5.3 கதை சொல்லும் முறை


    கதைப் பாடல்களைச் சொல்வதற்கெனச் சில முறைகளைக்
கையாளுகின்றனர். அவற்றைப் பற்றி இப்பாடம் கூறுகின்றது.

5.3.1 எளிமையும் மக்கள் கவனமும்

    கதை மிக எளிய முறையில் பாடப்படுகின்றது. கதை
கேட்போரின் செவிகளையும் சிந்தையையும் கவரும் வண்ணம்
கதையைப் பாடிச் செல்வர். மக்கள் கவனம் சிறிதும் கதையை
விட்டு விலகாத முறையில் அவர்கள் விரும்பும் வண்ணம்
கதைப்பாடலை     இசைத்துச்     செல்வர்.     கதையைத்
தொடர்புபடுத்தும் வகையில் ‘அப்போது’ என்ற சொல்லை
அடிக்கடி பயன்படுத்துவர்.

    அப்போது பஞ்சவர்ணம் ஆண்டவனார் ஏது செய்தார்

(காத்தவராயன் கதை)

அப்போது தாதியர்கள் அரிவையர்கள் ஏது செய்தார்

(காத்தவராயன் கதை)

    இச்சொல் மக்களின் கவனத்தைப்     பாடுபவர் பக்கம்
ஈர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. ‘அப்போது’ என்ற
சொல்லைப்     பயன்படுத்துவதுபோல்     ‘இப்படி’ என்ற
சொல்லையும் பாடகர் பயன்படுத்துவர்.

    இப்படியாகவே இவர்கள் இருக்கையில்
    இப்படிக்குத் தானுமங்கே இருக்கின்ற வேளையில்

    (காத்தவராயன் கதை)

    இச்சொல், முன்சொன்ன கதையை நினைவுபடுத்தப் பயன்படும்.
அடுக்கிச் சொல்லும் முறையும் இக் கதைப்பாடலாசிரியர்களிடம்
காணப்படுகின்றது.

5.3.2 நாட்டுப்புறப் பாடல்களைச் சேர்த்தல்

    கதை நிகழ்ச்சிக்குத் தக்கவாறு நாட்டுப்புறத்து மக்களின்
பாடல்களையும் தங்கள் கதைப் பாடல்களில் அமைத்துக்
கொள்வர். அதே மெட்டில், சில நேரங்களில் அதே சொற்களில்
அமைப்பதும் உண்டு.
தாலாட்டு, கும்மி, பந்தடிப்பாட்டு,
ஒப்பாரி, வண்ணான் பாடல்
என இவ்வாறு நாட்டுப்புறப்
பாடல்களின் பங்கும் கதைப் பாடல்களில் உள்ளன.

    கதைப்பாடல்களின் பொது அமைப்பு இவ்வாறு ஒருமுறையோடு
காணப்படுகிறது. கதைக்குக் கதை பொருளிலும் கருத்திலும்
வேறுபாடு காணப்படும். ஆயினும் அமைப்புக் கூறுகளில் ஓர்
ஒற்றுமை இயல்பாக இருப்பதைக் காணலாம்.

5.3.3 ஒன்றைக் கூறி மற்றொன்றை விளக்கல்

    மன்னனுடைய காவல் சிறப்பு மிக நன்றாக இருந்தது.
அவனுடைய ஆணையின்றி யாரும் எந்தச் செயலையும்
செய்ய முடியாது. இதை நாட்டுப்புறக்கவிஞர் விளக்கும் முறை
சிந்தனைக்கு உரியதாக உள்ளது. அந்த மன்னர் அரசாளும்
நாட்டில்,

    சிட்டு பறவாது சிறுகுருவி நாடாது
    வக்கா பறவாது வனக்குருவி நாடாது
    பறவை பறவாது பட்சிகள் நாடாது
    காகம் பறவாது கருங்குருவி நாடாது

(காத்தவராய சுவாமி கதை)

    இந்தப் பாடற் பகுதியின் அமைப்பு கூர்ந்து நோக்குவதற்கு
உரியது. இரண்டாவது சீர் ஒரு சொல்லானும் நான்காவது
சீர்கள் இன்னொரு சொல்லானும் மாற்றமின்றி வர, முதற்
சீர்களுக்கு மூன்றாம் சீர் மோனை உடன்பாட்டுடன்
வந்துள்ளன. பொருள் அழுத்தமும் ஒலிநயமும் உள்ள
பாடற்பகுதியாக இப்பாடல் அமைந்துள்ளது. இவ்வாறு அமையும்
பாடற்பகுதிகள்     கதைப்பாடல்களில்     மிகுதியாகக்
காணப்படுகின்றன. இது மொழியின் நடையின் சிறப்புக்கு ஒரு
காரணமாக அமைந்துள்ளது.


தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1. கதைப்பாடலின் தொடக்கத்தில் பாடப்படும் பாட்டு
எது ?
2. அவையடக்கம் எதற்காகப் பாடப் படுகின்றது ?
3. கதைப்பாடலின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை
பின்பற்றப்படும் அமைப்புக்கள் யாவை?
4. கதைமுடிவு பெரும்பாலும் எவ்வாறு அமைந்திருக்கும்?
5. கதைப்பாடல்களில் இடம் பெறும் பிற பாடல்கள்
எவை?