சிற்றிலக்கியங்கள், பிரபந்தங்கள் என்றும் வழங்கப்படும்.  இவை 96 வகைப்படும். அவற்றுள் சில வகைச் சிற்றிலக்கியங்கள் சமண சமயம் தந்த கொடையாகும். கிடைத்த சில சிற்றிலக்கியங்களை இனிக் காணலாம்.


4.1.1 கலிங்கத்துப்பரணி

ஆயிரம் யானையைப் போர்க்களத்தில் வென்ற வீரனைப் பாடும் நூல் பரணி என்ற சிற்றிலக்கியம் ஆகும். பரணி இலக்கியங்களுள் கலிங்கத்துப் பரணியே தலைசிறந்ததாகப் பாராட்டப்படுகிறது.

பாட்டுடைத் தலைவன், படைப்பாசிரியர்

குலோத்துங்க சோழன் காலத்தில் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தின் மேல் படையெடுத்து வென்றதைப் பாடுவது இந்நூல். இதன் ஆசிரியர் தீபங்குடி ஜெயங்கொண்டார். இவரைக் கவிச்சக்கரவர்த்தி என்றழைப்பர். தீபங்குடி என்பது சமணத் துறவியர் சங்கமிருந்த இடங்களில் ஒன்று. அந்த இடத்தைச் சார்ந்தவராக இருப்பதால் இவர் சமணராக இருக்கலாம் என்பர்.  இவர் காலம் 11-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. இந்நூல் சோழர் வரலாற்றினை அறிவதற்குப் பெரிதும் உதவுவது.


4.1.2 திருக்கலம்பகம்

உதீசிதேவர் அருளியது திருக்கலம்பகம்.     இவர் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஆர்ப்பாகை (ஆர்ப்பாக்கம்) என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவர் சாவக நோன்பி ஆவார். அதாவது சமண இல்லறத்தார். இவருடைய காலம் 15 -ஆம் நூற்றாண்டு எனலாம்.

மரபு மாற்றம்

கலம்பக நூல்கள் பொதுவாகப் பதினெட்டு உறுப்புகளையும் 100 பாடல்களையும் கொண்டதாய் அமையும். ஆனால் இக்கலம்பகம் 16 உறுப்புகளும் 110 பாடல்களும் உடையதாய் உள்ளது.

திருக்கலம்பகத்தின் பாடல்கள் எளிமையும் இனிமையும் நிறைந்தன. சான்றாக ஒன்று.

ஆதி நாள்புணர்
ஏதில் வல்வினை
கோதில் வாமனை
ஓதில் ஓடுமே

(ஏதில் = பகையாகிய, கோதுஇல் = குற்றமற்ற)

(இதன் பொருள்: எப்பொழுது தோன்றியது என்று அறிய முடியாத ஆதி கால முதல் இந்த உயிருடன் கலந்த வலிமை வாய்ந்த வினைகள், குற்றங்கள் இல்லாத அருகனைத் துதிக்க நீங்கிவிடும்.)

சமணசமயத் தத்துவங்களை மிக அருமையான முறையில் இனிதாக விளக்குவதில் இந்நூலுக்குத் தனிச் சிறப்புண்டு. இந்நூலில் உள்ள ‘நூன்மொழியுமாறு......’ எனத் தொடங்கும் 76- ஆம் பாடல் சமணத்தத்துவம் அனைத்தையும் செறிவாகக் கூறிப் போகிறது.

சைவ, வைணவ அடியார்களின் பாடல்களை நினைவு படுத்துவது போன்ற இனிய ஓசை நிறைந்த ஒரு பாடலைப் பார்ப்போமா?

பாடுவது உன்னடித் தாமரை, பல்வினை மாசறநின்று
ஆடுவது உன்னடி வாரப்புனல், அடியேன் தலைமேல்
சூடுவது உன்னடிச் சேடமலர், என் துணைக்கரங்கள்
கூடுவது உன்னடி; கோமான் எனக்கோர் குறையிலையே
(பாடல் : 45)

‘யான் வணங்குவது உனது திருவடி மலர்களே. நான் பிறவிதோறும் ஈட்டிய வினையழுக்கு நீங்க நின்று குளிப்பது உனது பாதத்தில் பட்ட நீரில். நான் எனது தலைமேல் சூடுவது உனது திருவடியில் அர்ச்சனை செய்த மலர்களையே. எனது இரு கைகளும் குவிவது உனது திருவடிகட்கே. அருகப் பெருமானே! உனது அடியவனாகிய எனக்கு இனி ஒரு குறையும் இல்லை’ இப்பாடலின் ஓசையும் பொருளும் இறையுணர்வை  எத்துணை அழகாக வெளிப்படுத்துகின்றன!


4.1.3 திருநூற்றந்தாதி

இது மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள 22வது தீர்த்தங்கரராகிய நேமிநாதர் மீது பாடப்பட்ட நூலாகும். ஒரு பாடலின் அந்தமே அடுத்த பாடலின் ஆதியாக அமைத்துப் பாடப்படுவது அந்தாதிச் சிற்றிலக்கியமாகும். அந்தம் என்பது இறுதி;  ஆதி என்பது முதல். ஆக, ஒரு பாடலின் இறுதிச் சொல்லை அடுத்த பாடலின் முதலில் அமைத்துப்பாடுவது அந்தாதியாகும்.


ஆசிரியர்

இதனை இயற்றியவர் அவிரோதி நாதர். இவரை அவிரோதி ஆழ்வார் என்றும் அழைப்பர். வைணவ சமயத்திலிருந்து மாறி, சமணக்கோட்பாட்டைப் பின்பற்றிய சமணர். நேமிநாதரின் சிறப்பில் தோய்ந்து பாடும் பாடல்கள் பக்திச் சுவையைச் சுவைக்க வைக்கின்றன.

நூற்பயன்


நூற்பயன் கூறும் போது ‘தீக்கொண்ட வல்வினை சேரார் சிவகதி சேர்பவரே’ அதாவது இந்த நூலைப் படிப்பவர்கள் தீமையை உடைய வலிய வினைகளைச் சேராமல் வீடுபேற்றை அடைவார்கள் என்பார். ‘அவிரோதி நாதர் அருளிய இந்த அந்தாதி நூலை மறவாதிருந்தால் துக்கமில்லை; தீய பாவங்கள் போகும்; சிவந்த தாமரைப் பூவில் வீற்றிருக்கும் திருமகள் சகல பாக்கியத்தையும் கொடுத்து ஆதரிப்பாள்’ என்றும் கூறுவார்.


இறைவனிடம் வேண்டுதல்

ஆன்மாவிலிருந்து வேறான (முற்றிலும் புறம்பான) ஒரு கடவுளைச் சமண சமயம் ஏற்பதில்லை. விடுதலை அடைந்த எல்லா ஆன்மாக்களும் கடவுள் தன்மையை அடைந்ததாகக் கருதப்படும். பற்றினைப் போக்கி, வினைகளைக் களைந்து, பிறப்பினை நீக்கிய ஆன்மாவே சமணர் வணங்கும் தெய்வம். உள்ளத்தில் அவர் நிறைந்திருக்க வேண்டுகிறார் நூலாசிரியர்.

பிற மதக் கண்டனமும் இதில் இடம்பெறுகிறது. பக்தி இயக்கக் காலத்திலும் அதன் பின்னரும் ஒவ்வொரு சமயமும், தத்தம் இறைவனை வழிபட்டார் யாராயினும் அவர் போற்றப்படத்தக்கார் என்றும், உயர் குலத்தவராயினும் தம் இறைவனைப் பணியாதார் இழிந்தவர் என்றும் கருதும் போக்கும் நிலவியது. அந்தப் போக்கினை இங்கும் காண்கிறோம்.


4.1.4 அப்பாண்டை நாதர் உலா

தலைவனுடைய பவனியைக் கண்டு நங்கையர் காதல் கொண்ட நிகழ்ச்சியைப் பொருளாகக் கொண்டு தோன்றுவதே உலா இலக்கியம். தெய்வத் தலைவர் மீதும் மானுடத் தலைவர் மீதும் இது பாடப்பெறும். உலா கலிவெண்பாவினால் அமைக்கப் பெறும்.

பாட்டுடைத் தலைவன்

திருநறுங்கொண்டை என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள பார்சுவநாதரை துதித்துப்பாடுவது. அவரையே அப்பாண்ட நாதர் என வழங்குவர். இவர் 23-ஆவது தீர்த்தங்கரராவார். முக்குடைக்கீழ் விளங்கும் தேவாதி தேவன் என்றும் மன்மதனை வென்று, காமம் முதலிய பகைகளைக் கடிந்தவர் என்றும் போற்றப்படுகிறார்.

ஆசிரியரும் காலமும்

இதன் ஆசிரியர் அனந்த விசயர். இவர் 16 அல்லது 17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்பர்.

மரபு மாற்றம்

ஏழு பருவ மகளிரும் உலாத்தலைவர் மீது காதல் கொண்டு தம் வயமிழந்து, விரகதாபமுற்றுப் பேசுவதாக உள்ள நிலைமையே பிற உலா நூல்களில் காணப்பெறும். ஆனால் காமனைக் கடிந்த பெருமானாகிய பார்சுவநாதர் திருவுலாவைக் கண்டு பேதை முதலாய் ஏழு பருவ மங்கையர் (பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்) காதல் வயப்பட்டு மொழியும் பேச்சாய் இல்லை. மாறாக அப்பாண்டை நாதரைத் தரிசித்த ஏழு பருவ மங்கையரும் அவருடைய தெய்வீக ஒளியில் ஈடுபட்டு அவருடைய பெருமையைப் பலவாறு போற்றித் துதிக்க முற்பட்டு விடுகிறார்கள். பெதும்பைப் பருவப்பெண்ணின் நிலையை அறியச் சில பாடல் வரிகள்:

கழங்காடல் கைம்மறுத்துக் காரிகையார் கூடி
வழங்கும் அருட்கலை மன்னி-கொழுங்கன்றி
பூணாரம் தானாடப் பொற்கிண் கிணியார்ப்பச்
சேணாடர் ஏத்துஞ் சிலம்பு அலம்பத் - தோணுந்
திருநுதல் முத்து அரும்பத் தேரெதிரே சென்று
இருகரமும் கூப்பி இறைஞ்சிப் பரவவே
(கண்ணி : 335-338)

(இதன் பொருள்: பெதும்பைப் பருவத்தினளான (வயது 7 முதல் 13 வரை) அப்பெண் கழங்காடுதலைக் கைவிட்டு, சிலம்பு ஒலிக்க, சிறுநுதல் வியர்க்க, தோழியரோடும் ஓடிவந்து, தெருவில் தேர் உலாவைக் கண்டு, வணங்கி மனம் நெகிழ்ந்து போற்ற...)

எனவே இங்கு உலா இலக்கியம் பக்தி இலக்கியமாகப் பரிணமித்துள்ளது எனலாம். உலா இலக்கிய மரபில் இது புதுமை விளைத்துள்ள ஓர் இலக்கியமாகும்.

நூலின் சிறப்பு

உலா நூல்களிலேயே 620 கண்ணிகளில் அமைந்த பெரிய நூல் இது. சமண சமயப் போக்கிற்கு ஏற்பப் பஞ்சகல்யாணம் விளக்கப்படுகிறது. பஞ்சகல்யாணம் என்பது,

தீர்த்தங்கரர் கர்ப்பத்தில் உருவாகும்போது - கர்ப்ப கல்யாணம்
குழந்தையாய்ப் பிறக்கும்போது - ஜன்ம கல்யாணம்
துறவு மேற்கொள்ளும்போது - தப கல்யாணம்
தவத்தைச் செய்யும்போது - ஞான கல்யாணம்
ஆன்மவிடுதலை அடையும்போது - நிர்வாண கல்யாணம்


இவை, தேவர்களின் தலைவனான இந்திரன் பிற தேவர்களோடு சேர்ந்து தீர்த்தங்கரராக ஆவோர்க்குச் செய்வன ஆகும்.


4.1.5 திருப்பாமாலை

இந்நூல் 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. திருப்பாமாலையின் முதற்பாடல் சமணர் தம் கருத்தை முற்றுமாகப் புதுமைப்போக்கில் காட்டுகிறது. அதாவது இதுவரை மும்மணிகளின் (நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகியன) வழியில் சென்றாலல்லது வீடுபேறு கிடைக்காதென உறுதிபடக் கூறிய சமணம், இதில் பக்திவழியில் வீடுபேறு பெற முயல்வதாக அமைந்துள்ளது. இந்த மாற்றம் பக்தி இயக்கத்தின் தாக்கத்தால் நேர்ந்திருக்கலாம்.  அதன் விளைவாக மும்மணிக்குக் (அறநெறிக்கு) கொடுத்த முக்கியத்துவம் பக்தி நெறிக்குக் கொடுக்கத் தோன்றியிருக்கலாம். அதனால் சித்த பக்தி, சைத்திய பக்தி, பஞ்சகுரு பக்தி, ஆருகத பக்தி, நந்தீசுவர பக்தி எனப் பாடல்கள் காணப்படுகின்றன.

நூற்பயன்

அருக சரண அகவல் என்ற பகுதி, சமண சமய நெறியில் நின்றால் தேவரும் வணங்கத்தக்க உயர்கதி கிடைக்குமென்ற நம்பிக்கையைக் குறிக்கிறது. அதாவது இறைவனைப் பாடி, வணங்கி, அக்கதியைப் பெற ஒருவர் முயல்வதாக ஒருபாடல் அமைந்துள்ளது. அவர் இறைவனாகிய அருகனது உரையை நம்பும் ஒருவராக இருக்க வேண்டும். இவ்வாறு கூறும் போக்கு, பக்தி இயக்கத்தின் தாக்கம் என்று கூறலாம்.

4.1.6 பிற சிற்றிலக்கிய நூல்கள்

திருமேற்றிசை அந்தாதி திருநறுங்கொண்டையில் எழுந்தருளியுள்ள பார்சுவ நாதர் மீதான அந்தாதிப் பாடல். இவர் 23-ஆவது தீர்த்தங்கரர் என்பதை முன்பே பார்த்தோம்.

மேருமந்தரமாலை என்பது அம்மானைப் பாடலாகும். இதுவும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. நல்லூரில் வாழ்ந்த ஸ்ரீவாமனந்தாச்சாரியார் எழுதியது. நல்லூர்  வடார்க்காடு மாவட்டத்தில் உள்ளது. இந்த அம்மானைப் பாடல் மேருமந்தரப் புராணத்தின் சுருக்கம்போல் அமைந்துள்ளது. அதனால் மேருமந்தர புராணத்தில் உள்ள துதிகள், சமயத் தத்துவங்கள், தர்ம விளக்கங்கள் ஆகியவற்றை விடுத்துக் கதைப்போக்கை மட்டும் கூறுகிறது.

ஜினேந்திர ஞானத் திருப்புகழ் நூறு சந்தப் பாடல்களைக் கொண்டுள்ளது. பெண்ணாசையை எடுத்துக் கூறி, அதிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று ஆசிரியர் இறைவனை வேண்டுகிறார்.

அருங்கலச் செப்பு

சமணசமயக் கோட்பாடுகளை உணர்த்தும் நூல். சமண சமயத்துச் சாவகர்களின் (இல்லறத்தாரின்) ஒழுக்கங்களைப் பற்றிக் கூறும் நூலாகும். குறள்வெண்பா யாப்பினால் ஆக்கப்பட்டது.

வீடுபேற்றை அடையும் வழியை மிக எளிய நடையில் தெளிவாகக் கூறுகிறது இந்நூல். இதன் ஆசிரியர் பெயரோ, காலமோ அறிய இயலவில்லை.

இதற்கு முதல் நூலாக அமைந்தது ஸ்ரீ சமந்த பத்ராசாரியாரால் இயற்றப்பட்ட இரத்ன கரண்டகம் என்று கூறுவர். இரத்ன கரண்டகத்தில் கூறியிருப்பவையே இங்கும் கூறியிருப்பதால் அதன் வழிநூல் எனலாம்.

திருவெம்பாவை

திருவெம்பாவை,     மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, ஆண்டாளின் திருப்பாவை ஆகியவற்றைக் கண்டு அதைப் போன்றே இயற்றப்பட்டிருக்கலாம். திருவெம்பாவை அவிரோதி நாதரால் இயற்றப்பட்டதாகும். அருகனைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. 20 பாடல்கள் மயிலைநாதர் மேல் பாடப்பட்டுள்ளன. மயிலைநாதர் என்பது மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள நேமிநாதரைக் குறிக்கிறது. சான்றாக ஒரு பாடலைக் காணலாமா?


மகரக் குழலாட மாணிக்கப் பூணாடச்
சிகரக் குழலாட செறிவண் டிசைபாட
முகரப் புனலாடி முக்குடையான் தாள்பாடி
விகலக் கவிபாடி வேதப் பொருள்பாடிச்
சகல சிநத் திறைவன் தன்னனைய தாள்பாடிப்
புகலாம் பதியருகன் பொற்றா மரைபாடி
இகலார்ந் தெனையளித்த வெற்கையான் தாள்பாடி
பகரும் பிறப்பறவே பாடேலோ ரெம்பாவாய் (14)

(சிநன் = ஜினன், முகரம் = சங்கு, விகலக் கவி = குறையற்ற கவி, வெற்கையான் = வெற்றியுடைவன்)

ஆதிநாதர் பிள்ளைத் தமிழ்
    

இது பத்துப் பருவங்களையும் 100 பாடல்களையும் உடையது.

சீவசம்போதனை

இது, பல்வகைப் பாவால் இயன்ற, உரைநடைப் பகுதிகளையும் கொண்ட சித்தாந்த நூல். 550பாடல்களைக் கொண்டது. காலம் கி.பி.14-ஆம் நூற்றாண்டு. இப்படிப் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துத் தமிழுக்கு வளம் சேர்த்தனர் சமணப் பெரியோர்.

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1. சமணம் செல்வாக்கு இழக்க முக்கிய காரணமாக அமைந்தது எது?.
விடை
2. பக்தி இயக்கம் மக்களைக் கவர என்ன காரணம்?
விடை
3. திருநூற்றந்தாதி யார் பாடியது? பாட்டுடைத் தலைவன் யார்?
விடை
4. திருக்கலம்பகம் இயற்றிய ஆசிரியர் யார்? அவர் தம் நூலில் செய்த மாற்றம் யாது?
விடை