‘‘அவற்றுள்
தன்மை முன்னிலையொடு வாரா வியங்கோள்’’
 

எனக் கூறியிருப்பது இதற்கரணாகும்.

ஒழிபியல்:இவ்வியல் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திலுள்ள இடையியல், உரியியல், எச்சவியல், கிளவியாக்கம் ஆகிய இயல்களிலுள்ள கருத்துக்களைத் தன்னகத்துக் கொண்டதாகும். இடைச்சொல் பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலுவதல்லது தமக்கெனப் பொருளுடையனவல்ல ஆதலானும், உரிச்சொற்கள் பெயர்வினை போன்றும் அவற்றிற்கு முதனிலையாயும் வருதலானும் அச்சிறப்பின்மை கருதி இவற்றை இவ்வியலில் அடக்கினர் போலும்.

பொருளதிகாரம்: இஃது அகவொழுக்கவியல், களவொழுக்கவியல், கற்பொழுக்கவியல் என மூன்று பிரிவுகளை உடையது.

அகவொழுக்கவியல்: இவ்வியலில் கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்பவற்றினியல்பும், ஐந்திணைக்குரிய முதல் கருவுரிப் பொருள்களும், அகத்திணைக்குப் புறனாகிய வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்பவற்றினியல்பும் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் சிறுபொழுது ஐந்தெனக் கூறியிருப்பதும், ஐவகை நிலத்திற்குரிய கருப்பொருள்களை விரித்துரைத்திருப்பதும் நம்பியகப் பொருளைத் தழுவியதாகும். அறுவகைப் பெரும்பொழுது, ஐவகைச் சிறுபொழுது ஆகிய காலங்களில் நிகழும் இயற்கை நிகழ்ச்சிகளை விரித்துரைத்திருப்பது நம்பியகப் பொருளில் காணப்படாத தொன்றாகும். ஐந்திலக்கணங்களையும் ஒக்க ஆராயும் இலக்கண நூல்களில் புறத்திணைபற்றி விரித்துரைத்திருப்பது தொல்காப்பியமும் இலக்கண விளக்கமுமே யாகும். வீர சோழியும், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் ஆகிய இம்மூன்று நூல்களிலும் புறத்திணை பற்றிய விரிவான செய்திகள் இல்லை. இந்நூலில் புறத்திணை எட்டென வகுத்தவர்,
 

  “வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேற் செல்லுதல் வஞ்சியாம்-உட்காது
எதிரூன்றல் காஞ்சி எயில்காத்த னொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை-யதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்தி னொன்னார்
செருவென் றதுவாகை யாம்’’
 

என்பதைத் தழுவி எட்டு நூற்பாக்கள் அமைத்துள்ளனரேயன்றி வேறு துறைகளோ வேறு
விளக்கமோ கூறினாரல்லர்.