தேவையான இடங்களிலெல்லாம் தொல்காப்பியம் முதலிய நூற் செய்திகளோடு வீரசோழியம், பிரயோகவிவேகம் முதலிய நூற் செய்திகளும் குறிப்பிடப்படல் வேண்டும். பிற்சேர்க்கையாக எடுத்துக்காட்டுப் பாடல்கள், நூற்பாக்கள் சொல், சொற்றொடர்கள், இந்நூலின் இலக்கணச் செய்தி முதலியவற்றின் அகரவரிசை இடம் பெறல் வேண்டும்’’ என்று குறிப்பிட்டுத் தஞ்சை சரசுவதிமகால் கௌரவ காரியதரிசி முதுபெரும் புலவர் திருவாளர் நீ. கந்தசாமிப்பிள்ளை அவர்கள் எனக்கு ஆணையிட்டாராக. அவ்வாணையைப் பின்பற்றி அவர் குறிப்பிட்ட வகையில் இந்நூலைப் பதிப்பித்துள்ளேன். இந்நூலைப் பதிப்பித்தற்கண் எனக்குப் பல்லாற்றானும் உதவிய என் இளவல் வித்துவான். கங்காதரன், M.A., உள்ளிட்ட என் உடன் பிறந்தார்களுக்கும், இந்நூலை விரைவில் செம்மையாக அச்சிட்டளித்த சீர்காழி ஸ்ரீ சரவணா அச்சகத்தாருக்கும் என் ஆசியையும் நன்றியையும் முறையே தெரிவித்துப் பற்பல இடையூறுகளுக்கிடையே இந்நூலை யான் பதிப்பிக்கும் வாய்ப்பினைத் தோன்றாத் துணையாய் எனக்கு அருளிய ஐயாறன் அடியிணை இறைஞ்சி, என் அயர்வான் ஏற்பட்டிருக்கக்கூடிய பிழைகளைப் பொருத்தருளுமாறு தமிழ்கூறு நல்லுலகத்தை வேண்டி என் தமிழ்ப் பணியினைத் தொடர்கின்றேன். தி. வே. கோபாலையர், 46, மேல மடவளாகம் திருவையாறு. | |