488

இலக்கண விளக்கம் -பொருளதிகாரம்

35.  கேசாதி பாதம் :

கலி வெண்பாவால் முடி முதல் அடி அளவும் கூறுவது.

36.  கைக்கிளை :

ஒருதலைக் காமத்தினை ஐந்து விருத்தத்தால் கூறுவது, அன்றி.
வெண்பா முப்பத்திரண்டு செய்யுளால் கூறுவதும் ஆம்.

37.  கையறு நிலை :

கணவனொடு மனைவி கழிந்துழி அவர்கட்பட்ட அழிவுப் பொருள்
எல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம் இறந்து படாது ஒழிந்த ஆயத்தாரும்பரிசில் பெறும் விறலியரும் தனிப்படர் உழந்த செயலறு நிலையைக் கூறுவது. 

38.  சதகம் :

அகப்பொருள் ஒன்றன் மேலாதல், புறப்பொருள் ஒன்றன் மேலாதல்
 கற்பித்து நூறு செய்யுள் கூறுவது.

39.  சாதகம் :

திதிநிலை, வாரநிலை, நாள்மீன்நிலை, யோகநிலை, கரணநிலை,
ஓரைநிலை, கிரகநிலை, இவ்வேழ்வகை உறுப்புக்கள் நிலையையும் சோதிட
நூலால் நன்குஉணர்ந்து அவற்றை அமைத்து அவற்றால் தலைவற்கு உறுவன கூறுவது. மற்றும் யுகாதியாண்டு முதலியனவும் கொள்க. 

40.  சின்னப்பூ :

நேரிசை வெண்பாவால் அரசனது சின்னமாகிய தசாங்கத்தினைச்
சிறப்பித்து விரித்துநூறு, தொண்ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது என்னும்எண்படக் கூறுவது.