‘‘நெடுமையுந் தீர்க்கமு நெட்டுயி ராகும்’’ (11)

‘‘ஊமையு மொற்று முடலெனப் படுமே’’ (13)

‘‘வன்மைவன் கணம்வலி வல்லெழுத் தாகும்’’ (15)

‘‘மென்மைமென் கணமெலி மெல்லெழுத் தாகும்’’ (17)

‘‘இடைமை யிடைக்கண மிடையிடை யெழுத்தே’’ (19)

‘‘புல்லல் சார்தல் புணர்தல் சார்பெனலே’’ (23)

‘‘அஃகேனந் தனிநிலை யாய்த மாகும்’’ (28)

‘‘காட்டல் குறித்தல்சுட் டாங்கரு திடினே’’ (29)

‘‘வினவல் கடாவல் வினவெனப் படுமே’’ (30)

‘‘அளபும் புலுதமு மளபெடைப் பெயரே’’ (33)

‘‘சங்கம் புணர்ச்சி சையோக மயக்கம் புல்லல் கலத்தலும் பொருளொன் றேயாம்’’ (44)
 

தமிழ்ப் பெயர்களுக்கு மறு பெயர்களாக வடமொழிப் பெயர் கூறியிருப்பது அக்காலப் போக்கைக் காட்டுகிறது.

மொழியியல்: இவ்வியலில் ஓரெழுத்தொரு மொழியாகும் எழுத்துக்களைக் கூறிப் பின் மொழியின் வகைகளைக் கூறி அதன் பின் வடமொழி ஆக்கமே மிகுதியும் கூறியுள்ளார். பதவியல் என்னாது மொழியியல் எனப்பெயர் கொடுத்தனரேனும் வடமொழிச் சொற்கள் தமிழில் வருங்கால் எவ்வெத்திரிபு பெற்றுவரும் என்பதையே விரிவாகக் கூறியுள்ளார். மொழியைத் தனிமொழி, இணைமொழி, துணைமொழி, பொதுமொழி, தணமொழி, கணமொழி, கலப்புறுமொழி என எழுவகைப் படுத்துவார் கூற்றைப் பிறன்கோட் கூறலாகக் கூறியிருப்பதும், சொற்களைச் சங்கதம், பாகதம், சநுக்கிரகம், அவப்பிரபஞ்சனம் எனப் பாகுபாடு செய்திருப்பதும், சந்தியைத் தீர்க்கசந்தி, குணசந்தி, விருத்திசந்தி எனப் பாகுபாடு செய்து விரித்துரைத்திருப்பதும் இவ்வியலில் இவர் கூறும் புதிய செய்திகளாகும். தமிழிலக்கணம் கூறுவார் வடமொழி ஆக்கம் பற்றி இத்துணை அளவு விரித்துரைத் திருப்பது வேண்டாததொன்றே யாகும். நன்னூலார் காலத்தில் தொடங்கிய இந்நிலை வரவர வளர்ந்து விட்டது.

புணரியல்: இவ்வியல் தொல்காப்பியத்திலுள்ள தொகைமரபு, புணரியல், உருபியல், உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியல் ஆகிய இயல்களின் கருத்துக்களைப் பெரும்பான்மையும் தழுவியதாகும். சாரியைகளுள் ‘மான்’ என்னுஞ் சாரியையை இவர் புதிதாகக் கொண்டுள்ளார்.