இதன்கண் பிறிதொரு சிறப்புமுளது. இயற்கைப் புணர்ச்சியை அடுத்து இடந்தலைப்பாடு கூறினர் நம்பியகப்பொருள் ஆசிரியர். ஆனால், திருக்கோவையார், இறையனார் களவியல், இந்நூல் ஆகிய மூன்றிலும் இயற்கைப் புணர்ச்சியை அடுத்துப் பாங்கற் கூட்டமும் அதனையடுத்து இடந்தலைப்பாடும் காணப்படுகின்றது. இதுவே முறையும் மெய்மையும் ஆகும் என்பதை இறையனார் களவியலுரை மிக அழகாக விளக்குகின்றது. ஒருவனுக்கு ஒரு வினை நிகழவேண்டுமேயானால் தன் சுற்றத்தாரையோ நட்டாரையோ முதற்கண் துணைவேண்டுவன். அம்முயற்சிகள் பயன் தாராவாயின் விதிவழி யாகும் என நினைந்து அமைதி கொள்வன். இவ்வாற்றான் இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் பாங்கற் கூட்டத்தையே தலைமகன் விரும்புவன். அஃது இயலாதாயின் தந்த தெய்வம் தருமனெச் சேருவன். இந்நிலையில் பாங்கற் கூட்டத்தை அடுத்து இடந்தலைப்பாடு வைத்தல் பொருத்தமெனக் கருதினர் இம்மூவாசிரியர்களும்.

யாப்பதிகாரம்: இஃது உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்னும் மூன்று பிரிவுகளை உடையது.

உறுப்பியல்: இவ்வியலில் அசை, சீர், தளை, அடி, தொடை பற்றிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது. தளைகளைப் பற்றிக் கூறும் விளக்கம் மிகத் தெளிவாக உள்ளது. 870, 871, 872, 873 ஆகிய நூற்பாக்களைக் காண்க.

செய்யுளியல்: இவ்வியலில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா ஆகிய ஐவகைப் பாக்களின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. வெண்பா வகையினுள் சவலை வெண்பா என்ற ஒன்று கூறப்பட்டுள்ளது. இது யாப்பருங்கலக்காரிகையினுள் காணப்படாததாகும்.
 

  ‘‘இருகுறள் சவலை ஒருவிகற் பாகும்’’ (908)
 

என்பது அந்நூற்பாவாகும். காரிகையுள் கலிப்பாவின் வகையாகக் கூறப்பட்ட கலிவெண்பாவை இவர் வெண்பா வகையுள் அடக்கியுள்ளார். வெண்கலிப்பாவைக் கலிப்பாவின் வகையினுள் அடக்கியுள்ளார். நால்வகைப் பாக்களுக்கும் உரிய ஓசைகளின் வகைகளைக் காரிகையின் உரையாலேயே அறிய முடிகின்றது. இவ்வாசிரியர் அவற்றைச் சூத்திரமாகவே அமைத்துள்ளார். 913, 914, 915, 916, 930, 932, 933, 944, 945, 946, 947, 955, 956, 957, 958 ஆகிய நூற்பாக்களைக் காண்க. காரிகையுள் மருட்பா, புறநிலை, கைக்கிளை, வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ ஆகிய நால்வகைப் பொருள்களிலும்