1.2 தீர்த்தங்கரர்கள்


தீர்த்தங்கரர்

    சமண சமயக் கொள்கைகளை உலகில் பரவச்
செய்வதற்காகத் தோன்றியவர்கள் தீர்த்தங்கரர்கள் என்னும்
சமணப் பெரியார்கள். இதுவரை 24 தீர்த்தங்கரர்கள்
தோன்றியுள்ளனர்; இனியும் 24 தீர்த்தங்கரர்கள் தோன்றுவர்
என்பது சமண சமயத்தாரின் நம்பிக்கையாகும்.

1.2.1   24 தீர்த்தங்கரர்கள்

    சமண சமயத்தின் கொள்கைகளைப் பரவச் செய்யும்
வகையில் இதுவரையில் தோன்றிய 24 தீர்த்தங்கரர்களின்
பெயர்கள் வருமாறு:

 1. ஆதிபகவன் அல்லது விருஷப தேவர்
 2. அஜிதநாதர்
 3. சம்பவநாதர்
 4. அபிநந்தனர்
 5. சுமதிநாதர்
 6. பதுமநாபர்
 7. சுபார்சவ நாதர்
 8. சந்திரப் பிரபர்
 9. புஷ்ப தந்தர் அல்லது சுவிதிநாதர்
 10. சீதளநாதர் அல்லது சித்தி பட்டராகர்
 11. சீறியாம்ச நாதர்
 12. வாசு பூஜ்யர்
 13. விமலநாதர்
 14. அநந்தநாதர் அல்லது அநந்தஜித் பட்டாரகர்
 15. தருமநாதர்
 16. சாந்திநாதர்
 17. குந்துநாதர் அல்லது குந்து பட்டாரகர்
 18. அரநாதர்
 19. மல்லிநாதர்
 20. முனிசுவர்த்தர்
 21. நமிநாதர் அல்லது நமிபட்டாரகர்
 22. நேமிநாதர் அல்லது அரிஷ்டநேமி
 23. பார்சுவநாதர்
 24. வர்த்தமான மகாவீரர்

    சமண சமயக் கடவுளான அருகக் கடவுள் போன்றே
தீர்த்தங்கரர்களையும் தெய்வமாகச் சமணர்கள் போற்றி
வழிபடுகின்றனர். மேற்சுட்டிய 24 தீர்த்தங்கரர்களில் முதல்
இருபத்திரண்டு தீர்த்தங்கரர்களும் கற்பனைப் பெரியார்கள்
என்றும் பார்சுவநாதர் மற்றும் வர்த்தமான மகாவீரர் ஆகிய
இரண்டு பெரியார்கள் மட்டுமே உண்மையில் வாழ்ந்தவர்கள்
என்றும் கூறப்படுகின்ற கருத்தும் உண்டு.

1.2.2 பார்சுவநாதர்

பார்சுவநாதர்

     பார்சுவநாதர், நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 23ஆவது தீர்த்தங்கரர்.
இவர், அரச குலத்தில் தோன்றியவர். நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர். முப்பது ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தினார்;
எழுபது ஆண்டுகள் துறவு வாழ்வு மேற்கொண்டார். உயிர்க்
கொலை, சாதிப் பாகுபாடு இவற்றைக் கடுமையாக எதிர்த்தார்.

●  பார்சுவநாதரின் பணி

     பார்சுவநாதர், நாடெங்கும்     சமண சமயத்தைப்
பரப்புவதில் பெரும்பங்காற்றியவர். வேத வேள்விச் சமயத்தாரின்
தாக்குதல்களிலிருந்து இம்மதத்தைக் கட்டிக் காத்த பெருமையும்
இவருக்கு உண்டு.

 • துறவியர்
 • பெண் துறவியர்
 • இல்லற ஆடவர்
 • இல்லறப் பெண்டிர்

என்று நான்கு வகைக் குழுக்களாகப் பிரித்துச் சமண சமயத்தைப்
பரப்பினார். ஆர்யதத்தர் என்ற துறவியின் தலைமையில் 16,000
துறவிகள், புட்பகுலர் என்ற பெண் துறவியின் தலைமையில்
38,000 குரத்திகள் (பெண் துறவியர்), சுவரதர் என்பவர்
தலைமையில் 1,64,000 இல்லற ஆடவர், சுநந்தர் தலைமையில்
3,27,000 இல்லறப் பெண்டிர் ஆகிய இவர்கள் மூலம் நாடெங்கும்
சமண மதம் பரவும் வழிவகைகளைப் பார்சுவநாதர் செய்தார்.

1.2.3 வர்த்தமான மகாவீரர்

     சமண சமய தீர்த்தங்கரர் வரிசையில் கடைசியாக
அதாவது 24ஆவது தீர்த்தங்கரராகத் தோன்றியவர் வர்த்தமான
மகாவீரர்.
இவரை மாபெரும் ஆன்மிக வீரர் என்று கூறுவர்.

வர்த்தமான மகாவீரர்

    விதேக நாட்டின் தலைநகரம் வைசாலி. இதன் அருகில்
உள்ளது குந்தக் கிராமம் என்ற ஊர். இங்குக் கி.மு.599இல்
வர்த்தமான மகாவீரர் பிறந்தார். தந்தை-சித்தார்த்தர். சிற்றரசர்.
தாய் திரிசீலை, பிரியகாரிணி சேதகப் பெருமன்னனின் புதல்வி.

    அரசர் மகனாகப் பிறந்த மகாவீரர் தம் பெற்றோர் இறக்கும்
வரை அவர்தம் இல்லத்தில் இருந்தார். பின்னர், தம் 28ஆவது
வயதில் ஆன்மிக வாழ்க்கையை மேற்கொண்டார். 12 ஆண்டுகள்
தவமிருந்து நிறைவான அறிவைப் பெற்றார்.

●  வர்த்தமான மகாவீரரின் பணி

    அறத்தைக் கடைப்பிடித்து வாழ்வதன் மூலம்தான் மனிதன்
வீடுபேறு அடைய முடியும்; வேறு எந்த வழியிலும் அவன்
வீடுபேறு அடைய முடியாது என்ற திடமான கொள்கையை
நாடெங்கும் பரப்பியவர் மகாவீரர். சமண சமயக்
கொள்கைகளைக் கற்பிப்பதிலும், துறவிகளின் குழுக்கள்
அமைப்பதிலும் தம் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டார்.

    தம், 72ஆம் வயதில் பாவபுரி என்ற ஊருக்குச் சென்ற
மகாவீரர் அங்குப் பொதுமக்களுக்கு அறவுரைகள் வழங்கினார்.
அனைவரும்     ஆர்வத்துடன் அறவுரையைக் கேட்டுக்
கொண்டிருந்தனர். இவ்வறவுரை நிகழ்ச்சி முடிவுற்றபின்
தியானத்தில் மூழ்கினார். அந்நிலையிலேயே வீடுபேறடைந்தார்
மகாவீரர்.

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

(1) சமணர் என்றால் பொருள் என்ன?
(2) ஜினர் என்றால் பொருள் என்ன? [விடை]
(3) நிர்க்கந்தர் அல்லது நிகண்டர் என்போர் யாவர்?
(4) அநேகாந்தவாத மதம் எது?
(5) தீர்த்தங்கரர் எத்தனை பேர்?