|
2.3 எழுபதுகளில்
தமிழ்ச் சிறுகதையின் போக்குகள்
எழுபதுகளில் வெளியான சிறுகதைகளுக்குப் பத்திரிகையின்
வளர்ச்சியும், ஜனரஞ்சக எழுத்தாளர்களும் உந்து சக்தியாயினர்.
இதன் தொடர்ச்சியாகப் படைப்பாளர்களின்
சிந்தனையில்
மாறுதல்கள் ஏற்பட்டன. இந்த மாறுதல்கள் இலக்கிய வளர்ச்சிக்கும்,
அதே சமயம் வீழ்ச்சிக்கும் காரணமாயின.
எனினும் இந்தக்
காலகட்டத்தில் தோன்றிய படைப்பாளர்கள்
சமுதாயத்தின்
அடித்தளத்தில் முடங்கிக் கிடக்கும் மக்களின் வாழ்க்கையையும்
ஆராய முனைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கால
கட்டத்தில் தோன்றிய சிறுகதைகள் புரட்சிகரமான கதைகளாகவும்,
மாறுபட்ட கதைகளாகவும் தோன்றின.
சமூகப்பயன் இச்சிறுகதைகள் மன
உணர்வுகள், நினைவுகள், சிக்கல்கள்,
பாலுணர்வுகள், மன எழுச்சிகள், போராட்டங்கள்,
வெற்றிகள்,
வீழ்ச்சிகள், உன்னதங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு
சமூகத்தை அடையாளம் காட்டின.
பழைய மரபுகளை
உடைத்தெறிந்து மாற்றத்தை, மறுமலர்ச்சியை
ஏற்படுத்தும்
சிறுகதைகளைப் பெண் எழுத்தாளர்கள் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வகையில் இடம்பெறும் எழுத்தாளர்களாக அம்பை,
ராஜம் கிருஷ்ணன், சூடாமணி, சிவசங்கரி, வாஸந்தி,
இந்துமதி,
ஜோதிர்லதா, கிரிஜா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
சிறுகதை மன்னன் என்று பெயரெடுத்த ஜெயகாந்தன்
இக்கால
கட்டத்தைச் சார்ந்தவர் ஆவார்.
உள்மனத்தை வெளிப்படுத்தும் பாத்திரங்களைக்
கவனமாகச்
சிறுகதைகளில் கையாள்பவராக அசோகமித்திரன்
குறிப்பிடத்தகுந்தவர் ஆகிறார்.
எதார்த்தத்தை ஆரோக்கியமான
பார்வையில்
சித்தரிப்பவராக இந்திரா பார்த்தசாரதி விளங்குகிறார்.
மேற்கண்ட வகையில் எழுபதுகளில்
தோன்றிய சிறுகதைகளின்
சமூகப் போக்கினை அறிய முடிகிறது.
இலக்கியப் பயன் இக்காலகட்டத்தில் எதையும்
எழுதலாம் என்ற மனப்பான்மை
படைப்பாளர்களிடம் தோன்றியதால் அறுபதில்
இலைமறைவு
காய்மறைவாகச் சித்திரிக்கப்பட்ட விஷயங்கள்
எழுபதுகளில்
எதார்த்த நோக்கோடு அப்பட்டமாய் விவரிக்கப்பட்டன. அதனால்
அச்சிறுகதைகள் நச்சிலக்கியங்களாகக் கருத
இடமேற்பட்டது.
எழுபதுகளில் ஆண்டுக்கு இரண்டாயிரம் கதைகள் வெளிவந்தும்,
தரத்திலும், தகுதியிலும் உயர்ந்த கதைகள் மிகக்
குறைவாகவே
இருந்தன. கடினச் சொற்கள் தவிர்க்கப்பட்டு எளிய நடையுடைய
சிறுகதைகள் படைக்கப்பட்டன. மேலும் பத்திரிகை
மற்றும்
படைப்பாளர்களின் வியாபார நோக்கு, சிறுகதைகளின் இலக்கியத்
தன்மையைப் பாதித்தது.
எழுபதுகளில் சிறுகதையின்
தொடக்கம் வளர்ச்சிக்கு
அறிகுறியாயினும். முடிவில் அது தேக்கம் மற்றும் வீழ்ச்சியைக்
கண்டுவிட்டது. வளர்ச்சியும், வீழ்ச்சியும் கால ஓட்டத்தின் இரு
அங்கங்களாகக் கருதும் நிலையில்
சிறுகதைகள் மீண்டும்
வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளதையும்
மறுக்க
இயலாது. எழுபதுகளில் சிறுகதையின் போக்குகளை அறியும்
பொருட்டு எடுத்துக்காட்டாக 3 சிறுகதைகளைக் காணலாம்.
2.3.1
ஜெயகாந்தனின் சிறுகதை - பொம்மை
சிறுகதை
மன்னன் என்றழைக்கப்படும் ஜெயகாந்தன்
ஒரு
ஜனரஞ்சகப் படைப்பாளர். இவரது கதைகளில் எதார்த்தமும்,
அசாத்தியக் கற்பனையும் கலந்துள்ளதைக் காணமுடிகிறது. இவரது
எழுத்துகள் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி
செய்தன. அதிகமான அளவில் இவர் பத்திரிகைகளில் சிறுகதைகள்
எழுதியும் தன்னுடைய தனித்தன்மையை இழக்காதவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
இனி, பொம்மை
சிறுகதையின் கதைச்சுருக்கம்,
படைப்பாளரின் சிந்தனை, இலக்கியத்தரம் ஆகியவற்றைப்
பார்ப்போம்.
கதைச் சுருக்கம் பணக்கார வீட்டுக் குழந்தை ராணி
நிறையப் பொம்மைகளை
வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். பிளாட்பாரத்தில்
வசிக்கும்
கறுப்பு நிறக் குழந்தை அவள் விளையாடுவதையும்,
பொம்மைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
பணக்கார வீட்டுக் குழந்தை கறுப்புக் குழந்தையைப் பார்த்து அது
இருக்கா? இது இருக்கா? என்று பல்வேறு கேள்விகளைக்
கேட்டுவிட்டு இறுதியில் பொம்மை இருக்கா? என்று கேட்கிறது.
அந்தக் கறுப்புக்குழந்தை அவள் எது கேட்டாலும் இல்லையென்றே
தலையாட்டுகிறது. ராணி பேசும் மழலை அவளுக்குப்
புரியாவிட்டாலும், அவளுக்குப் புரிந்த வகையில் தனக்கும் ஒரு
பொம்மை வேண்டும்; அதற்குச் சட்டை போட்டுப் பார்க்க
வேண்டும்; தானும் ஒரு சட்டையைப் போட்டுக்கொள்ள வேண்டும்
என்பதுதான்.
அந்தச் சமயம் பார்த்து கறுப்புக்குழந்தையின் அம்மா
அவளை அழைக்க, அவள் ஓடுகிறாள். அவள் அம்மா சித்தாள்
வேலை பார்க்கிறாள். அவளுக்கு அப்பா இல்லை. ஒரு நோஞ்சான்
தம்பிப் பாப்பா மட்டும் இருக்கிறான். அவள் தன் அம்மாவிடம்
அடம்பிடித்து இருக்கும் ஒரே ஒரு கிழிசல் சட்டையை வாங்கிப்
போட்டுக்கொள்கிறாள். அம்மாவிடம் விளையாடுவதற்கு ஒரு
பொம்மை வேண்டும் என்று கேட்கிறாள். அம்மாவும் நாளைக்குப்
பொம்மை வாங்கித் தருகிறேன். அது வரையிலும் நீ தம்பிப்
பாப்பாவுடன் விளையாடு என்கிறாள்.
மீண்டும் கறுப்புக்குழந்தை ராணி வீட்டிற்குச் செல்கிறாள்.
அவள் பொம்மைக்குக் குளிப்பாட்டுவதைப் பார்த்துவிட்டு,
இவளிடம் பொம்மை இல்லாத காரணத்தால் தன் தம்பியையே
பொம்மையாக எண்ணி குளிப்பாட்ட, நோஞ்சான் குழந்தை
இறந்துவிடுகிறது. அவள் அம்மா வருவதற்குள் அவனுக்குப்
பொட்டிட்டு, அழகு பார்க்கிறாள். அம்மா வந்தவுடன் தம்பியைப்
பொம்மையாக்கிவிட்டேன் என்று கூற அவள் ஆசை மகனைப்
பார்த்துக் கதறி அழுகிறாள். அம்மா எதற்கு அழுகிறாள் என்று
தெரியாமலே கறுப்புக்குழந்தையும் அழத் தொடங்குகிறாள்.
இத்துடன் கதை முடிகிறது.
இக்கதை தொடர்பான படைப்பாளரின் சிந்தனையைக்
காணலாம்.
படைப்பாளரின் எதார்த்தம் மற்றும் கற்பனை வியக்க
வைக்கிறது. ஏழை, பணக்காரன் என்ற இரு வேறு நிலைகளை
வறுமை, செல்வம் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தி
அவலச்சுவையுடன் கதையை முடித்திருக்கிறார். சிறுகதை
மனத்தை விட்டு அகலாத தன்மைக்குப் படைப்பாளரின்
தனித்தன்மையே காரணமாகிறது.
உயிருடன் இருக்கும் குழந்தையைப் பொம்மையாக
எண்ணி
விளையாடும் ஏழ்மை நிலை மனத்தை நெருடுகிறது.
சமுதாய ஏற்றத்தாழ்வுகள் சுட்டப்படுகின்றன.
பணக்கார வீட்டுப் பொம்மைக்குப்
புதுச்சட்டையும், ஏழை
வீட்டுக் குழந்தைக்குக் கிழிசல் சட்டையும் போட்டு, சிந்திக்க
வைக்கிறார் படைப்பாளர்.
இலக்கியத்
தரம்
கதையின் தலைப்பு, பொருத்தமுடையதாய் அமைந்து
இலக்கியத் தன்மைக்கு இடம் கொடுக்கிறது. குழந்தையின் பேச்சு
மொழி, உயர் சமூக மொழி, கீழ்மட்டச் சமூக மொழி ஆகியன
சிறப்பாய் வெளிப்பட்டுள்ளன. படைப்பாளரால் கதைக்குத் தீர்வு
கூறப்படாமல் கதைச்சூழல் மட்டும் விவரிக்கப்பட்டுச் சிந்தனையைத்
தூண்டுவதாகிறது. சமூகத்தில் ஏழைகள் எப்பொழுதும் துன்பத்தை
அனுபவிப்பவர்களாகவே காட்டப்படுவதற்கு முடிவு காண வேண்டும்
என்பது சுட்டப்படுகிறது. இவ்வளவில் இச்சிறுகதை இலக்கியத்
தரத்திற்கு உரியதாகிறது.
2.3.2
கி.ராஜநாராயணனின் சிறுகதை - கதவு
இவருடைய
சிறுகதைகள் கிராமத்தைக் கிராமமாகக்
காட்டுவதாயுள்ளன. கிராம மக்களின் வாழ்க்கை
நெறிகளை
அழகாகப் படம்பிடித்துள்ளன. இவருடைய
கதவு சிறுகதையில்
கிராம மக்களின் வறுமை வாழ்க்கை, கதவு இல்லாமல் அவர்கள்
படும் துன்பம், கதவு திரும்பக் கிடைக்கப் பெற்றவுடன் அவர்கள்
அடையும் மகிழ்ச்சி ஆகியவை இயல்பானதாய் அமைந்துள்ளன.
இனி, கதவு சொல்லும் கதையைக் காணலாம்.
கதைச் சுருக்கம்
அந்தப் பெரிய
வீட்டின் கதவின் மீது குழந்தைகள் ஏறி
விளையாடுகின்றனர். குழந்தைகள் அந்தக் கதவினை ஒரு
பஸ்
போல் பாவித்து ஏறி, இறங்குவதுமான
விளையாட்டினை
மேற்கொண்டனர். அத்துடன் தங்களுக்குப் பிடித்த படங்களையும்
ஒட்டி விளையாடினர்.
தாத்தா, பாட்டி இருந்த காலத்திலிருந்தே அந்தக் கதவு
விளையாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்டது. வறுமையின் காரணமாகத்
தீர்வை செலுத்தாததால் தலையாரி சகிதம் நான்கு பேர்
வந்து
கஷ்டப்பட்டுக் கதவைக் கழற்றிச் செல்கின்றனர். குழந்தைகளும்
கதவை ஊர்வலமாக எடுத்துச் செல்வதாகக் கருதி மேளம், நாதசுர
ஓசையை எழுப்பியபடி கதவின்
பின்னே கும்மாளமிட்டுச்
செல்கின்றனர். குழந்தைகள் விரட்டப்படும் பொழுது தான் இனிக்
கதவு திரும்பி வராது என்று அவர்களுக்குப் புரிகிறது, அதன்பின்
கதவு இல்லாமல் அவ்வீட்டினர்
படும் இன்னல்கள்
காட்டப்படுகின்றன. குளிரைத் தடுக்கக் கதவு இல்லாத நிலையில்
குழந்தை இறந்து விடுவதும், நாய்
புகுந்து சோற்றினைச்
சாப்பிடுவதும், குழந்தைகள் கதவு விளையாட்டு
விளையாட
முடியாமல் மனத்தளவில் பாதிக்கப்படுவதும்
காட்டப்படுகிறது.
இறுதியில் குழந்தைகள் ஒரு சாவடியில் கதவு
இருப்பதைக்
கண்டுபிடித்து அதைத் தடவிப் பார்த்து முத்தமிட்டு அழுகின்றனர்.
அதைத் தூக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு கதை
நிறைவு
செய்யப்பட்டுள்ளது.
படைப்பாளர் இச்சிறுகதையின்
வழிக் கிராமத்துச் சூழலையும்,
குழந்தைகளின் மன
உணர்வுகளையும் இயல்பாக
வெளிப்படுத்தியுள்ளார். மேலும், வறுமை வாழ்க்கையில்
கதவு
பெறுமிடம் படைப்பாளரின் சிந்தனையாக வெளிப்படுகிறது.
இதன்
மூலம் கீழ்க்காணும் சிந்தனைகள் பெறப்படுகின்றன.
ஒரு வீட்டிற்குக் கதவு
எவ்வளவு முக்கியம் என்பது
காட்டப்படுகிறது.
கிராமத்துக் குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகக் கதவு
இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.
குழந்தைகளின் உயிரோடு கலந்த நிலையில்
கதவு
காட்டப்படுகிறது.
இலக்கியத் தரம்
கிராமச் சமூக நடைமுறைகளை அறிய
முடிகிறது. அவர்களது
பிரச்சனைகளையும் உணரமுடிகிறது. குழந்தைகளின் மனநிலையில்
நின்று படைப்பாளர் நம்மையும் சிந்திக்க வைத்திருப்பது அவரின்
இலக்கியத் தரத்திற்குக் கிடைத்த
வெற்றியாகக் கருத
இடமேற்படுகிறது. குழந்தைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட
பொம்மை மற்றும்
கதவு இரண்டிற்குமான சிந்தனை மாறுபாடே
சிறுகதையின் போக்காகும்.
2.3.3 அசோகமித்திரனின்
சிறுகதை - மழை
அசோகமித்திரன் எழுபதுகளில்
சிறந்த கதையைத் தந்த
படைப்பாளருள் ஒருவர். வாழ்க்கை நிகழ்வுகளை அதன் போக்கில்
ஆராயக் கூடியவர். இவர் கதைகளில் சொற்சிக்கனம்
அதிகம்.
இவருடைய பாத்திரங்கள் மிகவும் எளிமையானவர்கள். இவர் எந்தக்
குறிப்பிட்ட போக்கிலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாதவர்.
இவர் எழுதிய மழை எனும்
சிறுகதை, வாழ்க்கை நிகழ்வுகளை
அதன் போக்கில் வெளிப்படுத்துவதை இங்குக் காணலாம்.
கதைச் சுருக்கம் கதை, மழையைப்
பற்றிய ஒரு குழந்தையின் சிந்தனையாக
அமைந்துள்ளது. முதலில் அந்தக் குழந்தை மழை பெய்தால்
நீ
நனைந்து விடுவாய் என்று அம்மா கூற, உடனே டாக்டர், மருந்து
பற்றிச் சிந்திக்கிறான். பின் மைதானத்தில் இருக்கும் சின்னச் செடி,
மரங்களைப் பார்க்கிறான். மேகங்களைப் பார்த்து யானையாகவும்,
எருமையாகவும் கற்பனை செய்கிறான். அவன் கற்பனையில் யானை
படிக்கிறது. எருமையின் கருமை நிறமும், அதன்
அழுக்கும்
வெறுப்பினை ஏற்படுத்துகிறது. மழை பெய்தால் எருமை மீதிருக்கும்
அழுக்குப் போய்விடும் என்று எண்ணுகிறான்.
இதே சிந்தனையுடன் இரவு
உறங்கி, காலை எழுந்ததும்
மைதானத்தில் நீர் தேங்கியிருப்பதையும்,
மரம் செடிகளில்
நீர்த்துளிகள் இருப்பதையும், எருமை மாடு சுத்தமாக இருப்பதையும்
பார்க்கிறான். உடனே அம்மாவிடம் நேற்று மழை பெய்ததா? என்று
கேட்கிறான். அம்மா உனக்கு எப்படித்
தெரியும் என்று
ஆச்சரியப்படுகிறாள். குளித்துவிட்டு அவன் சட்டை போட, அது
அவனுக்குப் போதவில்லை. அப்பா, அம்மா
வளருவதில்லை.
அவன் மட்டும் அடிக்கடி வளருவதாகக் கருதுகிறான். மறுநாள்
காலையில் மீண்டும் மைதானத்தைப் பார்க்கிறான். பெரிய மரங்கள்
அப்படியே இருக்கச் சிறிய
செடிகள் வளர்ந்திருப்பதைக்
காண்கிறான். சின்னச் செடிகளின் இலைகள் நனைந்திருப்பதையும்
பார்க்கிறான். அம்மாவிடம், நான் ஏன் பெரியவன்
ஆகிறேன்
தெரியுமா? என்று கேட்கிறான். அவள் அம்மா, ‘நீ சாப்பிடுவதால்’
என்று கூறுகிறாள். இல்லை நான் மழை பெய்வதால் வளருகிறேன்
என்று கூறுவதுடன் கதை நிறைவடைகிறது.
படைப்பாளரின்
சிந்தனை ஓட்டம் சிறுகதையின்
போக்கினைக் காட்டுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் கற்பனை
மற்றும் ஒப்பீட்டுச் சிந்தனையை அறிய முடிகிறது.
-
மழை பெய்தால் சிறு செடிகள் வளருவது போல்
குழந்தைகளும் மழை பெய்வதால்தான் வளருவதாகக்
கருதுவது.
-
மழையினால் பெரிய மரங்கள் வளராததுபோல்
பெரியவர்களும் மழையினால் வளருவதில்லை என்று
எண்ணுதல்.
-
எருமைகள் சுத்தமாயிருப்பதை வைத்து மழை
பெய்திருப்பதைக் குழந்தை அறிவது.
-
குழந்தைகள் சிறந்த கற்பனை
ஆற்றலை
வெளிப்படுத்துதல்.
மேற்கண்டவற்றின்
மூலமாகப் படைப்பாளரின் புதிய போக்கு
சிறுகதையின் போக்கினை நிர்ணயிப்பதை அறிய முடிகிறது.
இலக்கியத் தரம்
குழந்தைகளின் எண்ண
ஓட்டத்தை அறியச் செய்யும்
படைப்பாக இது விளங்குகிறது. குழந்தையின் எண்ணங்களுக்கு
வடிகாலாகப் பெற்றோர்கள் விளங்க வேண்டும்
என்பது
அறியப்படுகிறது.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I |
1.
|
சிறுகதையின் போக்குகள் என்றால் என்ன?
|
|
2.
|
தொடக்க காலச் சிறுகதைகளின் போக்குகளுக்கு
யாருடைய கதைகள் எடுத்துக்காட்டுகளாய்க்
கூறப்பட்டுள்ளன?
|
|
3.
|
சிறுகதை
மன்னன் என்றழைக்கப்படுபவர் யார்? இவர்
எந்தக் கால கட்டத்தைச் சார்ந்தவர்? |
|
4.
|
எழுபதுகளில் எழுந்த சிறுகதைகளின் போக்குகளுக்கு
யாருடைய சிறுகதைகள் எடுத்துக்காட்டுகளாய்க்
கூறப்பட்டுள்ளன?
|
|
|