ii

சுவாமிநாதம் பற்றி வேறு யாரும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. அறிஞர் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் இலக்கியமணிமாலை என்ற நூலில் (முதல் பதிப்பு 1954, இரண்டாம் பதிப்பு, 1957) சுவாமிநாதத்திற்கு விருத்தி உரை உள்ளது (பக். 219, 1957) என்ற செய்தியைத் தெரிவித்து சுவாமிநாதம் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெளிவாக்கியுள்ளார்.

சோம. இளவரசு அவர்கள் தமது இலக்கணவரலாற்றில் (1963:219-21) மேலே குறிப்பிட்ட இரண்டு குறிப்புக்களைத் தழுவி சுவாமிநாதத்தின் வரலாற்றை விளக்கியுள்ளார்.

பொருள் அடிப்படையில் இலக்கணச் செய்திகளைத் தொகுக்கும் பணியை மேற்கொண்ட ச. வே. சுப்பிரமணியன் அவர்கள் இலக்கணத்தொகை (எழுத்து) என்ற நூலில் தமிழ்ப் பொழிலில் வந்துள்ள பகுதியைப் பிற்சேர்க்கையாகத் (பக். 309-324) தந்துள்ளார்.

இந்நிலையில் 1972-73 கல்வியாண்டு உயர்நிலை ஆய்வுக்காக இங்கிலாந்து - ரெடிங் பல்கலைக்கழகம் சென்றிருந்த பொழுது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பொருட்காட்சி (British Museum) யில் சுவாமிநாத மூலம் முழுமையும் காகிதத்தில் எழுதப்பெற்ற பிரதி ஒன்று இருப்பது தெரிய வந்தது. பிரிட்டிஷ் பொருட்காட்சி நிர்வாகத்திடமிருந்து சுவாமிநாதத்தின் புகைப்பட பிரதி (Photostat copy) பெற்று வந்தேன். இது சுவாமிநாதத்திற்குக் கிடைத்த முதல்முழுப் பிரதி. இதற்கு உரையெழுதி வெளியிடலாம் என்று முயற்சி மேற்கொண்டபோது ச. வே. சுப்பிரமணியன் அவர்கள் கேரளப் பல்கலைக்கழக கீழைக்கலை ஏட்டுப்பிரதி நூல் நிலையத்தில் (oriental manuscript library) சுவாமிநாத விருத்தி உரை இருப்பதாகத் தெரிவித்ததோடு கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை ஆராய்ச்சி மாணவரான க. இராசேந்திரன்