xi

முதல்நூல், வழிநூல், புடைநூல் என்ற பாகுபாட்டின் நுட்பம் புலனாகும். வரலாற்று நிலையில் நூலை மதிப்பிடும் முறையாக நூலின் வகையைக் கொள்ள வேண்டும்.

இறைவன் சொன்னது முதனூல் என்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மூலநூல் (Original work) என்று கொள்ளலாம். தமிழ் இலக்கணங்களுள் தொல்காப்பியத்தை முதனூல் என்று கூறலாம். தமிழில் முதல் இலக்கண நூல் என்ற காரணத்தால் மட்டுமன்றி இலக்கண அமைப்பிலும் மொழியாராய்ச்சி முறையிலும் ஏனைய நூல்கள் பிற்பட்டே நிற்கின்ற காரணத்தாலும் தொல்காப்பியத்திற்கு முதனூல் தகுதி தரப்பெறுதல் வேண்டும்.

ஒப்பிலக்கண ஆராய்ச்சியில் பொதுவாகவும் திராவிட மொழி ஒப்பிலக்கண ஆராய்ச்சியில் சிறப்பாகவும் கால்டுவெல் ஐயர் எழுதிய A comparative grammer of the Dravidian or South Indian family of languages என்பது முதனூலாகக் கருதப்படுகிறது.

முதனூல் என்பதைத் தனிநிலையில் கொள்வது ஒரு முறை; ஒப்பு நிலையில் கொள்வது மற்றொரு முறை.

நன்னூல் ஒரு வழி நூலே. ஆயினும் இலக்கண விளக்கம், சுவாமிநாதம் ஆகிய பிற இலக்கண நூல்களை நோக்க ஒப்பு நிலையில் முதனூல் என்று கூறுவதில் தவறில்லை. நூலை இவ்வாறு வேறுப்படுத்திப் பார்ப்பது ஆராய்ச்சியில் நடைபெறும் திருப்பு முனைகளைக்காட்ட உதவும்.

எழுவகை மதமும் முப்பத்திரண்டு உத்தியும் நூல் எழுதுவோன் கைக்கொள்ள வேண்டிய நெறிமுறைகளையும் நூலை ஆராய்வோர் நூலை வரலாற்று நிலையில் வைத்து ஆராயும் சில வகைகளையும் சுட்டிக் காட்டுவதாகக் கொள்ளலாம். உத்திகளில் சில பொது நிலையிலும் விளக்கப்பட்டுள்ளன.