3.2 கதைக்கரு


    பேராசிரியர் வானமாமலை வகைப்படுத்தியுள்ள கருத்துகள்
கொண்ட கதைகளே இங்கே அறிமுகம் செய்யப்படுகின்றன.

3.2.1 கலப்பு மணம்

    சாதி விட்டுச் சாதி மாறிக் கலப்பு மணம் செய்து கொண்ட
முத்துப்பட்டன், மதுரை வீரன், சின்னநாடான் கதைகள்
சமூகக் கதைப் பாடல்களாக மக்களிடையே செல்வாக்குப்
பெற்றுள்ளன.

· முத்துப்பட்டன் கதை

    முத்துப்பட்டன் நெல்லையில் வேதம் ஓதும் அந்தணன். இவன்
தன் சகோதர்களுடன் முரண்பட்டு, ஒரு சிற்றரசனிடம் வேலை
செய்கிறான். பின்னர், சகோதரர்கள் அவனைக் கூட்டிக்கொண்டு
வருகின்றனர். இடையில் பொம்மக்கா, திம்மக்கா என்று
சக்கிலியர் குடியில் பிறந்த இரு சகோதரிகளின் பாடலைக்
கேட்டு மயங்கி அவர்களை விரும்புகிறான். அண்ணன்களிடம்
இதைச் சொல்ல அவர்கள் மறுக்கின்றனர். இவன்
கேட்கவில்லை. எனவே இவனைக் கற்குழிக்குள் தள்ளி மூடி
விடுகின்றனர். தப்பி வந்த முத்துப்பட்டன், தன் காதலியரின்
தந்தை வாலப்பகடையின் கருத்துப்படி குடுமி, பூணூல் நீக்கிச்
சக்கிலியர் தொழிலையும் மேற்கொள்கிறான். திருமணம்
நடக்கிறது. மலைக்காவல் சக்கிலியனான வாலப்பகடையின்
காவல் இடத்தில் பசுக்     கூட்டங்களை     வன்னியர்
கொள்ளை அடிக்கின்றனர் எனக் கேள்விப்பட்ட முத்துப்பட்டன்
அவர்களோடு போரிட்டு விரட்டுகிறான். ஆனால் ஒருவன்
மட்டும் ஒளிந்திருந்து இவனைக் கொன்று விடுகிறான். சாவதற்கு
முன் தன்னை ஒளிந்திருந்து தாக்கியவனைக் கொன்று விட்டு
முத்துப்பட்டனும் இறந்துபடுகிறான். முத்துப்பட்டன் இறந்ததை
அறிந்த திம்மக்கா, பொம்மக்கா ஆகிய இருவரும் உடன்
கட்டை ஏறுகின்றனர்.

· மதுரை வீரன் கதை

மதுரை வீரன்

    மதுரை வீரன் சக்கிலியர் குலத்தில் தோன்றி, பாளையக்காரர்
பொம்மண நாயக்கர் மகளை மணம் செய்து கொள்கிறான்.
அவளுடன் தப்பி ஓடித் திருச்சி விசயரங்க நாயக்கனிடம் 1000
சேவகர்க்குத் தலைவனாக அமர்கிறான். மதுரை திருமலை
நாயக்கர், திருடர்கள் தொல்லையை அடக்க உதவி கேட்ட
பொழுது விசயரங்கன் 5000 சேனை வீரர்களுடன் மதுரை
வீரனை மதுரைக்கு அனுப்புகிறான்.

    மதுரைக்குப் போகும் வழியில் மதுரை வீரன் திருடர்களை
அடக்கி ஒழிக்கிறான். மதுரையில் இவனை வரவேற்ற ஆரத்திப்
பெண்ணான வெள்ளையம்மாள் மீது மையல் கொண்டு அவளை
இரவில் கடத்தும்போது பிடிபடுகிறான். திருமலை மன்னர்,
இவனுக்கு மாறு    கால் மாறு கை வாங்கும் தண்டனை
கொடுக்கிறார்.     இவன்     இறந்தபின்     பொம்மியும்
வெள்ளையம்மாளும் உடன்கட்டை ஏறுகின்றனர்.

· சின்னநாடான் கதை

    பல குடும்பங்களின் சொத்துக்கு ஒரே ஆண் வாரிசான சின்ன
நாடான் அவன் சாதிக்குள்ளேயே பூவணைஞ்சு என்பவளை,
சிறுவயதில் மணம் செய்து கொள்கின்றான். இவனுக்குப் பருவ
வயது வந்தபின் ஐயம்குட்டி என்ற வண்ணார் குலப்பெண்ணை
வைப்பாட்டியாகக் கொள்கிறான். இது உறவினர்களால்
அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பூவணைஞ்சு பருவ வயது
எய்திய பின், அவளுடன் வாழ்ந்து வாரிசு உருவாக்க
உறவினர்கள் இவனை வற்புறுத்துகின்றனர். ஆனால்
சின்னநாடான் அவளுடன் வாழ மறுத்துத் தன் மனத்துக்கு
இயைந்தவளான ஐயம்குட்டியுடன் வாழ்கிறான். பல தடவை
கூறியும் மறுக்கவே, உறவினர்கள் ஜமீன்தாரின் இசைவுடன்
சின்னநாடானைக் கொன்று விடுகின்றனர். அவனோடு வாழ்ந்த
ஐயம்குட்டியும்     அவனால் திருமணம்     செய்யப்பட்ட
பூவணைஞ்சும் உடன் கட்டை ஏறுகின்றனர்.

3.2.2 சாதிய அடக்குமுறை

    தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தோர்க்கு உயர் சாதி மக்களால்
விளைவிக்கப்படும் கொடுமைகளைப் பற்றி நாட்டுப்புறக்
கதைகள் வழங்கி வருகின்றன.

· சின்னத்தம்பி கதை

    இக்கதையில் வரும் சின்னத்தம்பி சக்கிலியர் குடியில்
பிறந்தவன். அவ்வூரில் பயிர்களை எல்லாம் காட்டு விலங்குகள்
அழிக்கவே அவ்வூர் மக்கள் மிகவும் துன்புற்றனர். பயிர்களை
அழிக்கும் விலங்குகளைக்     காவல்காரர்களான தேவர்
இனத்தவராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்நிலையில்
வலிமையும் துணிவும் கொண்ட வீரனாக விளங்கிய சின்னத்தம்பி
தன் போன்ற இளைஞர்களுடன் சென்று விலங்குகளை
வேட்டையாடிக் கொன்று ஒழித்தான். இதனால் அவனது
ஆற்றலும் வீரமும் வெளிப்படவே மக்களால் மதிக்கப்படும்
தலைவன் ஆனான். அவ்வூர் ஜமீன்தார் இவனது வீரத்தை
மெச்சி இவனைத் தன் படைத் தலைவனாக நியமிக்கின்றார்.
இது தேவர் இனத்தவருக்கும் சக்கிலியருக்கும் இடையில்
முரண்பாட்டை ஏற்படுத்துகின்றது. இதன் விளைவாக, இவனை
ஒழித்துக்கட்டச் சதி செய்து, புதையல் எடுத்தல், அதற்காக
நரபலி கொடுத்தல் என்ற நம்பிக்கையின் பேரால் இவனை
வஞ்சித்துக் கொலை செய்து விடுகின்றனர். இவனை மணந்து
கொள்ள இருந்த மாமன்மகள் சோணைச்சி இச்செய்தி
கேட்டதும் தூக்கிட்டுக் கொண்டு மடிந்தாள்.

3.2.3 மணஉறவு

    தாய்வழி, தந்தைவழிச் சமூகக் குழுவினர்களுக்கு இடையே மண
உறவு நிகழும் பொழுது பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
அவற்றைப் பற்றியும் கதைகள் உள்ளன.

· தோட்டுக்காரி அம்மன் கதை

    நாஞ்சில் நாட்டிலே கோனாண்டி ராசன், கொந்தனப்ப ராசன்
என இரு குறுநில மன்னர்கள் கோட்டை கட்டி வாழ்ந்தனர்.
கோனாண்டியின் தவப்புதல்வி தோட்டுக்காரி மிகவும்
அழகானவள். அவள் அழகில் மயங்கிய கொந்தனப்பன் மகன்
குமரப்பராசன் அவளையே மணக்கவும் முடிவு செய்தான். தன்
தந்தை மூலம் பெண் கேட்டுக் கோனாண்டிக்கு ஓலை
அனுப்புகிறான். ஓலையைக் கிழித்தெறிந்த கோனாண்டி அதைக்
கொண்டு வந்த தூதனையும் சிறுமைப்படுத்தி அனுப்புகிறான்.
இதனால் ஆத்திரமடைந்த குமரப்பன் கோனாண்டியைப்
பழிவாங்கப் படையுடன் புறப்படுகிறான். குமரப்பனுக்கு
வாய்ப்பாகத் தோட்டுக்காரி தன் தோழியருடன் பொய்கையில்
நீராடிக் கொண்டிருந்தாள். இது கண்ட குமரப்பன் பொய்கையை
முற்றுகையிட்டு அப்பெண்ணைப் பிடித்து வந்து தன்
கோட்டையுள் சிறை வைத்தான். இதன் விளைவாகக்
கோட்டையர் இருவருக்கும் கடும் போர் நடந்தது. போரில்
எஞ்சியவன் குமரப்பன் மட்டுமே. இதனையறிந்த தோட்டுக்காரி
சிறையிலிருந்து தப்பிச் சென்று அலைவாய்க்கரை அடைந்தாள்.
அங்கிருந்த வெள்ளியம்பாறை மீதில் தீ வளர்த்து அதனுள்
பாய்ந்தாள். தோட்டுக்காரி தப்பியதை அறிந்து அவளைத் தேடி
வந்த குமரப்பன் தோட்டுக்காரி தீப்பாய்ந்த நிகழ்ச்சியைக் கண்டு
அவனும் அதே தீயுள் பாய்ந்து மாய்ந்தான். அரனார் அருளால்
அவர்கள் முறையே தோட்டுக்காரி அம்மன், குமரப் பெருமாள்
என்ற பெயரில் தெய்வங்கள் ஆயினர்.

· வெங்கல ராசன் கதை

    கேரள அரசன் ஒருவன் நாடார் சாதிப் பெண்ணை
விரும்புகிறான். ஆனால் பெண்ணின் தந்தையான வெங்கல
ராசன் பெண்ணைத் தர மறுக்கிறான். உடனே கேரள அரசன்
அவளை வலிந்து பெற விரும்பிப் படையெடுத்து வந்து
வெங்கலராசனின் கோட்டையை முற்றுகையிடுகிறான். அரசனின்
மகள் தன் தலையைத் துண்டித்துக் கோட்டைக்கு வெளியே
எறிந்து விடும்படி தன் தந்தையிடம் கூறுகிறாள்.

    வெங்கலராசனும் அவ்வாறே தன் பெண்ணின் தலையைத்
துண்டித்துக் கோட்டைக்கு வெளியே எறிந்து விடுகிறான்.
கேரள மன்னன் அவள் தலையையும் உடலையும் எடுத்துச்
சென்று கோயில் கட்டிக் கொண்டாடுகிறான்.

3.2.4 வறுமை

    வறுமையினால் துன்பமடைந்த ஒரு பெண்ணான நல்லதங்காளின்
சோகக் கதை தமிழ்நாட்டில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒரு
கதையாகத் திகழ்கிறது.

· நல்லதங்காள் கதை

    நல்லண்ணன், நல்லதங்காள் என்ற இருவரும் உடன்
பிறந்தோராவர். செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நல்லண்ணன்
தன் தங்கை நல்லதங்காளை வேறொரு நாட்டானுக்கு
மணமுடித்துக் கொடுத்தான். சீதனமாக ஏராளமான பொன்னும்
பொருளும் அளித்தான். சில நாட்களில் நல்லதங்காள்
குடும்பத்தில் வறுமை சூழ்ந்தது. கணவன் பேச்சையும் களோமல்
அண்ணனிடம் உதவிபெற விரும்பித் தன் குழந்தைகளோடு
வருகின்றாள் நல்லதங்காள். ஆனால் அவளது அண்ணனோ
வேட்டைக்குப் போய் விட்டான், அவளது அண்ணி மட்டுமே
வீட்டில்     இருந்தாள்.     நல்லண்ணனின்     மனைவி
நல்லதங்காளையும் அவளது குழந்தைகளையும் கொடுமைக்கு
உள்ளாக்குகின்றாள். அவளது கொடுமையைத் தாங்க மாட்டாத
நல்லதங்காள் வீட்டை விட்டு வெளியேறிக் காடு சென்று தன்
ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி எறிந்து விட்டுத் தானும்
குதித்து மாள்கிறாள். வேட்டைக்குச் சென்று திரும்பிய
அண்ணன் நடந்ததை அறிந்து தன் மனைவியையும் அவள்
சுற்றத்தாரையும் தண்டிக்கிறான். நல்லதங்காளின் கணவனும்
நடந்ததைக் கேள்வியுற்று மடிந்து விடுகிறான். இறுதியில்
அண்ணனும் உயிரை விடுகின்றான். வறுமை மற்றும்
அண்ணியின் கொடுமை காரணமாக இறந்த நல்லதங்காளின்
கதையைத் தமிழ்நாடே அறியும். வயதான மற்றும் நடுத்தரப்
பெண்களிடையே வரவேற்புப் பெற்ற கதை இது. இன்றும்
கிராமத்து மக்களிடையே செல்வாக்குடன் திகழ்ந்து வரும்
கதையாகும்.

3.2.5 மனிதாபிமானம்

    மனிதாபிமானம் என்பது எல்லா எல்லைகளையும் கடந்து
நிற்பது. சாதி சமயம் முதலிய சிற்றெல்லைகளைத் தாண்டி
பரந்தும் விரிந்தும் ஓங்கியும் நிற்பது. நாட்டுப்புறக்
கதைப்பாடல்கள் மனிதாபிமானத்தைப் பல கோணங்களில்
எடுத்துக் கூறுகின்றன.

· கௌதல மாடன் கதை

    இசுலாமிய இளைஞன் ஒருவன் சக்கிலியப் பெண்ணொருத்திக்கு
உதவி செய்து உயிர் நீத்த தியாக வரலாறு இக்கதையாகும்.
தயிர், வெண்ணெய் விற்று வயிறு வளர்ப்பவள் பூவாயி
என்னும் சக்கிலியப் பெண். அவள் ஒருநாள் தயிர்
விற்பனைக்காகச் சென்று கொண்டிருந்த பொழுது காமுகன்
ஒருவன் அவளைக் கெடுக்க முயல்கிறான். அப்போது
அவ்வழிவந்த இசுலாமிய இளைஞன் ஒருவனின் உதவியைப்
பூவாயி வேண்டினாள். அவனும் அவளைக் காப்பாற்றினான்.
சாதி சமயம் பாராமல் நாள்தோறும் அவளைக் காப்பாற்ற
அவள் பின்னால் சென்று வந்து கொண்டிருந்தான். ஒருநாள்
முன்னர்ப் பூவாயியைக் கெடுக்க வந்த காமுகனே மீண்டும் வந்து
கெடுக்க முயல, இசுலாமிய இளைஞன் அவளைக் காப்பாற்ற
மூர்க்கமாகப் போரிடுகிறான். போராட்டத்தில் இருவருமே
மடிகின்றனர். இசுலாமிய இளைஞனைத் தன் சகோதரனாகக்
கருதிய பூவாயி, அவன் மாண்ட துயரம் தாளாமல் தானும்
தற்கொலை செய்து கொண்டு மடிந்து போகின்றாள். சாதி
சமயங்களைக்     கடந்த மனிதாபிமானத்தை இக்கதை
உணர்த்துகிறது.


தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1. சமூகக் கதைப்பாடல் என்பதன் வரையறை என்ன?
2. சமூகக் கதைப்பாடல்களின் பாடுபொருளாவன யாவை?
3. ‘கலப்பு மணம்’ என்ற பாடுபொருளைக் கொண்ட
கதைப்பாடல் ஒன்றின் பெயரைக் குறிப்பிடுக.
4. பெண்ணைக் கதைத்தலைவியாகக் கொண்ட கதைப்பாடல் எது?
5. சமூகக் கதைப்பாடல் தோன்றிய காலம் எது?
6. மதுரை வீரன் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன?
7. சமூகக் கதைப்பாடல் தமிழகத்தின் எப்பகுதியில் அதிகமாகத் தோன்றியது?
8. ‘வாலப் பகடை’ யார்? இப்பெயர் இடம்பெறும்
கதைப்பாடல் எது?