6.3 அறிவியல் மொழிபெயர்ப்புச்
சிக்கல்கள்
அறிவியல் துறை தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் புதியதாக
அமைந்துள்ளது. இத்துறையில் மொழிபெயர்ப்புத் தொடங்கி
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலம்தான் ஆகிறது. அதிலும்
குறிப்பாக, இலக்கியத்தை மொழிபெயர்க்கின்ற பணிதான்,
அறிவியல் கருத்துகளை மொழிபெயர்க்கின்ற பணியைவிட
அதிகமாக நடத்தப்பட்டு வருகின்றது. அறிவியலில் உள்ள
அடிப்படைக் கருத்துகள் எல்லா நாட்டினரிடையேயும் மிகவும்
பரவலாகப் பரப்பப்பட்டு வந்தது, வருகிறது. இதனால்
அறிவியலைப் பற்றிய நூல்கள் எழுதப்பட வேண்டும் என்ற
சூழ்நிலை இங்கு உருவானது. தமிழில் பாடப் புத்தகங்களாகவும்
கட்டுரைகளாவும் அறிவியல் நூல்கள் எழுதுவோர், புதிய
கண்டுபிடிப்புகள், கருத்துகள் ஆகியவற்றை அறிவியல்
இதழ்களில் இருந்துதான் திரட்டுகின்றனர். இத்தகைய
இதழ்களில் வெளிவரும் அறிவியல் செய்தி,
பெரும்பாலும்
அறியப்படாத மொழிகளில் அமைந்தால், அதனோடு,
ஆங்கிலம், பிரெஞ்சு, செர்மன் போன்ற மொழிகளிலே
அதன் சுருக்கம் விளக்கப்பட்டிருக்கும். பல அறிவியல்
அறிஞர்கள் இந்த அளவில் செய்தி வெளிவருவதை ஏற்றுக்
கொள்கின்றனர். இந்தச் சூழலில் அறிவியல் மொழிபெயர்ப்புத்
தேவையா என்ற வினா எழலாம்.
முதலாவதாக, இன்றைய
உலகம் ஒரு அறிவியல்
தொழில்நுட்ப உலகமாக
மாறிவிட்டது. அறிவியல்
கருத்துகளை மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டிய
கட்டாயம் உள்ளது.
இரண்டாவதாக, அறிவியல் படைப்புகளை
மொழிபெயர்ப்பது என்பதை ஒரு சிறந்த மொழிபெயர்ப்பிற்குச்
சான்றாகக் காட்டலாம். அதில் கருத்துகளுக்குத் தான் முதலிடம்
அளிக்கப்படுகிறதே தவிர, கருத்துகள்
எழுதப்படுகின்ற
முறைக்கு அல்லது நடைக்கு அல்ல
என்பதை அறிய
வேண்டும்.
மூன்றாவதாக, மூலமொழியில் உள்ள கருத்துகளைப் பற்றிய
அறிவை, அறிவியல் மொழிபெயர்ப்புச் செய்கின்றவர்
பெற்றிருக்க வேண்டிய தேவையை வலியுறுத்துவதாகும்.
நான்காவதாக, அறிவியல் மொழிபெயர்ப்பில் சொற்களுக்கு
மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இவை போன்றவற்றை முதன்மையான காரணங்களாகக்
கொள்ளலாம். அறிவியல் நூல்களைப் பொருத்தவரையில்
செய்திகளைத் தெளிவாகச் சொல்வதற்குத் தேவையான
மொழியைப் பயன்படுத்த வேண்டும்.
6.3.1 நிகர்ச்சொற்கள்
அறிவியல் மொழிபெயர்ப்புகள், பல நேரம் தவறான
பொருள் தரும்படி அமைந்துவிடுவதற்கு நிகர்ச்சொல் எது
என்று ஆராயாமல் எழுதப்படுகின்றன. அதனால்
மொழிபெயர்ப்புகள் பயன்படுவதில்லை.
''நிகரான சொற்களைக் கண்டு அறிவதும் மூலமொழி
நூலுக்கும், பெயர்ப்புமொழி நூலுக்கும் இடையே ஒத்த
பொருளையுடைய சொற்களைக் காணுவதும் மொழிபெயர்ப்பில்
ஈடுபடுவோரை அடிக்கடி மலைக்க வைக்கும் பெரும்
சிக்கலாகும்'' என்பது அறிஞர் ஆர்.எம்.பகாயாவின்
கருத்தாகும்.
தொழில்நுட்பச் சொற்கள் அல்லது துறைசார்ந்த சொற்கள்
மொழியில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இத்தொழில்நுட்பப் பொருளமைந்த சொற்களை, பெயர்ப்புமொழியில்
எடுத்துரைப்பது என்பதும் மிகச் சிக்கலான செயலாகும்.
மூலமொழியிலும் பெறுமொழியிலும் உள்ள தொழில்நுட்பச் சொற்கள், விளக்கங்கள், தொடர்மொழிகள் தொடர்பான
சிக்கலோடு அறிவியல் தன்மையை எடுத்துக் கூறுவது என்ற
நிலையில் மொழிபெயர்ப்பு மேலும் சிக்கலானதாக நேரிடுகிறது.
அறிவியல் என்ற ஒரு பெருந்தொகுப்புக்குள் பல்வேறு
பிரிவுகள் உள்ளன. அவற்றை மொழிபெயர்க்கும் பொழுது
அந்தந்தப் பிரிவினைத் தெளிவாக உணர்த்தும் வகையில்
அறிவியல் மொழிபெயர்ப்பு அமைந்தால் அம்மொழிபெயர்ப்பு
வெற்றியடைந்ததாகக் கொள்ளலாம்.
சான்றாக,
Cell, scale ஆகிய ஆங்கிலச் சொற்கள், உடலியல்,
உயிரியல், இயற்பியல் ஆகிய துறைகளில் வெவ்வேறு
பொருள்களை உணர்த்துகின்றன.
செல் |
(cell) |
- |
உயிரணு (உடலியல்) |
செல் |
(cell) |
- |
நுண்ணியம், சிறு அறை - (உயிரியல்) |
செல் |
(cell) |
- |
மின்கலம் (இயற்பியல்) |
ஸ்கேல் |
(Scale) |
- |
வளர்ச்சிப்படி (உடலியல்) |
ஸ்கேல் |
(Scale) |
- |
செதிள் (உயிரியல்) |
ஸ்கேல் |
(Scale) |
- |
அளவுகோல் (இயற்பியல்) |
இவற்றைப் பெயர்ப்பு மொழியில் எடுத்துரைக்கும்போது ஒரே
சொல்லாகக் கொண்டு உணர்த்தக் கூடாது; இயலாது.
அந்தந்தப் பொருளமைப்பிற்கு ஏற்றவாறு பெயர்ப்பு மொழியில்
பொருத்தமான சொற்கள் பயன்படுத்தப்படவேண்டும்.
6.3.2 பொருள் நிகரன்கள்
சொல்லுக்குச் சொல் நிகரன்களாகத் தேர்வு செய்வது
ஒருபுறம் இருக்க, மூலமொழியின் ஒரு சொல்லிற்கு நிகரான
அல்லது அப்பொருளைப் புலப்படுத்தும் வேறு சொற்கள்
பெயர்ப்பு மொழியில் அமைக்கப்படுகின்றன. இத்தகைய
சொற்கள் பொருள் அடிப்படையிலானவை என்பதால் பொருள்
நிகரன்கள் எனப்படும்.
பல ஆங்கிலக் கலைச்சொற்கள் ஒரே தமிழ்ச் சொல்லால்
விளக்கப்படுகின்ற நிலையும் இருந்து வருகிறது. சான்றாக, buoy,
float ஆகிய இரு சொற்களும் மிதவை என்ற ஒரே
சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. winding, coil, turn ஆகிய
சொற்கள் சுற்று என்ற ஒரே சொல்லாலேயே தமிழில்
சுட்டப்படுவதால் ஒரு செய்முறையை விளக்குவதில் சிக்கல்கள்
ஏற்படலாம். இச்சொற்களை முறையே, சுருணை, சுற்று, சுருள்
என்று மொழிபெயர்த்து தெளிவு செய்யப்பட்டால் அவற்றை
எளிதில் புரிந்துகொள்ள இயலும்.
‘gram’ என்ற பின்னொட்டிற்கு (suffix) ஈடாகத் தமிழில்
ஏழு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சான்று:
Pictogram |
- |
உருவப்படம், உருவ விளக்கப்படம் |
Seismogram |
- |
நிலநடுக்கப் பதிவி
(நிலநடுக்கமானி) |
Spectoheliogram |
- |
ஞாயிற்று ஒளிநிற அளவி (மானி) |
Electro
encephalogram |
- |
மின்மூளைமானி |
Magnetogram |
- |
காந்தப் பதிவு |
‘Gram’ என்ற பின்னொட்டினைப் படம், விளக்கப்படம், பதிவி,
அளவி, மானி, பதிவு
என மொழிபெயர்ப்பதை
அறிய முடிகிறது. பின்னொட்டு, வேர்ச்சொல்லுடன் (Root
word) இணையும் பொழுது பல பொருள்களை உணர்த்துகின்ற
தன்மை அறிவியலுக்கே உரித்தானதாகும். இத்தகைய புரிதல்
இல்லாத போது மொழிபெயர்ப்பில் சிக்கல் ஏற்படுகிறது.
6.3.3 முதலெழுத்துக் கூட்டுச் சொல்
சொற்கள் சிலவற்றை, முதலெழுத்துகளை அல்லது
சொல்லசைகளை வரிசைப்படுத்திச்
சுருக்கமாக இணைத்துச்
சொல்வதை முதலெழுத்துக் கூட்டுச் சொற்கள் எனலாம்.
சான்று:
Radar |
- |
ரேடார் |
Laser |
- |
லேசர் |
Tansi |
- |
டான்சி |
Sidco |
- |
சிட்கோ |
இந்த வகையில், சுருக்கமான முறையில் வழங்கப்படுவதை
அவ்வாறே ஒலிபெயர்ப்பாக
அமைப்பது அறிவியல்
மொழிபெயர்ப்பில் தவிர்க்க முடியாததாகும். விரிவான பெயரை
இவ்வாறு சுருக்கி வழங்குவதை, பெயர்ப்பு மொழியிலும்
அவ்வாறே எடுத்தாள வேண்டும். இதை விடுத்து வேறு
வகையைப் பின்பற்றினால் சிக்கல் ஏற்படும்.
6.3.4 கலவைச் சொற்கள் அல்லது
கலப்பினச் சொற்கள்
தனித்தனியான இரு சொற்களின் இணைப்பினைக்
கொண்டு ஆக்கப்படுகின்ற புதிய சொற்களைக் கலவைச்
சொற்கள் அல்லது கலப்பினச் சொற்கள் என்பர்.
Smoke + Fog |
> |
smog |
Television + Broadcast |
> |
Telecast |
Breakfast + lunch |
> |
Brunch |
இவ்வாறு தனித்த இரு சொற்கள் இணைந்து மற்றொரு
பொருளை உணர்த்தும் வகையில் இச்சொற்கள்
அமைந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர்
உருளைக்கிழங்குச் செடியையும் தக்காளிச் செடியையும்
இணைத்து உருவாக்கிய புதிய தாவரத்தை பொமேட்டோ
என்றே அழைத்தனர்.
Potato + Tomato > pomato
இதனைத் தமிழாக்கம் செய்தவர்கள் உருளைத்
தக்காளி
என்று வழங்கினர்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
மொழிபெயர்ப்பாளருக்கு எத்தகைய
பார்வை வேண்டும்? |
விடை |
2. |
இலக்கிய மொழிபெயர்ப்பில்
எழுகின்ற சிக்கல்கள் எவை? |
விடை |
3. |
சங்க இலக்கியங்களிலுள்ள எவற்றையெல்லாம்
அதே பொருளில் மொழிபெயர்க்க இயலாது? |
விடை |
4. |
எதை ஒரு சிறந்த மொழிபெயர்ப்புச்
சான்றாகக் காட்டலாம்? |
விடை
|
5. |
முதலெழுத்துக் கூட்டுச் சொல் என்றால்
என்ன? |
விடை
|
|
|