‘‘னகர மொற்றும் ஆவு மாவும்’’

‘‘ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை’’
 

என்ற நூற்பாக்களால் ஆ, மா என்பன ஆன், மான் என னகர ஒற்றையும், கோ என்பது ஒன் சாரியையும் பெறுமெனத் தொல்காப்பியர் கூறினர். நன்னூலார்.
 
  ‘ஆமா கோனவ் வணையவும் பெறுமே’’
 
என்றனர். இவ்வாசிரியரோ இவர்களின் வேறாக-
 
  ‘‘அவற்றுள்
ஆமாகோ இன்ன டையவும் பெறுமே’’ (175)
 
எனக் கூறுகின்றார். இங்ஙனமே கோ, மா என்ற சொற்களின் முன் உயிர் வரின் வகரமேயன்றி யகரமும் உடம்படு மெய்யாய் வரும் என இவர் கூறியிருப்பது புதியதும் தேவையானதும் ஆகும்.
 
  ‘‘கோமா முன்வரின் யகரமும் குதிக்கும்’’ (184)
 

என்பது அந்நூற்பாவாகும்.

சொல்லதிகாரம்: இது பெயரியல், வினையியல், ஒழிபியல் என மூன்று பிரிவுகளை உடையது.

பெயரியல்: இவ்வியல் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திலுள்ள பெயரியல், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு ஆகிய நான்கியல்களில் கூறப்படும் கருத்துக்களைப் பெரிதும் தழுவியுள்ளது. சொல்லைப் பொருள் உணர்த்தும் வகையில் ஒருமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மூவகையாகப் பாகுபாடு செய்திருப்பதும். உயர்திணை ஆண்பாற்குரிய சிறப்புப் பெயர்களையும் பெண்பாற்குரிய சிறப்புப் பெயர்களையும் விதந்து கூறியிருப்பதும், ஆறாம் வேற்றுமையை விரித்துரைத்திருப்பதும் நன்னூலைத் தழுவியதாகும்.

வினையியல்: 622, 628, 632, 634 ஆகிய நூற்பாக்கள் நன்னூல் நூற்பாக்களையே கொண்டெடுத்து மொழிவதாயிருப்பினும் ஏனைய கருத்துக்களைக் கூறும் அமைப்புக்களிலெல்லாம் தொல்காப்பியத்தையே இவ்வியல் தழுவியுள்ளது. தொல்காப்பியர் வியங்கோள், தன்மை முன்னிலைக்கண் வாராதென்பர். நன்னூலார் ‘‘இயலும் இடம்பால் எங்கும்’’ என்பர். இவ்வாசிரியர் தொல்காப்பியர் கூற்றிலேயே உறுதிப்பாடு உடையவராய்.