xxiv
பிள்ளை அவர்கள் எழுதினார்கள். திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார்
அவர்களும் அளப்பருங் கடற்பெயர் உடையவர் அமிதசாகரனாரே
என்பதைச் செந்தமிழ் கட்டுரை வழியால் நிறுவிக் காட்டியதுடன் தாம்
திருத்தஞ் செய்து வெளியிட்ட காரிகைப் பதிப்பிலும் (கழகப் பதிப்பு)
‘அமித சாகரனார் இயற்றிய யாப்பருங் கலக் காரிகை’ என்றே
குறிப்பிட்டுள்ளார்கள்.
அமிதசாகரர் என்னும் பெயர் ஏடு எழுதியோர் பதிப்பித்தோர்
ஆகியவர்களால் அமிர்தசாகரர், அமுதசாகரர் எனக் குறிக்கப் பெற்றாலும்,
அமிதசாகரர் என்னும் உண்மைப் பெயர் வழக்கும் அறவே மறைந்து போய்
விடவில்லை என்பது கல்வெட்டு ஒன்றால் வெளியிடப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் மாயூரத்தை அடுத்துள்ள நீடூர் சிவன் கோயில்
தெற்குத் திருமதிலில் இரண்டு பாடல்கள் பொறிக்கப் பெற்றுள்ளன.
அவற்றுள் ஒன்று அமுதசாகரர் என்றும், மற்றொன்று அமிதசாகரர் என்றும்
குறிக்கின்றன. அமிதசாகரர் வரலாற்றை அறிவதற்கு அப்பாடல்கள் துணை
நிற்பதால் அவற்றைக் காண்போம்.
|