|
3.1 அசைக்கு
உறுப்பாகும் எழுத்துகளின் பெயர்கள்
தமிழில்
உயிர், மெய் என முதல் எழுத்துகளின் பெயர்கள்
இருநிலைகளில் உள்ளன. உயிர்எழுத்திலேயே ஒரு மாத்திரை அளவு
ஒலிக்கும் ஒலிகளைக் குறில் என்கிறோம். அதனினும் நீண்டு ஒலிக்கும்
உயிர்களை நெடில் என்கிறோம். ஓர் எழுத்திற்குரிய பெயர்,
அது
எவ்வாறு ஒலிக்கப் பெறுகிறது, அதனை ஒலிப்பதற்கு ஆகும் கால
அளவு என்ன என்பனவற்றால் வேறுவேறாக
அமைகிறது.
தனித்தியங்கும் தன்மை கொண்டது உயிர்எழுத்து. உயிர்எழுத்தோடு
சேர்ந்தால்தான் மெய்எழுத்து இயங்கும்.
இனி,
எழுத்துகளுக்குரிய வெவ்வேறு பெயர்கள்பற்றி
இப்பகுதிவழி அறிய முற்படுவோம்.

இவ்வரைபடத்தின்
வழியாக அசைக்கு உறுப்பாகும்
எழுத்துகளின் பெயர்களை நன்கு அறியலாம்.
உயிர்எழுத்துகள்
என்பன ‘அ’ முதல் ‘ஒள’
வரை உள்ள 12
ஆகும். இவற்றுள், அ இ உ எ ஒ எனும் ஐந்தும் குறில்
எனப்படும்.
இவற்றைக் குற்றெழுத்துகள் என்றும் கூறலாம். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ,
ஒள ஆகிய ஏழும் நெடில் எனப்படும்.
இவற்றை நெட்டெழுத்துகள்
என்பர். இவை ஒலிக்கும் நேர அளவு கொண்டே குறில், நெடில்
எனப்பட்டன.
‘க்’
முதல் ‘ன்’
வரை உள்ள 18 எழுத்துகளுக்கு
மெய்எழுத்துகள் என்று பெயர். இவற்றுள் வல்லினம், மெல்லினம்,
இடையினம் எனும் மூவகை எழுத்துகள் உள்ளன.
க்
ச் ட் த் ப் ற் |
இவை வல்லினம் |
ங்
ஞ் ண் ந் ம் ன் |
இவை மெல்லினம் |
ய்
ர் ல் வ் ழ் ள் |
இவை இடையினம் |
மூன்று புள்ளிகளால் ஆன
‘ஃ’ (ஆய்தம்) என்று நுட்பமான
ஓர்
ஒலியும் தமிழில் உள்ளது.
3.1.1
எழுத்துகளின் ஒலி அளவு
உயிரெழுத்து
ஒன்று மெய் ஒன்றோடு சேர்ந்து ஒலிக்கப்பெறின்
அதற்கு உயிர்மெய் என்று பெயர். க, சா போன்ற
எழுத்துகள்
உயிர்மெய் எழுத்துகளே. எழுத்துகளில் குறில் ஒரு மாத்திரையும்,
நெடில் இரண்டு மாத்திரையும் அளவுடையன. ஒரு முறை
கண்
இமைக்கிற (மூடித் திறக்கிற) நேரத்தை ‘மாத்திரை’ என்று இலக்கண
நூலார் குறிப்பிடுவார்கள்.
உயிர்எழுத்துகளில்
இ, உ, ஐ ஆகியன தமக்குரிய
அளவிலிருந்து குறைந்து ஒலிக்கப்பெறும்பொழுது குற்றியலிகரம்,
குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம் என்னும் பெயர்களைப் பெறுகின்றன.
உயிர்எழுத்துகளில்
நெடில் ஒலிகள் சில சூழல்களில் தமக்குரிய
அளவில் இருந்து நீண்டு ஒலிக்கின்றன. அப்பொழுது அவற்றுக்கு
உயிரளபெடை என்று பெயர். மெய் ஒலிகளாகிய ஒற்றெழுத்துகள்
இவ்வாறு தம் அளவில் இருந்து நீண்டு ஒலிக்கப் பெறின் அவற்றுக்கு
ஒற்றளபெடை என்று பெயர்.
எழுத்துகளுக்குரிய
மாத்திரை
ஒரு
மாத்திரை உடையவை |
குற்றெழுத்துகள் (குறில்)
ஒற்றளபெடை |
இரண்டு
மாத்திரை உடையவை |
நெட்டெழுத்துகள் (நெடில்) |
மூன்று
மாத்திரை உடையவை |
உயிரளபெடை |
அரை மாத்திரை உடையவை |
மெய்கள் (ஒற்று எழுத்துகள்)
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
ஆய்தம் |
ஒன்றரை
மாத்திரை உடையது |
ஐகாரக்குறுக்கம் |
யாப்பு இலக்கணத்தில் அரை
மாத்திரை அளவு உடைய
ஒற்றெழுத்துகளுக்கே மதிப்பு இல்லை. எனவே, கால் மாத்திரை
அளவுடைய மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் போன்றவற்றைக்
குறித்து அசைக்கு உறுப்பாகும் எழுத்துகள் பற்றிப் பேசும்
யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் ஏதும் குறிப்பிடவில்லை.
உயிர்மெய்எழுத்துகள்
குறிலாக இருப்பின் ஒரு மாத்திரை
அளவும், நெடிலாக இருப்பின் இரண்டு மாத்திரை
அளவும்
உடையனவாகும். அவற்றுள் உள்ள உயிர்எழுத்தின் அளவே
மாத்திரை. உயிர்மெய்எழுத்தில் மெய்யொலிக்கான மாத்திரை இல்லை
என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
3.1.2
இயல்பான அளவிலிருந்து மாறி ஒலிக்கும் எழுத்துகள்.
அசைக்கு
உறுப்பாகும் எழுத்துகளில் குற்றியலுகரம்,
குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், அளபெடை ஆகியன குறித்து நன்கு
அறிந்திருப்பது யாப்பு நூல் பயில்வோரின் அடிப்படைத் தேவையாகும்.
இவை தமக்குரிய இயல்பான அளவிலிருந்து மாறி ஒலிக்கக் கூடியன.
செய்யுளில் சீர், தளை ஆகியன பற்றி அறிய இது மிகவும் பயன்படும்.
எனவே இவை குறித்து இனி அறிவோம்.
குற்றியலுகரம்
உகர
உயிர் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து
ஒலிக்கும்போது குற்றியலுகரம் என்று
பெயர் பெறுகிறது. உகரம்,
சொற்களுக்கு இறுதியில் ஏதேனும் ஒரு வல்லொற்றோடு சேர்ந்து
வரும்போது ஆறு இடங்களில் குறைந்து
ஒலிக்கும். இதைக்
கீழ்க்காண்பன அறிய உதவும்.
எடுத்துக்காட்டு
(1)
|
தனி நெடிலை
அடுத்து வருமிடத்து |
காடு,
ஊது |
(2)
|
உயிரை அடுத்து
வருமிடத்து |
வ(வ்+அ)ரகு,
அரசு |
(3)
|
வல்லொற்றை
அடுத்து வரும் இடத்து |
சுக்கு,
அச்சு |
(4)
|
மெல்லொற்றை
அடுத்து வரும் இடத்து |
சங்கு,
மண்டு |
(5)
|
இடையொற்றை
அடுத்து வரும் இடத்து |
பல்கு,
வெய்து |
(6)
|
ஆய்தத்தை
அடுத்து வரும் இடத்து |
எஃகு,
கஃசு |
மேற்குறித்த தனி நெடில் உயிர் வல்லொற்று, மெல்லொற்று,
இடையினஒற்று, ஆய்தம் ஆகிய எடுத்துக்காட்டுச் சொற்களில்
எல்லாம் கடைசி எழுத்திற்கு முந்திய (ஈற்று அயல்) எழுத்தாக
இருந்தால் கவனத்திற்குரியது. வல்லினம் முதலிய எழுத்துகள்
ஒற்றெழுத்தாக இருப்பதும் நினைவிற்கொள்க. இவை உயிர்மெய்
எழுத்தாக இருத்தல் கூடாது.
குற்றியலுகரம்
எங்கு வரும் என்பதை மீண்டும் நினைவுபடுத்திக்
கொள்வோம்.
(1)
|
உகரம்
சொல்லுக்கு இறுதியில் வர வேண்டும். |
(2) |
ஒருவல்லொற்றோடு
(க்,ச்,ட்,த்,ப்,ற்) சேர்ந்து வரவேண்டும். |
(3)
|
தனிநெடில்,
உயிர், வல்லொற்று, மெல்லொற்று, இடையொற்று,
ஆய்தம் இவற்றை அடுத்து வரவேண்டும். |
குற்றியலிகரம்
இகர
உயிர் தனக்கு உரிய ஒலி அளவில் குறைந்து ஒலிக்கும்
பொழுது குற்றியலிகரம் எனப்படுகின்றது.
ஒரு குற்றியலுகரத்தில்
முடியும் சொல், யகர மெய்யை முதலில் கொண்ட ஒரு சொல்லோடு
சேர்ந்து வரும் இடங்களில் அக்குற்றியலுகரம் குற்றியலிகரமாகத்
திரிந்து ஒலிக்கும். இதற்கு எடுத்துக்காட்டு.
பாட்டு
+ யாது |
பாட்டியாது |
மாடு
+ யாது |
மாடியாது |
கோடு
+ யாழ் |
கோட்டியாழ் |
மேலும்,
மியா என்னும் முன்னிலை அசைச்சொல்லில்
உள்ள
மகரத்தோடு சேர்ந்துள்ள இகரம் குற்றியலிகரமாகும்.
ஐகாரக்குறுக்கம்
‘ஐ’ என்னும் நெட்டெழுத்து ஐ எனும்
எழுத்தைச் சுட்டுவதாக
வரும் இடங்களில் குறுகி ஒலிப்பதில்லை. அவ் எழுத்து அளபெடை
நிலையில் நீண்டு ஒலிக்குமேயன்றி குறுகுதல் இல்லை. இவ்விரு
இடங்கள் தவிர வேறு எச்சொல்லில் வந்தாலும் குறுகி ஒலிக்கும்.
சொல்லின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களி்லும் வரும்
ஐகாரம் இவ்வாறு குறுகும். இரண்டு மாத்திரை எனும்
நெட்டெழுத்துக்குரிய அளவிலிருந்து ஐகாரம் குறுகி ஒலிக்கும்
பொழுது (ஒன்றரை)
மாத்திரை அளவு பெறும். இதற்கு
ஐகாரக்குறுக்கம் என்று பெயர்.
சான்றுகள்
: |
ஐவர், ஐப்பசி -
சொல்லின் முதலில் ‘ஐ’
அமைச்சர், பகைவர் - சொல்லின் இடையில் ‘ஐ’
தவளை, குவளை - சொல்லின் கடையில் - ஐ |
அளபெடை
அளபெடை
என்னும் சொல் அளபு எடுத்தல் என்னும்
பொருளுடையது. இதனைத் தவறாக அளபடை எனக் கூறுதலோ,
எழுதுதலோ கூடாது. அளபெடை இரு வகைப்படும். உயிரளபெடை,
ஒற்றளபெடை என அவற்றுக்குப் பெயர்.
உயிரளபெடை
உயிரளபெடை
என்பது உயிரெழுத்துகள் அளபெடுப்பதைக்
குறிக்கும். உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் அனைத்தும் (ஏழும்)
அளபெடுக்கும். இவை தனிநிலையிலும், மொழியில் (சொல்லின்)
மூவிடத்தும் அளபெடுத்து ஒலிக்கப் பெறும். அப்படி நீட்டி ஒலிக்கும்
நிலையில், அவை இரண்டு மாத்திரையிலிருந்து மூன்று மாத்திரை
அளவிற்கு நீண்டு ஒலிக்கும்.
(எ.டு)
தனிநிலை |
ஆஅ, ஈஇ |
மொழி
முதல் |
தூஉந்திரை |
மொழி
இடை |
படாஅம் |
மொழி
இறுதி |
படாஅ |
உயிரளபெடையினைச்
சுட்டுதற்காக அந்த
அந்த
நெட்டெழுத்துகளுக்கு அருகில அவற்றின் குற்றெழுத்துகள் (குறில்
எழுத்துகள்) எழுதிக்காட்டப்பெறும். ‘ஆஅ’ எனவரும் இடங்களில் இவ்விரு ஒலிகளையும்
தனித்தனி எனக் கருதி விட்டிசைக்கக்
கூடாது. விட்டிசை என்பது இடைவிட்டு ஒலிப்பதைக் குறிக்கும். ஆ
எனும் 2 மாத்திரை உள்ள நெடிலை 3 மாத்திரையளவிற்கு
அப்படியே நீட்டி ஒலிப்பதே முறை. இதற்கே அளபெடை என்று
பெயர். ஏனைய சொற்களிலும் இப்படியே ஒலிமுறை அமையும்.
ஒற்றளபெடை
ஒற்றளபெடையில்
நீட்டி ஒலிக்க முடியாத க், ச், ட், த், ப், ற்
எனும் வல்லொற்றுகள் ஆறும் ர், ழ் எனும் இடையின
ஒற்றுகள்
இரண்டும் தவிர ஏனைய பத்து மெய்களும்
நீட்டி ஒலிக்கக்
கூடியவையே. இவற்றோடு ஆய்த எழுத்தும் நீட்டி
ஒலித்தற்கு
உரியதே. இப்பதினொரு (ங், ஞ், ண், ந், ம், ய், ல்,
வ், ள், ன், ஃ)
எழுத்துகளும் குறிலை அடுத்தும், குறிலிணையை
(இரண்டு
குறில்கள்) அடுத்தும் சொற்களில் நீண்டு ஒலிக்கப்
பெறலாம்.
அப்பொழுது அரை மாத்திரை உள்ள ஒற்றெழுத்துகள் ஒரு மாத்திரை
அளவிற்கு நீண்டு ஒலிக்கும். இவற்றுக்கே
ஒற்றளபெடை
என்று பெயர். இதனைச் சுட்ட
அளபெழும் ஒற்றுகள்
இருமுறை அருகருகே எழுதிக் காட்டப்படும்.
சான்றுகள்
: |
மங்ங்கலம்,
நன்ன்கலம் - (குறிலை அடுத்து) |
|
அரங்ங்கம்,
மரங்ங்கொல் - (குறிலிணையை அடுத்து)
|
மேற்காணும்
செய்திகள் நினைவில் இருந்தால்தான் செய்யுளில் அசை பிரிக்குமிடத்து ஓர் எழுத்து
எந்த நிலையில் வந்துள்ளது,
அதற்கு எத்தனை மாத்திரை அளவு, அதனை எந்த அசையாகப்
பிரிக்கவேண்டும் என்பன போன்றவற்றை நன்கு புரிந்து கொண்டு
செயல்பட முடியும்.
இதுவரை நாம் அசைக்கு உறுப்பாகக்
கூடியன எனும் நிலையில்
எழுத்துகளின் பெயர்கள் பதின்மூன்று அறிந்துள்ளோம். அவற்றை
மீண்டும் இங்கே சுட்டுவது பயன் நல்கும்.
(1)
|
உயிர்
|
(2) |
குறில்
|
(3)
|
நெடில்
|
(4) |
மெய்
|
(5)
|
வல்லினம்
|
(6) |
மெல்லினம்
|
(7) |
இடையினம்
|
(8)
|
ஆய்தம்
|
(9) |
உயிர்மெய்
|
(10)
|
குற்றியலுகரம்
|
(11)
|
குற்றியலிகரம்
|
(12)
|
ஐகாரக்குறுக்கம்
|
(13)
|
அளபெடை
(உயிரளபெடை, ஒற்றளபெடை) |
இவற்றுக்குரிய ஒலி அளவை மீண்டும் நினைவு
கூர்க.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I
|
1. |
அசைக்கு உறுப்பாகும்
எழுத்துகள் எத்தனை? |
விடை |
2. |
வல்லின, மெல்லின,
இடையின எழுத்துகள் யாவை? |
விடை |
3. |
உயிரளபெடை என்றால் என்ன?
|
விடை |
பயில்முறைப்
பயிற்சி - 1
|
1. |
நேற்று ஒருவர் வந்து என்னிடம் பத்துப் பாட்டு, எட்டுத்
தொகை ஆகிய நூல்களைக் கேட்டார். என்னிடத்தில் ஏது? என்று கேட்டேன். உங்கள் வீட்டுத் திண்ணையில் அப்புத்தகங்களை இன்று பார்த்தேன் என்று
அவர் சொன்னார்.
- இப்பத்தியில் உள்ள குற்றியலுகரச் சொற்களைத்
தொகுத்து
எழுதுக.
|
2. |
யகர முதன்மொழிக்கு முன் வந்த குற்றியலுகரச் சொற்கள்
குற்றியலிகரமாகத் திரிவதற்குப் பல சொற்களைப் பழகுக.
|
3. |
ஒற்றெழுத்துகள் அளபெழுவதற்குச் சான்றாக அமையுமாறு
உரிய ஒற்றுகள் வரும் சொற்களை எழுதிப் பார்க்கவும்.
|
|