெயராக அவன் (தலைவன்) என்ற பொருளில் வருகிறது. தான்
அஃது அறிந்தனள் கொல்லோ என்ற பாடல் அடியில் தான் என்பது அவள் (தாய்) என்ற பொருளில் வருகிறது. தொல்காப்பியம் தோன்றிய சங்க காலத்தில் தான், தாம் ஆகிய இவ்விருபெயர்களோடு, அவன், அவள், அவர் (அவர்கள்), அது, அவை போன்ற ஐம்பால் காட்டும் சுட்டுப்பெயர்களும் படர்க்கையிடத்தில் வழங்கிவரத் தொடங்கின. சங்க இலக்கியங்களில் கூட, தான், தாம் ஆகியவற்றைக் காட்டிலும் சுட்டுப்பெயர்களே படர்க்கை இடத்தில் பெருவரவினவாக வழங்குகின்றன. சுட்டுப்பெயர்கள் படர்க்கையிடத்தில் செல்வாக்குடன் வழங்கவும் தான், தாம் இரண்டும் படர்க்கை இடத்தில் வரும் வழக்கில் மறையத் தொடங்கின. ஆயினும் இவை இடைக்காலத்திலும் தற்காலத்திலும் வேறு பல நிலைகளில் வழங்கலாயின. இடைக்கால இலக்கியங்களில் தான், தாம் ஆகியன படர்க்கைச் சுட்டுப் பெயர்களாக ஓரளவே வழங்குகின்றன. பெரும்பாலும் இவையிரண்டும் பெயர்களை அடுத்துப் பொருள் உணர்த்தாமல் அசைகளாக வருகின்றன. கோவலன்
தான் போன பின்னர்
பெருங்காதல் உடையவர்தாம்
புறத்தெய்தி தன், தம் ஆகிய உருபு ஏற்கத் திரிந்த வடிவங்களும் பெயர்களின் பின்னர் அசைகளாக வருகின்றன. பொன்செய்
கொல்லன் தன்
சொல் கேட்ட
வென்றவர் தம்
திருப்பேரோ தற்காலத் தமிழில் தான், தாம் ஆகியன மூன்று நிலைகளில் வருகின்றன. 1. தாம் என்பது கள் விகுதியோடு சேர்ந்து தாங்கள் என வழங்குகிறது. தாங்கள் என்ற இந்தப் பன்மைச்சொல் படர்க்கையில் வழங்காமல், முன்னிலையில் மரியாதைக்குரிய மிக உயர்ந்த ஒருவரைக் குறிக்கும் உயர்வு ஒருமைப்பெயராக வழங்கி வருகிறது. சான்று:
தாங்கள் எப்போது வந்தீர்கள்? 2. தான், தாம் ஆகியன தன்மை, முன்னிலைப் பெயர்களோடும், அவன், அவள், அவர்கள் போன்ற சுட்டுப்பெயர்களோடும் பிற பெயர்களோடும் சேர்ந்து, வலியுறுத்தல் பொருளைத் தரும் சொற்களாக வழங்குகின்றன. சான்று :
நான்தான் வந்தேன்; நீதான் வந்தாய்; 3. வேற்றுமை உருபு ஏற்கத் திரிந்த வடிவங்களாகிய தன், தம், தங்கள் என்பன தற்சுட்டுப்பெயர்களாக (Reflexive Pronouns) வழங்குகின்றன. சான்று :
அவன் தன்னையே நொந்து கொண்டான்
|