3.4 படைப்பிலக்கிய நடை

சிறுகதையின்     தொடக்கம் படிப்பவரின்     ஆர்வத்தையும்,
கற்பனையையும் தூண்டுவதாக அமைக்கப்படுவதோடு, கதையில்
முறையான வளர்ச்சியையும் முழுமையையும் காட்ட வேண்டும். பாரதி
தம் சிறுகதைகளுக்கு அடிப்படையாகத் தம்மைத் தூண்டும் நோக்கம்
என்னவென்பதை ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார்.
 

“பொதுவாக நான் கதைகளெழுதும் போது வெறுமனே கற்பனை
நயத்தைக் கருதி எழுதுவது வழக்கமேயன்றி     ஏதேனும்
தர்மத்தைப்     போதிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன்
எழுதும் வழக்கமில்லை கதையென்றெடுத்தால் கற்பனைப்
புனைவையே அதில் நான்     முக்கியமாகக் கருதுவேன்.
எனினும் என்னை மீறியே கதைகளிலும் பெரும்பாலும்
தர்மபோதனைகள் வந்து நுழைந்து விடுகின்றன.”

என்று குறிப்பிட்டுள்ளார்.
 

கதைக் கொத்து என்னும் தொகுதியிலுள்ள கதைகளைத் தவிர
பாரதி எழுதிய வேறு சில சிறுகதைகள், கட்டுரைகள் (மாதர், கலைகள்,
சமூகம்), பாரதி தமிழ், பாரதி புதையல் என்னும் வேறு சில
தொகுப்புகளில் காணக்கிடக்கின்றன.     அவற்றுள்     ஒன்றான
“ஆறிலொரு பங்கு” தேசசேவையைக் கருப்பொருளாகக் கொண்டு
அமைக்கப்பட்டது. தேசப்பற்றுக் கொண்டு அதன் காரணமாகக்
கதாநாயகன் தன் வாழ்க்கையில்பட்ட துன்பங்களையும், உளப்
போராட்டங்களையும், இறுதியில் அவன் எல்லாவற்றையும் வென்று
தன் இலட்சியத்தை அடைவதையும் இக்கதை சுவைபட விவரிக்கிறது.


3.4.1 ஆறில் ஒரு பங்கு

 

இந்தச் சிறுகதை 1933-இல் (24/11/1933) சுதந்திரச் சங்கு வாரப்
பதிப்பு முதல் இதழில் அதன் ஆசிரியர் ‘சங்கு’ சுப்ரமணியனால்
மறுபிரசுரம் செய்யப்பட்டது. அதன் தலைப்பில் அவர் எழுதிய
குறிப்பு: “தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகளைச் சிருஷ்டித்து உதவிய
பெரியோர்களுள் முக்கியமானவர் மூவர். மூவரும் புகழுடம்பில் இன்று
உலாவுகிறார்கள். கவி சுப்பிரமணிய பாரதியார், வ.வே.சு.ஐயர்,
அ.மாதவையா.” இம்மூவரையும் தமிழர் மறக்க     முடியுமா?
இச்சிறுகதையைப்     பாரதியார்     1913-இல் எழுதியிருக்கிறார்.
இச்சிறுகதைக்குப் பாரதி எழுதிய முகவுரையில்,
 

“ஒரு ஜாதி, ஓர் உயிர், பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி
ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம், பிரிவுகள்
இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம். பிறவி மாத்திரத்தாலே
உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மதபேதங்கள் இருக்கலாம்.
மத விரோதங்கள் இருக்கலாகாது. இவ்வுணர்வே நமக்கு
ஸ்வதந்திரமும், அமரத்தன்மையும் கொடுக்கும். இந்நூலைப் பாரத
நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து
ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை
வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்” என்று
தான் சிறுகதை எழுதியதன் நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
 

ஆறிலொரு பங்கு சிறுகதையின் ஆரம்ப வரிகள் இவை.
 

மீனாம்பாள் வீணை வாசிப்பதிலே ஸரஸ்வதிக்கு நிகரானவள்.
புரசைவாக்கத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு அவள் வரும்
சமயங்களிலெல்லாம் மேல்மாடத்து அறையை அவளுடைய
உபயோகத்துக்காக காலி செய்து விடுவது வழக்கம்.
நிலாக்காலங்களில் இரவு எட்டு மணிக்கெல்லாம் போஜனம்
முடிந்து விடும். ஒன்பதுமணி முதல் நடுநிசி வரையில் அவள்
தனது அறையில் இருந்து வீணை வாசித்துக் கொண்டிருப்பாள்”
 

என்று தொடங்குகிறது. இது ஒரு காதல் கதை. முறைமை உறவான
மாமன் மகள் அல்லது மாமன் மகன், அத்தை மகள் அல்லது
அத்தை மகன் ஆகிய உறவை விஷயமாக எடுத்துக் கொள்வது
சிறுகதை ஆரம்பத்தில் படைப்பாளிக்கு உவப்பாக இருந்திருக்கிறது.
பாரதியே இதை ஆரம்பித்து வைத்திருக்கிறார். கோவிந்தராஜன்,
அவனது தாய்மாமன் மகள் மீனாம்பாள் இருவரது காதல் உறவில்
ஏற்படும் சிக்கலால் அவர்கள் விருப்பம் ஈடேறாமல் போய்விட,
எதிர்பாராத விதமாக இருவர் விருப்பமும் நிறைவேறுகிறது.
 

இந்தச் சிறுகதையின் சிறப்பு, இது வெறும் காதல் கதையாக
மட்டுமே இல்லை என்பதுதான். காதலர் இருவர் மனத்திலும்
லட்சியத்தன்மையை ஏற்றி இருக்கிறார் பாரதி. அவர்கள் உறவே
லட்சியசித்தி பெற்றதாக ஆகிவிடுகிறது. கதையின் கடைசி இரண்டு
வாக்கியங்களான
 

“இரண்டு ஜீவன்கள் மாதாவின் சேவைக்காக வயப்பட்டன.
பிரகிருதி வடிவமாகத் தோன்றிய மாதாவின் முகத்திலே
புன்னகை காணப்பட்டது.”
 

என்பதிலிருந்து அந்த லட்சிய நிறைவேற்றம் தெரிகிறது. பாரதத்
தாயின் சேவைக்கு இருவரும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக்
கொண்டுவிட்டதைத் தான் காண்கிறோம்.


3.4.2 இருள்

 

கதைக்கொத்து என்னும் தொகுதியில் அமைந்த கதைகளுள்
இருள் என்னும் சிறுகதை திடசித்தத்தின் வலிமையை உணர்த்துகிறது.
உறுதியான உள்ளத்தை திடசித்தன் என்னும் அரசனாக உருவகித்துக்
கதை தொடர்கிறது. திடசித்தன் உறங்கும் பொழுது அவன்
பகைவர்களால் ஒரு மலைச்சாரல் குகைக்குள்ளே கொணர்ந்து
அடைக்கப்படுகிறான்.     அந்தக்     குகையில் அவன்பட்ட
இன்னல்களையும், இறுதியில் அவற்றையெல்லாம் கடந்து அவன்
வெற்றி பெற்ற வகையையும் கதை விளக்கிக் கூறுகிறது.
செயல்களுக்கும், அவற்றைச் செய்தற்குரிய முயற்சிக்கும் அடிப்படைக்
காரணமாக விளங்குவது, எதற்கும் அஞ்சாத, உறுதியுள்ள நெஞ்சு;
அதனைக் கொண்டு உலகில் எத்தகைய துன்பத்தையும் கடந்து வெற்றி
பெறலாம் என்னும் உண்மையை மிகச் சிறந்த முறையில், இருள்
என்னும் அளவில் சிறிய இவ்வுருவகக் கதையாக அமைத்திருக்கிறார்
பாரதி.
 

பாரதியின் சிறுகதைகளின் அமைப்பு முறையை     மூன்று
வகைகளாகப் பகுக்கலாம். கதையைக் கூறிவிட்டு இறுதியில் நீதியை
அறிவுறுத்தும் கதைகள் நீதிக்கதைகள் ஆகும். நகைச்சுவையை
அடிப்படையாகக் கொண்டு அமைபவை நகைச்சுவைக் கதைகள்.
கருத்துகளை உருவங்களாகக் கொண்டு அமைந்தவை உருவகக்
கதைகள்
ஆகும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.

பாரதியார் தான்     எழுதிய ‘ஆறில் ஒரு பங்கு’
சிறுகதையின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள செய்தி யாது?

விடை

2.

மொழிநடையின் தெளிவுக்கு இலக்கிய     ஆசிரியர்
கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் யாவை?

விடை

3.

பாரதியாரின் பத்திரிகைப் பணியை விளக்குக.

விடை

4.

பாரதியின்     பாடல்களைப்      படிப்பதைவிட,
உணர்ச்சியோடு பாடக் கேட்டால் பெரும்பயன் விளையும்
என்று கூறியவர் யார்?

விடை

5.

கவலைக்கு மருந்தாகப் பாரதியார் எதைக் குறிப்பிடுகிறார்?

விடை