5.3 பெருங்கதை

கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில் தோன்றிய கொங்கு வேளிர் எழுதிய பெருங்கதைக் காவியத்தில் ஓவியத்தைப் பற்றிய பல செய்திகள் வருகின்றன.

5.3.1 ஓவியச் செய்திகள்

பெருங்கதையில் சித்திரக்காரர் ஓவ வினையாளர், ஓவியத் தொழிலாளர் என்று குறிப்பிடப் படுகின்றனர். சித்திரம் வரையப் பட்ட இடங்கள் சித்திர அம்பலம், சித்திரக் கூடம், சித்திர சாலை, எழுது நிலை மாடம், ஓவக் கைவினை மாடம் என்றும் குறிப்பிடப் படுகின்றன. பெருங்கதை கோசலத்தில் இருந்த ஓவியர்களைச் சிறப்பித்துக் கூறுகிறது.

சித்திரங்கள் பல முறையில், பல இடங்களில்,பல பொருட்களின் மீது வரையப் பட்டிருந்தன என்று பெருங்கதை கூறுகிறது.   அவை சித்திர முதுசுவர், சித்திரம் பயின்ற விதானம், சித்திரக் கதவு, சித்திரத் தவிசு, ஓவியத் தண்டிகை, சித்திர நுண்டுகில், சித்திர     நெடுங்குறை, சித்திரக் கிழி,  சித்திரப் பிணையல், சித்திரக் கம்மம் என்று பெருங்கதையில் குறிப்பிடப் படுகின்றன.
    

சித்திரம் எழுதிய புத்தகம்

ஏடுகள் நிறைந்த ஓலைப் புத்தகம் ஒன்றின் மீது சித்திரம் வரைந்தது பற்றிப் பெருங்கதை தெரிவிக்கிறது.

பொத்தகக் கைவினைச் சி்த்திரச் செய்கை
    

(பெருங்கதை, இலாவாண காண்டம், 6. தெய்வச் சிறப்பு, அடி 149.)

ஓவியப் பாவை

அழகான பெண்களைக் கொங்கு வேளிர் தமது காவியத்தில் பல இடங்களில் ஓவியப் பாவைக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார்.

காமக் காதலன் கைவினைப் பொலிந்த
ஓவியப் பாவையை ஆகத் தொடுக்கி

(மகத காண்டம், பதுமாபதி வதுவை, அடி 174:5)
    

ஓவியப் பாவை உய்த்தவள் காட்ட
    

(இலாவாண காண்டம், யூகிக்கு விலாவித்தது, அடி 95)

எண்வகை மெய்ப்பாடு

ஓவியக்காரர்கள் நகை, அழுகை முதலிய எட்டு வகை மெய்ப்பாடுகளையும் இருத்தல், கிடத்தல், நிற்றல் முதலிய ஒன்பது வகையான விருத்திகளையும் ஓவியத்தில் கொண்டு வந்தனர் என்று கொங்கு வேளிர்  குறிப்பிடுகின்றார்.

எண்மெய்ப் பாட்டினுள் இரக்கம் மெய்ந்நிறீஇ
ஒண்வினை ஓவியர் கண்ணிய விருத்தியுள்

    

(உஞ்சைக் காண்டம். நருமதை சம்பந்தம், 45 - 47)

ஒன்பது விருத்தி நன்பதம் நுனித்த
ஓவவினை யாளர் பாவனை நிறீஇ
வட்டிகை வாக்கின் வண்ணக் கைவினைக்
கட்டளைப் பாவை

(இலாவாண காண்டம். நகர்வலங் கொண்டது, 40 - 44)

5.3.2 ஓவியத் திறன்

துகிலிகை (தூரிகை) கொண்டு பெண்களும் ஓவியம் தீட்டினர்  என்று கொங்கு வேளிர் குறிப்பிடுகின்றார்.

பெண்கள் தமக்கு வேண்டிய பெண்களின் அழகிய மார்பகங்களின் மீது அவர்களது தலைவன் கண்டு இன்பம்  அடைய வேண்டி ஓவியம் தீட்டியதாகப் பெருங்கதை குறிப்பிடுகிறது. வாசவதத்தை     சேனாபதியின் மகளின்  மார்பகங்கள் மீது, அகில் கட்டையைக் கருக்கி அதனைத் தூரிகையில் தோய்த்து, சித்திரங்கள் தீட்டினாள் என்று  பெருங்கதை ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
    

சுட்டுருக்கி அகிலின் வட்டித்துக் கலந்த
வண்ண இலேகை நுண்ணிதின் வாங்கி
இடைமுலை எழுச்சித் தாகிப் புடைமுலை
முத்திடைப் பரந்த சித்திரச் செய்கொடி

(உஞ்சைக் காண்டம். விழாவாத்திரை, : 190 - 193)

பெருங்கதையின் காவிய நாயகனும் ஓவியத் தொழிலில்  உள்ள உபாயங்களை நன்கு அறிந்தவனாக விளங்கினான்  என்று கொங்கு வேளிர் தம் நூலில் பல இடங்களில் குறிப்பிடுகின்றார்.

உதயண நம்பி வோவியத் தொழிலின்
வகையறி யுபாயமும்
    

         (மேலது. 198 - 199)


தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1.

மதுரைக் காஞ்சியில் ஓவியர் எப்பெயரில் சிறப்பித்துக்
கூறப் படுகின்றனர்?

விடை
2.

புனையா ஓவியம் என்றால் என்ன?

விடை
3.

மதுரையில் இருந்த சங்க காலப் பாண்டியனின்
அரண்மனையின் அந்தப்புரத்தில் என்ன ஓவியங்கள்
தீட்டப் பட்டிருந்தன?

விடை
4.

ஓவிய நூல் முதன் முதலில் எந்த இலக்கியத்தில்
குறிப்பிடப் படுகிறது?

விடை
5.

ஓலைப் புத்தகத்தில் ஓவியம் வரையப் பட்டிருந்ததாக எந்த இலக்கியம் குறிப்பிடுகிறது?

விடை