உரைகள்:
யாப்பருங்கலத்திற்குப் பேருரையும், யாப்பருங்கலக் காரிகைக்குச்
சிற்றுரையும் எழுந்துள. யாப்பருங்கலம் உரைச்சிறப்பால், ‘யாப்பருங்கல
விருத்தி’ எனப் பெறுவதே அதன் பேருரை மாண்பை வெளிப்படப்
புலப்படுத்த வல்லதாம். யாப்பு இலக்கணத்திற்கென அமைந்த ஒரு கலைக்
களஞ்சியம் யாப்பருங்கல விருத்தி என்பது புனைந்துரை அன்று. தமிழ்
இலக்கணப் பரப்பை - குறிப்பாக யாப்பிலக்கணப் பரப்பை, - யாப்பிலக்கண
நூற்பரப்பை - வெள்ளிடை மலையெனக் காட்ட வல்லது யாப்பருங்கல
விருத்தியேயாம்.
யாப்பருங்கலம் தோன்றிய காலத்திற்கு அணித்தாகவே தோன்றியது
விருத்தியுரை. அதற்குத் தக்க சான்று இல்லாமல் போய்விடவில்லை.
தண்டியலங்கார மேற்கோள்களில் அபயன், அநபாயன் எனப் பெயர்
வழங்கிய முதற் குலோத்துங்கனைப் பற்றிய பாடல்கள் பல உள.
குலோத்துங்கன் பாடு புகழால் பக்கமெல்லாம் பரவியவன். அவனைப் பற்றிய
பாடல்களுள் எதுவும் யாப்பருங்கல விருத்தியிலோ, யாப்பருங்கலக்காரிகை
உரையிலோ இடம் பெற்றிலது. இதனால் இவ்வேந்தன் காலத்திற்கு
முற்பட்டே இவ்வுரைகள் தோன்றிவிட்டன என்று கோடல் தகும். ஆதலால்,
நூல்கள் தோன்றிய அணிமைக் காலத்திலேயே அவற்றின் உரைகளும்
தோன்றிவிட்டன என்க.
122 ஆம் காரிகைக்கு மேலே வரும் உதாரணச் செய்யுள்கள் அனைத்தும்
உரையாசிரியரால் செய்யப் பெற்றவையே. ஒவ்வொரு செய்யுளின் பின்னும், ‘உரைச் சூத்திரம்’ எனத் தவறாது குறிக்கப் பெற்றிருத்தல் அறிக.
|