15. யாப்பு

யாப்பு

பாடம்
Lesson


யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை :

  1. எழுத்து
  2. அசை
  3. சீர்
  4. தளை
  5. அடி
  6. தொடை

என்பனவாம்.

இந்த உறுப்புகளால் அமைக்கப் பெற்ற பாக்கள் நான்கு வகைப்படும். அவை :

  1. வெண்பா
  2. ஆசிரியப்பா
  3. கலிப்பா
  4. வஞ்சிப்பா

நான்கு வகைப் பாக்களுக்கும் எடுத்துக் காட்டுகள் :

வெண்பா

சான்று :

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய

உருப்பளிங்கு போல்வாளென் உள்ளத்தின் உள்ளே

இருப்பளிங்கு வாராது இடர்.

(இருப்பளிங்கு = இருப்பள் + இங்கு)

- (கம்பர்)

ஆசிரியப்பா

சான்று :

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே ;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே ;

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே !

(கடன் - கடமை)

- (புறநானூறு)

கலிப்பா (கலிவிருத்தம்)

சான்று :

வைய மீன்றதொன் மக்க ளுளத்தினைக்

கையி னாலுரை கால மிரிந்திடப்

பைய நாவைய சைத்த பழந்தமிழ்

ஐயை தாடலை கொண்டு பணிகுவாம்.

(தாள் +தலை)

- மொழி வாழ்த்து

வஞ்சிப்பா

சான்று :

மந்தாநிலம் வந்தசைப்ப

வெண்சாமரை புடைபெயர்தரச்

செந்தாமரை நாள்மலர்மிசை

எனவாங்க

இனிதின் ஒதுங்கிய இறைவனை

மனமொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே.

- திருப்பாமாலை.