6.1 இலக்கியமும் கலைகளும்

    இலக்கியம் ஒரு கலை. கலையென்றால், சொல்லுகிற அல்லது சொல்ல விரும்புகிற செய்திகளை அழகும் நேர்த்தியும் படச் சொல்வது; காண்பார், கேட்பார் அல்லது படிப்பார் மனதில் சுவைபடவும், அவர்கள் மனம் கொள்ளுமாறும், அவர்கள் சிந்தையில் அல்லது உணர்வில் ஓரளவாவது அசைவையும் தாக்கத்தையும் ஏற்படுத்துமாறும் அமைவது; மேலும் மேலும் காணுமாறும் கேட்டுமாறும் படிக்குமாறும் ஓர் ஆர்வத்தைத் தூண்டுவது படைப்பாற்றல் பண்பு, கலைகளின் அடிப்படைப் பண்பும் அதுவே ஆகும்.

• கலைகள்

    கலைகள் பல. அறுபத்து நான்கு எனச் சொல்லுவது ஒரு மரபு. இலக்கியம், அவற்றுள் தலையாய கலை. இது, மொழிசார் கலை என்று ஏற்கனவே நாம் சொல்லியிருக்கிறோம். மேலும், மொழியை ஊடிழையாகக் கொண்டு அமையும் இந்தக் கலை, நுண்கலை (Fine Art) என்றும் பயன்கலை (Useful Art) என்றும் சொல்லப்படுகிறது.

    கலைகளைப் பல வகையாகப் பகுப்பார்கள். நுண்கலை, பயன்கலை, பருண்மைக் கலை (Plastic Art), கவின் கலை (Aesthetic Art), நிகழ்த்துகலை (Performing Art) என்பன இவற்றுள் முக்கியமானவை.

• நுண்கலை

    நுண்மையான உறுப்புக்களையும், நுண்ணிய திறன்களையும் நுண்ணிய உணர்வுகளையும் கொண்டது நுண்கலை. கவிதை, இசை, ஆடல், ஓவியம் முதலியன, இதனுள் அடங்கும்.

• பயன்கலை


    கைலாசநாதர் கோயில்                       திரையரங்கு

    பயன்களை முக்கிய நோக்கமாக்கக் கொண்டது பயன்கலை. இலக்கியம் இதனுள்ளும் அடங்கும். கட்டடக் கலை, அண்மையில் தோன்றிய திரைப்படக் கலை முதலியவை, பயன்கலைகள்.

• பருண்மைக் கலை

        

    பருண்மைக்     கலை என்பது பருப்பொருளாலான ஊடுபொருள்களைக் கொண்டு அமைவது. கட்டடக் கலை, சிற்பக்கலை ஆகியவை, இவற்றுள் அடங்கும்.

• கவி்ன் கலைகள்

        

    ஓவியம், ஒப்பனை முதலிய கலைகள், கவின் கலைகளாகும். அதாவது, அழகான தோற்றத்தை நோக்கமாகக் கொண்டு அமைவது.

• நிகழ்த்து கலை

         

    நிகழ்த்து கலை என்பது, பார்வையாளர் (Audience) மத்தியிலிருந்து நிகழ்த்திக் காட்டப்படும் கலையாகும். ஆடல், கூத்து (நாடகம்) ஆகியவை, முக்கியமான நிகழ்த்து கலைகளாகும். இசையும் இவ்வாறு நிகழ்த்தப்படுகிற கலையேயாகும்.

• கலையும் நுகர்வும்

        

    கலையின் பண்புகளும் வகைகளும் கண்டோம். கலை எதன் மூலமாக நுகரப்படுகிறது?     ஐம்புலன்கள் இருந்தாலும் அடிப்படையில் கண், செவி ஆகிய இரண்டினாலேயே பெரும்பாலும் கலைகள் நுகரப்படுகின்றன. இவற்றுள் சில, கண்ணால் மட்டுமே நுகரப்படுகின்றன. அவை, ஓவியம், சிற்பம், கட்டிடம் போன்றவையாகும். சில கலைகளுக்குச் செவியே, பிரதானம். இசைக்கலை அத்தகையது. சில கலைகளுக்குக் கண், செவி இரண்டுமே முக்கியம். ஆடல், கூத்து ஆகியவை இத்தகையன. நீங்கள், சமையல் என்பதை ஒரு கலையாகக் கொள்கிறீர்களா? அப்படியானால் நுகர்வுக்குரிய புலன்கள் என்னென்ன? நிச்சயம் செவி இல்லை. சரி. வேறென்ன?

6.1.1 இசையும் இலக்கியமும்

    கவிதை,     இலக்கியக் கலையின் அரசி என்று அழைக்கப்படுகிறது. மேலும் அதுவே, ஏனைய இலக்கிய வகைகளுள் மூத்தது; மையமானது.

• கவிதை

    கவிதை என்பது, அடிப்படையில் பாடல் என்றே அறியப்படுகிறது. சொற்களின் ஓசை ஒழுங்குமுறையோடு, இசை தழுவி அமைவது, பாடல் அல்லது கவிதையாகும்.

• மூன்று கலைகள் (முத்தமிழ்)

    பழந்தமிழில் சிலம்பு முதற்கொண்ட பல நூல்களில் ஆடல், பாடல், இசை அல்லது இயல், இசை, நாடகம் என்று மூன்று கலைகள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் தழுவியும் வருபவையாகக் கூறப்படுகின்றன. இயல் என்பது பாடல் அல்லது கவிதையைக் குறிக்கும். இந்த மூன்று கலைகளும் சேர்ந்து முத்தமிழ் என்று சொல்லப்படுகிறது. இவற்றுள் இசை நடுத்தரமானது. அது கவிதைக்கும் வேண்டும்; ஆடல் அல்லது கூத்துக்கும் வேண்டும்.

    “ஆடல், பாடல், இசையே, தமிழே” என்று அரங்கேற்று காதையில் (மாதவி, அரங்கேற்றுவதை வருணிக்கும் இயல்) இளங்கோ அடிகள் இந்த மூன்று கலைகளையும் இணைத்துக் காணுகிறார். மேலும், பாடல் எனும் கலை, இசையோடு சேர்ந்து அமைவதையும் அவர் கூறுகிறார்.

    யாழுங் குழலும் சீரும் மிடறும்
    தாழ்குரல் தண்ணுமை பாடலொடு இவற்றின்
    இசைந்த பாடல் இசையுடன் படுத்து
    ............................................
    கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
    பகுதிப் பாடலும் கொளுத்தும் கலை....

            (அரங்கேற்றுகாதை 26-34)

சிலம்பின் இந்த வரிகள், மூன்று கலைகளும் சேர்ந்து இயங்குவதையும் அதே போது, பாடலுக்கு இசை ஒரு பகுதியாக அமைவதையும், மேலும் கவிஞனுடைய குறிப்பு அல்லது கோட்பாடும் அதிலே உள்ளது என்பதையும் சொல்லுகின்றன.

    இசை, மனதை நெகிழ்விப்பது; மொழிக் கடந்து பொதுமைத்தன்மை (Universal) கொண்டது. தமிழ் இலக்கியம் இதன் சிறப்பைத் தொடர்ந்து பேசுகின்றது. திறனாய்வு, இத்தகைய இலக்கியம் பற்றியப் பேச வேண்டியிருப்பதனாலும், கலையறிவு இல்லாமல் இலக்கியத்தைக் காண முடியாது என்பதனாலும், திறனாய்வாளனுக்கு இசை பற்றிய அறிவும் அது பற்றிய கண்ணோட்டமும் இருப்பது அவசியமாகின்றது.

6.1.2 கூத்து அல்லது நாடகம்

    முத்தமிழில் கூத்து என்பது ஒன்று. இது ஆடல் என்றும் சொல்லப்படும். ஆடல், தனியாளாகவும் அல்லது குழுவாகவும் நிகழ்த்தப்படுவது. அதற்குக் கதை என்பது அவசியமில்லை. கூத்து என்பது, நாடகம் என்று பின்னர் சொல்லப்பட்டது. இது, குழுவாக, ஒப்பனை, நடிப்பு முதலியவற்றுடனும் கதை நிகழ்ச்சிகளுடனும் நிகழ்த்தப்படுவது.

    சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் மாதவியின் ஆடற்கலையும் அதற்குரிய முன்னேற்பாடுகளும் விரிவாகப் பேசப்படுகின்றன. கூத்து, நிகழ்ச்சிகள் மற்றும் உணர்வுப் பின்னல்களால் கட்டமைக்கப்படும் அமைப்பை உடையது. இத்தகைய கட்டமைப்பு, சற்று நீளமான வருணனைக் கவிதையிலும் (Narrative Poem) காவியத்திலும் கட்டாயமாகக் காணப்படுவதேயாகும். மேலும், நாடகம் நிகழ்த்தப்படுவதாக மட்டுமல்லாமல், எழுதப்படுவதாகவும் அமைகிறது. தவிரவும், கோயில்களிலும் திருவிழாக்களிலும், தெருக்களிலும் கூத்துக்கள் அல்லது நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இலக்கியம், புராணம், காப்பியம் முதலியவற்றிலிருந்து கதைகளையும் கதைச் சூழல்களையும் இந்தக் கூத்துக்கள் பெற்றுக் கொள்வதுண்டு. அதே போல், கூத்துக்கள் அல்லது நாடகங்களிலிருந்து இலக்கியம், பல கூறுகளை எடுத்துக் கொள்வதுமுண்டு. உதாரணமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் என்பது ஒரு சிறிய காப்பியம், இது, 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் அதன் பிறகும் பிரசித்தமாக இருந்த “திரவுபதி, வஸ்திராபரணம்” என்ற தெருக்கூத்தைப் பின்பற்றி எழுந்ததாகும். அதுபோல, கோபால கிருஷ்ணபாரதி என்பாரின் நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் கதாகாலட்சேபம் என்பது அன்றைய பிரசித்தமான கீர்த்தனை வடிவத்திலான கதாகாலட்சேபம். இது, சேக்கிழாரின் திருநாளைப் போவார் புராணத்தைப் பின்பற்றிச் சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டதேயாகும்.

    இவ்வாறு, கூத்து அல்லது நாடகம், இலக்கியத்தோடு நெருக்கமாக உள்ளது; அமைப்பு முறையிலும் ஒத்து விளங்குகிறது. எனவே திறனாய்வு, இத்தகைய கூறுகளைக் கண்டறிந்து சொல்ல வேண்டியிருக்கிறது.

6.1.3 இலக்கியமும் ஓவியமும்

    ஓவியயம், மிகப் பழங்காலத்திலேயே தோன்றிய ஒரு கலை. ஒன்றனைப் போல் இன்னொன்று - அதாவது ஒவ்வுதல் எனும் பொருளையுடையது ஓவியம். உவமம் என்ற சொல்லும் அதனோடு உறவுடையது. ஒவ்வுதல் - ஓவம் - ஓவியம். காட்சியளவில் பார்த்தற்குரிய இந்த நுண்கலை, புனைந்து செய்யப்படுவது. புனையா ஓவியம் என்று சங்கப் பாடல் கூறுகிறது.

    ‘ஓவியம், பேசாத கவிதை (Silent Poetry); கவிதை, பேசுகிற ஓவியம் (Speaking Picture) என்று பிரான்சு நாட்டு ஓவியர் சார்ல்ஸ் ஃபிரஸ்நொய் (Charles A.D. Fresnoy) என்பவர் கூறுகிறார். கவிதைக்கும் ஓவியத்துக்கும் எவ்வளவு நெருக்கம் உண்டு என்பதை உணர்த்துகிறது இதன் கருத்து ஆகும். பேராசிரியர் எனும் தொல்காப்பிய உரையாசிரியர் இதனையே வேறொரு வகையில் சொல்லுகிறார். மெய்ப்பாடு பற்றிப் பேசுகிற போது, மெய்ப்பாடு எனும் உணர்ச்சி வடிவம், கவிதையில் காட்சி வடிவமாக ஆக்கப்படுகிறது என்கிறார் அவர். “கவி, கண் காட்டும்” என்பது அவருடைய கூற்று.

    சங்க காலப் புலவர்கள், அழகாகப் புனைந்து செய்யப் பட்டுள்ள பொருட்களை - அவை வீடு அல்லது இல்லமாயினும், ஊராயினும் - ஓவியமாகக் காணுகின்றனர்.

    ஓவத்தன்ன இடனுடை வரைப்பில் (புறம் - 251)

    ஓவத்தன்ன உருகெழு நெடுநகர் (பதிற்றுப்பத்து - 88)

என்பன சில வரிகள்.

    மணிமேகலை, அழகிய பூங்கா ஒன்றை ஓவியமாகக் (சித்திரமாக) காணுகிறது.

    வித்தகரியற்றிய விளங்கிய கைவினைச்
    சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுபோல்
    ஒப்பத் தோன்றிய உவவனம்.

இவ்வாறு ஓவியம் காட்சிப்படுத்தலைச் செய்கிறது. இலக்கியத்தில் காட்சிப்படுத்தல் என்பது உவமம், உருவகம், படிமம் முதலியவை மூலமாகவும் நடைபெறுகின்றது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.

கலை என்றால் என்ன? விளக்குக.

விடை
2.

கலைகளின் வகைகள் யாவை?

விடை
3.

பாரதியின் பாஞ்சாலி சபதம் எதனைப் பின்பற்றி எழுந்தது?

விடை
4.

ஓவியம், கவிதை வடிவத்தோடு கொண்டுள்ள நெருக்கம் பற்றி அறிஞர்கள் கருத்தினைக் கூறுக.

விடை
5.

இளங்கோவடிகள் விளக்கமாகப் பேசிடும்மூன்று கலைகள் யாவை?

விடை