நூல் விளக்கம்

எழுத்தியல்

தெய்வ வணக்கமும், எழுத்து இயம்புவன் என்பதும்
                                                                         1

எண், பெயர், முறை, பிறப்பு, உரு, அளவு, முதனிலை, ஈற்றுநிலை, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு என்ற எழுத்தின் பன்னிரண்டு பகுதிகள்.
                                                                         2

எழுத்து நாதத்தின் காரியமாய்ச் சொல்லுக்குக் காரணமாய் இருக்கும் என்பதும், அது முதல் சார்பு என இரு வகைப்படும் என்பதும்.
                                                                         3

முதலெழுத்து உயிரும் மெய்யும் என்பதும், உயிர் பன்னிரண்டு மெய் பதினெட்டு என்பதும்.
                                                                         4

சார்பெழுத்துக் குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் உயிர்மெய் உயிரளபெடை ஒற்றளபெடை ஐகாரக்குறுக்கம் ஒளகாரக்குறுக்கம் மகரக்குறுக்கம் என்ற ஒன்பது என்பதும், உயிர்மெய் 216 உயிரளபெடை 7 ஒற்றளபெடை 11 ஏனைய ஒன்றொன்று என்பதும்.
                                                                         5

உயிர் பன்னிரண்டு இவை என்பதும், குறில் அ இ உ எ ஒ என்ற ஐந்து என்பதும், நெடில் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்ற ஏழு என்பதும், அ இ உ என்ற மூவெழுத்து மொழி முதற்கண் சுட்டுப் பொருள் தந்துவரின் சுட்டு என்பதும், எ யா இரண்டும் மொழிக்கு முதலிலும் ஆ ஓ இரண்டும் மொழிக்கு ஈற்றிலும் ஏ மொழிக்கு முதலிலும் ஈற்றிலும் வினாப் பொருள் தந்துவரின் வினா என்பதும்.
                                                                         6