1.4 குறியிடம்

    புணர்ச்சி நிகழ்வதற்குக் குறிப்பிடப்பட்ட இடம் என்பது
இதன் பொருள்.

    களவுப் புணர்ச்சி என்பது மறைமுகமான காதல் வாழ்வு
ஆதலால் தலைவனும் தலைவியும் குறிப்பிட்ட சில இடங்களில்
மட்டுமே சந்தித்துப் பேசி மகிழ்வர் ; புணர்ந்து இன்புறுவர் ;
அவ்வாறு களவுப் புணர்ச்சி நிகழும் இடங்களைக் குறியிடம்
என்று குறிப்பிடுவர். அது,

  • பகற்குறி,
  • இரவுக்குறி

என்ற இரு வகைகளை உடையது.

1.4.1 பகற்குறி

    தலைமக்கள் பகற்பொழுதில் சந்திக்கும் இடம் பகற்குறி
எனப்படும். அது, தலைவியின் வீட்டு எல்லையைக் கடந்த இடத்தில்
அமையும்.

1.4.2 இரவுக்குறி

    தலைமக்கள் இரவுப் பொழுதில் சந்திக்கும் இடம் இரவுக்குறி
எனப்படும். அது, தலைவியின் வீட்டு எல்லைக்கு உட்பட்ட இடமாக
அமையும்.

1.4.3 அல்ல குறிப்படுதலும் இடையீடும்

    தலைமகன், தன் வரவைத் தலைவிக்கு உணர்த்த ‘பறவை
போலக் குரல் எழுப்புதல்’ போன்ற செயல்களைச் செய்வான். அவை
சில சமயம் மாறியும், பிழைபட்டு்ம் போகும். அதன் காரணமாகத்
தலைமக்களது சந்திப்பு (புணர்ச்சி) நிகழாமல் போகும். இதற்கு
அல்ல குறிப்படுதல் என்று பெயர். இதனால், புணர்ச்சியில் ஏற்படும்
தடைக்கு, குறி இடையீடு என்று பெயர்.


தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. அகம் - விளக்கம் தருக. விடை
2. அகத்திணை எத்தனை வகைப்படும்? விடை
3. உரிப்பொருள் என்றால் என்ன? விடை
4. இடந்தலைப்பாடு - விளக்குக. விடை
5. குறியிடம் என்றால் என்ன? விடை