இந்நிலையேன்?: பொதுவாகவே போர்த்திறன் பற்றிய இலக்கிய நூல்களோ போர்முறை பற்றிய இலக்கண நூல்களோ சங்க காலத்தில் எழுந்த அளவிற்குப் பிற்காலத்தில் எழவில்லை. புறப்பொருள் வெண்பா மாலையும், தொல்காப்பியப் புறத்திணை இயலையும் புறப்பொருள் வெண்பா மாலையையும் தழுவியெழுந்த இலக்கண விளக்கப் புறத்திணையியலுமே சங்க காலத்திற்குப் பின் எழுந்தனவாய்ப் புறப்பொருள் இலக்கணம் பற்றி அறிதற்கு ஏற்புடையனவாயுள்ளன. சங்க கால வாழ்வியலில் நாட்டையும் தன்னையும் காத்துக்கொள்ளும் பொறுப்புத் தனி மனிதன் ஒவ்வொருவன் உள்ளத்திலும் வேரூன்றி வளர்ந்திருந்தது. அத்தகைய உணர்வு தேவையாயும் இருந்தது. ஆதலால் தான்
 
 

1 ‘‘வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’’

2‘‘ஈன்ற வயிறோ விதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே’’

3‘‘கெடுக சிந்தை கடிதிவ டுணிவே
மூதின் மகளி ராத றகுமே
மேனா ளுற்ற செருவிற் கிவடன்னை
யானை யெறிந்து களத்தொழிந் தனனே
நெருந லுற்ற செருவிற் கிவள்கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்
பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி
ஒருமக னல்ல தில்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே’’
 

என்பன போன்ற பாடல்கள் எழுந்தன. காலப்போக்கில் நாட்டைக் காக்கும் பொறுப்பு அவ்வக் காலத்தில் காவற்சாகாடுகைக்கும் அரசற்கே உரியதாயது. காவலனும் அவனுக்கிருக்கும் படைகளுமே அதனைச் செய்யும் பொறுப்பை ஏற்றனர். ஆதலால்தான் போர்முறை பற்றிய இலக்கணங்களும் நெகிழலாயின. இதுமட்டுமன்று. இறையனார் களவியலுரையில், பொருளதிகாரம் வல்லாரைக் காணாது கவன்றுகொண்டிருந்த அரசனுக்கு இறையனார் ‘‘அன்பினைந்திணை’’ என்று தொடங்கும்

----------------------------------
1. புறம். 312. 2. புறம் 84. 3. புறம் 279.