அயலிடங்களிலிருந்து வேண்டிய நூல்களை வருவித்தளித்தும்
பலவருடங்களாக
உபகரித்துவரும் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரவர்களும் அருங்கலைவிநோதர்களுமான
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகரவர்களுடைய அருமை பெருமைகளும் பாஷாபிமானமும்
எப்போதும் என்
உள்ளத்தே குடி கொண்டிருக்கின்றன.
மூலம், உரை, மேற்கோள் முதலியவற்றிற் காணப்பட்ட பிரதிபேதங்களை உரிய
இடங்களில்
அமைத்தும் மேற்கோள்களுள் விளங்கியவற்றைப் புலப்படுத்தியும்,
பத்துப்பாட்டு,
சீவகசிந்தாமணி போன்ற உரைபெற்ற நூல்களிலிருந்து இவ்வுரையாசிரியர்
எடுத்துக்காட்டிய
மேற்கோள்களுட் சிலசில பகுதிகள் அவ்வுரைக்கருத்துக்கு
வேறுபட்டிருந்தும் பண்டைக்காலத்து
வழங்கிய பாடத்தைத் தெரிவித்தற்பொருட்டு
உள்ளவாறே காட்டியும் பதிப்பிக்கலானேன்.
சில சூத்திரங்களின் பாடங்கள் இக்காலத்து வழங்குகிற பாடங்களுக்கு வேறாகத்
தோற்றும்;
அவை இவ்வுரைக்கு ஏற்பப் பழைய பிரதிகளிற் காணப்பட்டனவென்று கொள்க.
அவற்றுட்
சில மிகவும் நயமானவை.
உரையிற் சில வாக்கியங்களும் சில மேற்கோள்களும் சந்தேகத்திற்கு இடமாக
இருந்தும் பிரதிகளின் சிதைவு, வேறுபாடு முதலியவற்றால் உரையாசிரியருடைய கருத்து
விளங்காததுபற்றி அவற்றைத் திருத்திப் பதிப்பித்தற்கு என்மனம் துணியவில்லை;
ஆனாலும் நாளடைவில் அவற்றின் உண்மை விளங்கலாம்.
சில சொற்கள் பிரதிகளிற் பலவாறாகக் காணப்பட்டமையாலும் பிழையென்று
தோற்றாமையாலும்
அவை இருந்தவாறே காட்டப்பெற்றன; அவற்றுட் சில வருமாறு:-
அவிநயம், அவினயம், அவினையம்; புறநடை, புறனடை; குருசில், குரிசில்; பருதி,
பரிதி. பழைய பிரதிகள் சிலவற்றில் உயிரும் உயிர்மெய்யுமாகிய ஈகார ஏகார
ஐகாரங்களின்பின்
யகரம் எழுதப்பெற்றும் இப்போது வழங்குகிற எகரம் மேல்விலங்கு
பெற்றும் காணப்பட்டன.
இந்நூலில், ‘‘எய்து மெகர மொகரமெய் புள்ளி’’ (சூ. 97)
என்றதற்கு ஏற்ப உயிரும்
உயிர்மெய்யுமாகிய எகர ஒகரங்கள் புள்ளியுடன் சில பிரதிகளில்
வரையப்பெற்றிருந்தன;
உயிர் எகர ஒகரங்கள் பண்டைக்காலத்துப் புள்ளிபெற்று
வழங்கியதை ‘‘நேரிழையார்
கூந்தலினோர் புள்ளிபெற |