6. சமய இலக்கியம்

அல்லா

பாட அறிமுகம்
Introduction to Lesson


திருக்குர்ஆன்

அவரவர்களின் சமயத்திற்கு என்று ஒரு கோட்பாடு உண்டு. இறைவனும் உண்டு. இத்தகைய இறைவனைத் தொழுது செயல்களைத் தொடங்குவது மக்கள் இயல்பு. தொழுதல் என்ற சொல்லுக்குப் பின்பற்றி ஒழுகுதல் என்பது பொருள். அதாவது தன்னால் தொழுது வணங்கப் பெறும் இறைவனின் அருள் நெறிகளைப் பின்பற்றி ஒழுகுதலாகும்.

இறைவன் எல்லாருக்கும் ஒன்றுதான். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தை உலகிற்குத் தந்தவர்கள் தமிழர்கள். இறைவனை வாழ்த்தும்போது அவரவர் சமயத்திற்கு ஏற்றாற்போல் கடவுளைப் படைத்துத் தங்களின் சமயக் கொள்கை மேலோங்கப் பாடுவது தமிழ் மரபாகும். அதுபோல் இங்கு உங்களுக்கு அல்லா பற்றிய பாடல் பாடமாக வைக்கப் பெற்றுள்ளது.

சீறா+ புராணம் = சீறாப்புராணம். சீறத் என்னும் அரபுச் சொல்லுக்கு வரலாறு என்பது பொருள். புராணம் என்பது பழமையைக் குறிக்கும். உலகில் தூயவாழ்க்கை நடத்திய உத்தமரின் வரலாற்றைக் கூறும் இந்நூல் சீறாப்புராணம் எனப்பட்டது.

சீறாப்புராணம் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், கிசிறத்துக் காண்டம் ஆகிய மூன்று காண்டங்களையும், 92 படலங்களையும், 5027 பாடல்களையும் கொண்டதாகும். காண்டம் என்பது ஒரு காப்பியத்தின் பெரும் பிரிவு. படலம் என்பது காண்டத்தின் உட்பிரிவு ஆகும்.