அறுபது சூத்திரங்களையும் செய்தருளியதாக
ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. இதனை
நோக்குழி அகப்பொருள் இலக்கணமே பொருளதிகாரத்துள்
சிறப்பித்துப் பேசப்படும்
பெருமையும் வாய்ப்பும் அக்காலத்துப் பயின்றிருந்தது என
நினையவும் இடந்தருகின்றது.
புறத்திணை அகத்திணைக்குப்
புறனாம் என்று கூறிய வகையில் தொல்காப்பியரோடு
ஒத்தும் எண்வகைத் திணைகளை விளக்குங்கால்
புறப்பொருள் வெண்பாமாலையை ஒத்தும்
புறப்பொருள் பற்றிய இலக்கணத்தை அமைத்துள்ளார்
இவ்வாசிரியர்.
களவொழுக்கவியல், கற்பொழுக்கவியல்:
இவ்விரு இயல்களும்
திருக்கோவையாருக்குப் பேராசிரியர் எழுதிய உரைச்
சூத்திரங்களைத் தழுவி
அமைந்துள்ளன. திருக்கோவையார் உரைச்சூத்திரங்களில் ஒரே
நூற்பாவாக
இருப்பது
இந்நூலில் இருநூற்பாவாகப் பிரிக்கப்பட்டுள்ளது
(835, 836 காண்க). 834, 838 -
நூற்பாக்கள் திருக்கோவையார் உரைச் சூத்திரத்துள்
உள்ளவாறே உள்ளன. ஏனைய
நூற்பாக்கள் சொல்லளவில் சிற்சில மாற்றம் பெற்றுள்ளன.
|