ஆராய்ச்சி முன்னுரை
1. முன்னுரை :
மொழி பயிர்கள் போன்றது. இலக்கணம் வேலி போன்றது. வேலி பயிர்கள் அழியாதவாறு காக்குமேயன்றி அவற்றை அழித்துவிடுவதில்லை. அதைப்போன்றே இலக்கணமும் மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் நின்று, அதன் வளர்ச்சிக்குப் பயன்படுமேயன்றி அதனை அழித்துவிடாது. இவ்விலக்கணங்கள் மொழிக்குப் பாதுகாப்பு மட்டுமன்றி அதற்குப் பெருமையும் தரவல்லனவாம்.  
2. ஐந்திலக்கணப் பாகுபாடு :
தமிழ் மொழியில் இன்றைக்குத் தொன்மையாகவுள்ள இலக்கணம் தொல்காப்பியாகும். இது எழுத்துச் சொல் பொருள் என்ற மூன்று பாகுபாட்டை யுடையது. செய்யுளியல் யாப்புப் பற்றியதாயினும், அதனைத் தனித்துக் கூறாது ஆசிரியர் பொருளதிகாரத்தின்பாற் படுத்தியே கூறியுள்ளார். இதற்கு முன்னுள்ள உவம இயலை அணி இலக்கணம் கூறுவதாகச் சேனாவரையர் முதலியோர் கூறுவர். சேனாவரையர் கூற்றின்படி உவம இயலை அணியிலக்கணம் கூறுவதாகக் கொள்ளினும்கூட, அதனை வேறாகப் பிரித்துக் கூறாது பொருளதிகாரத்தின்பாற் படுத்தியே ஆசிரியர் கூறியுள்ளதால், தமிழிலக்கண ஆசிரியர்கள் எழுத்துச் சொல் பொருள் என்ற மூவகைப் பாகுபாடுகளையே கொண்டிருந்தனர் என்பது துணியப்படும். இங்ஙனம் மூவகையாகக் கொள்ளப்பட்ட இலக்கணநெறி இறையனார் களவியல் காலத்திற்கு முன்புதான், பொருளில் அடக்கிக் கூறப்பட்ட யாப்பு வேறாக பிரிந்திருக்க வேண்டும் என அவ்வுரையால் தெரிகிறது. பின் பொருளிலக்கணத்திலுள்ள அகப்பொருள் இலக்கணத்தை மட்டும் எடுத்துத் தனிநூலாக நாற்கவிராச நம்பி என்பாரும், புறப்பொருள் இலக்கணத்தை மட்டும் எடுத்துச் சாமுண்டி தேவர் என்பாரும், செய்யுள் இலக்கணத்தை மட்டும் எடுத்து அமிதசாகரர் என்பாரும் முறையே நம்பியகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலக் காரிகை என்ற பெயரால் நூல்களை யாத்தனர். கி. பி. 11ஆம் நூற்றாண்டில் புத்தமித்திரர் என்பார் எழுத்துச் சொல் பொருள் யாப்புடன் அணியிலக்கணத்தையும் வேறாக அமைத்து வீரசோழியம் என்ற பெயரால் ஐந்திலக்கணங்ளையும் ஒருங்கு சேர்த்துக் கூறுவாராயினர். இதற்குப் பின்பு தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், இலக்கண விளக்கம் என்பன ஐந்திலக்கணங்களையும் ஒருங்குகூற முற்படினும், இவற்றிற்கெல்லாம் முன்தோன்றியதாய் விளங்குவது வீரசோழியமேயாகும்.