இதற்குப்பின்பு கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் அணியிலக்கணத்தைத் தனியே எடுத்து விளக்க வந்த நூலே இத்தண்டியலங்காரம் ஆகும். இதற்குப் பின்பு அணியிலக்கணத்தை மட்டும் எடுத்து விதந்த நூல்கள் மாறனலங்காரமும், சந்திராலோகமும், குவலயானந்தமும் ஆகும்.
3. அணியிலக்கணத்தின் தோற்றமும், வளர்ச்சியும்:
ஒரு செய்யுளில் உள்ள அழகையும் நயத்தையும் எடுத்துக் கூறுவது அணியிலக்கணமாகும். இவ்வருமையை எல்லா மொழிகளிலும் காணலாம். எனினும் இங்ஙனம் பாகுபடுத்திக் கூறுதற்காக எழுந்த இலக்கண நூல்கள் வடமொழியிலேயே மிகப்பலவாகவுள்ளன. வாமனகாரிகை, பாமஹ சூத்திரம், காவ்யதர்சம், ஸரஸ்வதீ கண்டாபரணம், சிங்கார திலகம், காவ்யப் பிரகாசம், அலங்கார ஸர்வஸ்வம், ரஸதரங்கிணி, ரஸமஞ்சரி, தொனி, லோசனம், சாகித்ய சூடாமணி, சாகித்ய தர்ப்பணம், சாகித்ய ரத்நாகரம், சமற்கார சந்திரிகை, பிரதாபருத்ரியம், சந்திராலோகம், குவலயானந்தம், சித்ர மீமாம்சை, அலங்கார கவுஸ்துபம், ரஸகங்காதரம், ஏகாவலி, காவ்ய தர்ப்பணம் என்பன அவற்றுள் குறிப்பிடத் தக்கன.
எனினும், தமிழ் மொழியில் இதுபற்றி எழுந்த நூல்கள் மிகச் சிலவே. தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம், சந்திராலோகம் வீரசோழியம், இலக்கணவிளக்கம், தொன்னூல், முத்துவீரியம், என்ற எட்டு நூல்களே உள்ளன. இவற்றுள்ளும் முன்னைய நான்குமே அணியிலக்கணத்தைத் தனித்தனியே எடுத்து விதப்பன. அவையும் மொழிபெயர்ப்பாக அமைந்தவையே. பின்னைய நான்கும் அணியிலக்கணத்தை ஒரு பகுதியாகக்கொண்டு கூறுவன. இனி இவற்றிற்கெல்லாம் முதனூலாகவுள்ள தொல்காப்பியத்தை நோக்குழி, அதன்கண் உள்ள உவமவியல் நினைவிற்கு வரும். தொல்காப்பியர் கூறிய உவமை அணியிலிருந்தே மற்ற அணிகள் எல்லாம் தோன்றின என்றும், எனவே அணியிலக்கணத்தை முதன் முதல் கூறிய நூல் தொல்காப்பியமே என்றும் கூறுவர் சிலர். வடமொழியில் சித்திர மீமாம்சை என்னும் நூலை இயற்றிய அப்பைய தீட்சதரும் இக்கருத்தினராயுள்ளார். இந்தக் கண்ணோட்டத்துடன் தண்டியலங்காரத்தையும், தொல்காப்பிய உவமவியலையும் ஒத்து நோக்குவோம்.

 

தொல்காப்பிய உவமவியல் தண்டியலங்காரம்
1. 'வினை, பயன், மெய், உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத்தோற்றம் '. தொல்காப்பியர் மெய் உரு என்று கூறியவற்றை இவ்வாசிரியர் பண்பில் அடக்கிப் 'பண்பும் தொழிலும் பயனும் ' என்றார்.